Tuesday, October 6, 2015

பிரிவைத் துரத்தல்:


வெண்முரசில் வந்தவற்றிலேயே மிகக் குதூகலமான போர் என்றால் அதுஇன்று ஃபால்குனை சும்மா கால் தரையிலேயே படாமல் காத்துல பறந்து பறந்து அம்பு விட்டு நாகர்களைத் துரத்திய இந்தப் போர் தான். இதற்கு முன் வந்த போர்களில் நாம் வெல்லும் தரப்பை எடுத்துக்கொண்டு வாசிக்கும் போதும் போர் என்பதன் பகுதியாக நடக்கும் உயிரழிப்புகளை ஒருவித நடுக்கத்தோடு தான் படித்துக் கொண்டிரப்போம். இப்போர்  எதற்காக என்பது போன்ற தர்க்கங்களும், இம்மானுட வாழ்வின் அர்த்தம் என்ன என்பது போன்ற தத்துவங்களும் நம்மை மாறி மாறி அலைகழிக்கும். எத்தரப்பையும் எடுக்காது வெறும் பார்வையாளனாக மட்டுமே அமைந்த போரான பகன், அஸ்வத்தாமன் போர் இன்று நினைத்தாலும் குலை நடுங்கச் செய்யும். மற்ற போர்களுக்கும் இந்தப் போருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் நமக்கு எதிரி யார் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. எதிரி யார் என்பதைவிட நாம் யார் பக்கம் என்பதை நம் மனம் உறுதியாக முடிவு செய்துவிட்டது. யார் வெற்றிபெறுவார்கள் என்பதும், வெற்றி பெற வேண்டும் என்பதும் முடிவாகிவிட்டது. எஞ்சுவது எவ்வாறு வெற்றி பெறப் போகிறாள் என்ற சாகசம் மட்டுமே.

எப்பேற்பட்ட சாகசம். மிகக் குதூகலமாக, ஒரு அதிநாயகனை ஆராதிக்கும் ரசிகனாக, ஒவ்வொரு அம்பு பட்டு ஒவ்வொரு நாகனாக விழும் போதும் இருக்கையிலிருந்து எம்பிக் குதித்து ஆரவரிக்கும் குழந்தையாக இன்றைய அத்தியாயம் முழுவதையுமே வாசித்தேன். இதிலும் ஆசான் சிலவற்றை வைத்துள்ளார். அதெல்லாம் யாருக்குத் தேவை!! மூங்கில் கழிகளை வில்லாக்கி, தன்னை அம்பாக்கி, மரம் விட்டு மரம் தாவி, பகைவர்களின் குதிரைகளையே ஒரு போலிப் படையாக்கி அவர்களத் துரத்திய சாகசம், அப்பப்பா... அட்டகாசம் போங்கள்! கற்பனை என்றால் இது கற்பனை. பாவம் நமது சாகச, சண்டை வடிவமைப்பாளர்கள். நடக்கச் சாத்தியமான, அதே நேரம் உச்சபட்ச சாகசமாக அமையக்கூடிய சண்டைக் காட்சிகளுக்காக மெனக்கெட்டு, காற்றில் கயிறு கட்டி பறக்கவிடுகிறார்கள்!! படியுங்கள் அய்யாமாரே!!


இன்றைய கதையை ஒரு வணிக நாவல் வடிவில் எழுதியிருந்தால், ஃபால்குனை பின்வாங்கி வரும் படையின் முன்சென்று ஒரு மெய்சிலிர்க்கும் வீர உரை ஆற்றி, அப்படையக் கொண்டு துரத்தி வரும் நாகர்களை வென்றதாக எழுதியிருக்கலாம். அவ்வாறல்லாமல் கலிகனை மட்டும் தன் திறமையை ஏற்றுக்கொள்ள வைத்து வில்லையும் மூன்று அம்பறாத்துணிகளையும் வாங்கிக்கொண்டு மற்றவர் கண்களுக்குப் படாமல் மரங்களில் மறைத்து துரத்தியது தான் இதை இலக்கியமாக்குகிறது. அப்படித்தான் நடந்திருக்க முடியும். தலைவன் காயமுற்று பின்வாங்கி வரும் படை நிச்சயம் முன்பின் தெரியாத மலைப்பெண்ணை நாகர்களின் உளவாளியாகவே கருதி கொன்றிருக்கும். எனவே ஃபால்குனை முன் இருந்த ஒரே சாத்தியமான வழி அவ்வாறு மறைவது தான். இலக்கியம் என்பது நடப்பதை எழுதுவது தானே! 
வென்று வந்தபிறகு தன்னை அச்சத்தோடு நோக்கும் விழிகளைப் பார்த்து அவள் கூறுவது தான் இன்றைய அத்தியாயத்தின் உச்சம், 'என்னை அஞ்சவேண்டாம். அஞ்சும் விழிகளை அஞ்சியே பெண்ணானேன்'. ஆம், காலம் காலமாக அர்ஜுனன் தவித்து வருவது தனிமையால். பெரு வீரன், அஞ்சாதவன் என்பதே அவனைப் பார்க்கும் விழிகளை எச்சரிக்கை கொண்டு அயலாக்கி விடும். பெண்கள் அவனை ஒரு காமுகனாக மட்டுமே பார்ப்பர். எனவே அவர்களிடமிருந்தும் அவன் தனித்தே இருக்கிறான். இவை அனைத்துக்கும் மேல் அவன் நிலையா சித்தம் கொண்டு, தேடியலையும் உள்ளம் கொண்டுஇடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கிறான். அப்படிப்பட்டவன் கொள்ளும் தனிமை எத்தன்மையதாயிருக்கும்!! அத்தனிமையில் முதன்முதல் இனிமையைக் கலந்தவளாக உலூபி இருக்கிறாள். அவளைப் பிரிவது என்பது அர்ஜுனனுக்கு மிகக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். அவன் நிச்சயம் அந்த தனிமையை அஞ்சியிருப்பான். பார்ப்பவர்கள் அஞ்சும் தோற்றத்தை விட பார்ப்பவர்கள் மகிழ்ந்து, புன்சிரிப்புடன் வரவேற்கும் தோற்றத்தையே விரும்பியிருப்பான். அவன் கற்ற கலைகளின் உச்சமான தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருத்தலும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருத்தலும் அவனைப் பெண்ணாகத் தூண்டியிருக்கும். எனவே அவன் ஃபால்குனை ஆகிறான். தேவை என்று வந்த போது அர்ஜுனன் ஆகிறான். ஒரு வகையில் அவன் மறைந்து மறைந்து போர் செய்வது அவனது அகத்தோடு தானே. அவன் துரத்தும் நாகர்கள் அவனது ஆழ்மன பிரிவுகள் தானே. அப்பிரிவுகள் முன், அவன் பிரிந்தவர்கள் முன் அவனால் நேருக்கு நேர் நின்று போர் செய்ய இயலுமா என்ன?! அல்லது அர்ஜுனனாகவே அவ்வெண்ணங்களைத் துரத்த இயலுமா? ஃபால்குனையாக மாறி மறைந்தால் மட்டும் தானே நிறைவான காதலையும், அருமையான மகனையும் பிரிந்த ஏக்கத்தைத் துரத்த முடியும். என்ன ஒரு அத்தியாயம்!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்