அன்புள்ள அருணாச்சலம் //அர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்?// நன்றாக இருந்தது. ஆனால்..
காண்டீபம்-28 இதுவரை ஆண் பெண் என்று எழுதிய வைத்திருந்த மொத்த சித்ரத்தையும் அழித்து புதிதாக எழுதுகின்றது.
குவிதல் பெண்
பரவுதல் ஆண்.
வளர்தல் பெண்
தேய்தல் ஆண்.
மகளாக, சகோதரியாகா, காதலியாக, அன்னையாக பெண்ணால் முழுமையாக குவியமுடிகிறது அதன் மூலாமக வளர்பிறை சந்திரனாக முடிகிறது. ஆனால் ஆண் இதற்கு எதிர் திசையில் உள்ளான். மகனாக, சகோதரனாக, காதலனாக, தந்தையாக ஆகமுடிகின்றது ஆனால் குவியமுடியவில்லை. அந்த குவிதலை அறிய, அந்த குவிதலுக்காக வளர்தலை அறிய அர்ஜுனன் பெண்ணாகி இருப்பான் என்று நினைக்கிறேன்.
அர்ஜுனன் அரவானை பிரிவது தந்தையாக இருப்பதால் எளிதென்று நினைக்கிறேன். தருமர் சொல்லும் புத்திர இழப்பால்வரும்சோகத்தை காட்டத்தான் அபிமன்யு வதத்திற்குபின்பு அக்கினியில் விழப்போகின்றான். பிரிவை தாங்கிக்கொள்ளும் மனவலிமை உள்ள ஆணுக்கு இழப்பை தாங்கி்க்கொள்ள மனவலிமை இல்லை. பிரிவை தாங்கிக்கொள்ள மனவலிமை அல்லாத பெண்ணுக்கு இழப்பை தாங்கிக்கொள்ளும் வல்லமை உள்ளதுதான் படைப்பின் ரகசியம் என்று நினைக்கிறேன்.
ஜெ காட்டும் வளர்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் படிமம்தான் பெரும் வெளியை திறக்கிறது. தேய்பிறை சந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக வானமட்டுமாக ஆகிவிடுதல். வளர்பிறை சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக வானும் வானின் பூவுமாக ஆதல். இந்த இன்மையில், ’சூனியமாதலில், பிறிதொன்று இல்லா நிலையை அஞ்சிதான் அர்ஜுனன் பெண்வேடம்போடுகின்றான். தாங்கள் சொல்வதுபோல் தனிமையை அஞ்சி. ஆனால் மணிபுரி நாட்டிற்காக போட்டவேடமில்லை இது. மணிபுரி நாட்டிற்’கு பொருந்துகின்றது. அந்த பெண்வேடம் போட்டதால் ”சிவதம்” என்னும் ஊரைப்பெற்று எடுக்கிறாள் ஃபால்குனை. உலூபி தன் மகனுக்கு அரவான் என்று பெயர் இட்டதும், ஃபால்குனை தான் காத்த ஊருக்கு சிவதம் என்று பெயர் இட்டதும். அன்னையர்களாய் ஆவதால் நடக்கிறது.
சித்ரங்கதன் ஆண் என ஆக நாரைகளின் கழுத்தை அறுப்பதையும், பெண்ணென ஆனபின்னால் நரைகளுக்க தன்விரலையே முலைக்காம்பென ஆக்குவதும் நினைத்து நினைத்து பார்க்கிறேன். ஆண் ஆதல் எத்தனை எளிமை, பெண் ஆதல் எத்தனை கடினம்.
தெய்வங்கள் பெண் ஆகின்றன, தெய்வத்தின் நிழல்கள் ஆண் ஆகின்றன என்று நினைக்கிறேன். நன்றி அருணாச்சலம்.
ராமராஜன் மாணிக்கவேல்