Monday, October 19, 2015

மகாவாக்கியம்

ஆத்மனுக்கு அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு அது அடைவதெல்லாம் நினைவூட்டல் மட்டுமே


    இது ஒரு மகா வாக்கியம். இதை எப்படி தாண்டி போவது என்றே தெரியவில்லை. இந்த வாக்கியத்தை நான் தியானிக்கவேண்டும்.


        அறிவு என்பது நம் மூளையில் பதிந்துவைத்துள்ள தகவல் திரட்டு. நாம் படித்தும் கேட்டும், அனுபவங்களின் வாயிலாகவும் அறிந்தவை எல்லாம் மூளையில் தகவல்களாக பதிந்து வைக்கப்பட்டுள்ளன.  மேலும்  தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை நினைவுகொண்டு அதை பயன்படுத்தும் திறனும் மூளையில் தான் பதிந்துவைத்திருக்கப்படவேண்டும்
. ஆக ஒருவனின்  மூளையில் உள்ள தகவல்கள்தான் அவனா?  என்னை நானென உணர்ந்துகொள்வது என் மூளையில் பதிந்துவைத்துள்ள தகவல்களின்  தொகுப்பையா? என் குணங்கள், இன்பம் துன்பம் போன்ற உணர்வுகள் எல்லாம் என் மூளையின் பதிவுகளின் விளைவுகள் மட்டுமா?
 
 
    அப்படியென்றால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை எதுவும் எழுதப்படாத ஒரு வெற்று காகிதம் போன்றதா?  ஆனால் பிறந்த குழந்தை அன்னை மார்புக் காம்பில் பாலை உறிஞ்சி குடிப்பதை யார் கற்றுக் கொடுத்தது? ஒரு பறவைக் குஞ்சை பிறந்த நாளிலேயே தாயிடம் இருந்து  தனியே பிரித்து வளர்த்தால் அதற்கு கூடு கட்டும் திறமை சுத்தமாக இல்லாது போய் விடுமா? ஒரு விலங்கின் செல்லில் இருக்கும் ஜீன்கள் அந்த விலங்கின் உடலை உருவாக்குவதற்கான் திட்ட வரைபடத்தை தன்னுள் வைத்திருக்கின்றன. அந்த வரைபடத்தின் விதிகளுக்கேற்ப அந்த உடல் உருவாக்கப்படுகிறது. ஆனால் அந்த திட்ட வரைபடத்தில்  அறிவும் எழுதப்பட்டிருக்குமா?
 
 
   இந்தக் கேள்விகளை தொகுத்து    கேட்க வேண்டுமென்றால் அனைத்து அறிவுகளுக்கு காரணமாக அமைவது மூளையில் சேகரமாகும் தகவல்களா? ஜீன்களில் அச்சடித்து  வைத்திருக்கும் வரைபடமா ? அல்லது மூளைகளில் நிகழும் வேதியல் வினைகளா?  

   இதற்கு அறிவியல் முழுமையான பதிலை தந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. நம் மதங்கள் நம்மை வெறும் உடலல்ல என பழங்காலத்திலிருந்து சொல்லிவருகின்றன. உடலின் உள்ளிருந்து இயக்கும் ஒன்று  உள்ளது. அந்த ஒன்று உடலுக்கு அப்பாற்பட்டு இயற்கையோடு தொடர்புடையது என கருதப்படுகிறது. ஒருவேளை அந்த பேரியற்கையே நம் உடலில் இருக்கும் ஆத்மனா? பெருங் கடலின் அலைகள் தன்னை அந்தப் பெருங்கடலென உணராமல் ஓடி, பொங்கி, எழுந்து, விழுந்து மறைவதைப்போல் நம்மை அந்த ஆத்மனாக அறியாமல் வாழ்ந்து மறைகிறோமா?    அனைத்து உயிர்களுக்கும் உள்ளுறைவது அந்தப் பேரியற்கையே என கொண்டால், பூச்சிகளின் கூட்டு மனம், மீன்களின் பெருங் கூட்டத்தின் இயக்கம், நுண்ணுயிர்கள் கொள்ளும் தகவமைப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை நாம் எளிதாக பொருள் கொள்ள முடியும். ஒரு குழந்தையாய் இருக்கும்போதே  இசை, அறிவியல், ஞாபகத்திறன் போன்றவற்றில்  வெளிப்படும் அசாத்திய திறமைகள் எப்படி என்பதற்கு ஒரு விளக்கம்  கிடைக்கிறது.  

    ஒரு முறை சுண்ணாம்புக் கலவையால் செய்யப்பட்டிருந்த ஒரு புத்தர் சிலையை வேறுஇடத்தில் வைப்பதற்காக தூக்கியதில் தவறி விழுந்து விரிசலடைந்தது. அப்போது அதன் விரிசலின் ழியே பொன்னின் பளபளப்பை கண்டார்கள். ஏதோ ஒன்றுக்காக நெடுங்காலத்திற்கு முன் ஒரு பொற்சிலை சுண்ணாம்புக் கலவையால் மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது.  அவ்வாறே ஆத்மன் இவ்வுடல்களின் உள்ளே பிரகாசித்துக்கொண்டிருக்கிறான். அதை  உடல், அறியாமை, அகங்காரம் போன்றகலவைகளால் உறுதியாக மூடப்பட்டு இருக்கிறது. ஆகவே அதை  வெறும் சுண்ணாம்புசி சிலை என நம்மை அறிந்து வருகிறோம்.  அந்த விரிசலில் பொற்சிலை தெரிவதைப்போல் ஒருவனின்  பேராற்றலில், பேரறிவில், பேரறத்தில், பெருங்கருணையில் அவன் உள்ளிருக்கும் ஆத்மன் பிரகாசிப்பதை நாம் பார்க்கிறோம்.
 
 
    அனைத்தும் அறிந்திருக்கும் அந்தப் பேரியற்கையையே  நாம் பரப்பிரம்மம் என்று சொல்கிறோம். அதுவே நம்முள் ஆத்மனாக உள்ளுறைகிறது. அந்த ஆத்மனான  நம்மை நாம் அறிந்துகொள்ள முடியாமல் நம் அறியாமை  தடுத்திருக்கிறது. அதை அறிவதே முக்தி.
 
தண்டபாணி துரைவேல்