Tuesday, October 20, 2015

பப்ருவாகனன்-பெயர் விளக்கம்:



இருவித விளக்கங்கள் கொடுக்கலாம்.

பப்ருவாகனன் - பெரும்தயை கொண்ட அரசன்
பப்ரு வாகனன் - பழுப்பு நிற பசுவை வாகனமாகக் கொண்டவன்.

இரண்டாவது தான் நேரடியான பெயர்க்காரணம். அதற்கான குறிப்பு இன்றைய வெண்முரசில் கொடுக்கப்பட்டுள்ளது. பப்ருவாகனன் எட்டாவது வசுவான பிரபாசனின் மண் நிகழ்வு. இந்த பிரபாச வாசு தான் வசிஷ்டரிடமிருந்து காமதேனுவைத் திருடியவன். அதனாலே பழுப்பு நிறப் பசுவை வாகனமாகக் கொண்டவன் என்ற பொருளில் அப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

முதல் பெயர் விளக்கத்துக்கான குறிப்பும் உள்ளது. 'தன் தந்தையின் தீப்பழி ஒன்றை போக்கவும் மண்ணிலிருந்து அவர் எளிதாக விண்ணேக வழிகோலவும் நல்லூழ்கொண்ட மைந்தன் இவர். இவரை ஈன்றதனால் மட்டுமே இவரது தந்தை பிறவாழிச்சுழல் நீந்தி கரைகாண்பார்.

அந்தத் தீப்பழி - பிதாமகர் பீஷ்மரை சிகண்டியை முன்னிறுத்திக் கொன்றது. 
அதற்கான தண்டனை - மரணம்.

தந்தையையே கொல்வது, அதுவும் அவரின் ஒரு பழி போக்கக் கொள்வது என்பது பெரும் தயை உள்ள ஒருவனால் தானே இயலும். எனவே இப்பெயர். 

அந்த மரணமும் பப்ருவாகனன் கையால் ஏன் நிகழ வேண்டும்? தன்னிடமிருந்து கமதேனுவைத் திருடிய அஷ்ட வசுக்களை பூமியில் பிறக்கும் படி சபிக்கிறார் வசிஷ்டர். அவர்கள் பிழை பொறுக்கும் படி கோர, உங்களில் திருடிய ஒருவனைத் தவிர மற்றவர் அனைவரும் பிறந்த உடனே இறக்கும் நல்லூழ் கொண்டவராவீர் என்று சாப விமோசனம் தருகிறார் வசிஷ்டர். பசுவைத் திருடிய எட்டாவது வசுவான பிரபாசன் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்து தன் பிழை கழிக்க வேண்டும் என்பது விதி.

அதன் படி அந்த எட்டு பேரும் கங்கைக்கு மைந்தராகப் பிறக்கின்றனர். அவர்களில் பசுவைத் திருடிய பிரபாசன் மட்டுமே பீஷ்மராக உயிர் வாழ்கிறான். அந்த பிரபாசனை முறை தவறிக் கொன்றதால் அர்ஜுனனை இந்த பிரபாசன் (பப்ருவாகனன்) கொல்கிறான். 

இறப்பதும் மீள்வதும் அர்ஜுனனுக்கு பல முறை நிகழ்வது தானே!! யக்ஷப் பிரஸ்னம் நினைவுக்கு வருகிறதா. அதைப் போல இம்முறை உலூபியின் உதவியால் அவன் மீள்கிறான்!!! தந்தையையே கொன்று மீட்ட தயாபரன் என்பதாலும் பப்ருவாகனன் என்று பெயர்..... இது ஏன் ஊகம் தான், தவறாகவும் இருக்கலாம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.