Sunday, October 18, 2015

பொன்னில் மயங்கும் பெண்


பொன்னை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் ஒரு ஆண்,  பொன்னை  செல்வத்தில் ஒரு வகை என்ற அளவில்தான் விரும்புகிறான். அவன்  எப்போதாவது பொன்னை அணிந்தாலும் அதற்கு தன் செல்வச் செழிப்பைக் காட்டிக்கொள்வதற்காகவே இருக்கும்.  இதற்கு மாறானது ஒரு பெண் பொன்னை விரும்புவது. ஏனென்றால் ஆயிரம் இருந்தாலும் பெண்ணிற்கு அவள் அழகு மிக முக்கியம். அடிப்படைத்தேவைகளுக்கு நிகராக அவள்  முக்கியமென கருதுவது தன்னை அழகுபடுத்திக்கொள்ளுவது.  அவள் தன்னை அலங்கரித்துக்கொள்வது முதலில் தனக்காகத்தான்.  வீட்டில் தனித்திருக்கும் பெண் கூட தன்னை அலங்கரித்துக்கொண்டு தான் இருக்கிறாள். அவள் தன் அழகின்மேல்  கொண்ட விருப்பு என்றும்  குறைவதே இல்லை.  தன் அழகை மெருகூட்டும் செயலை அவள்  ஆயுள் முழுதும் கைவிடுவதில்லை.   தன் அழகை அதிகரிக்கும்  ஆடைகள், அணிகலன்கள், ஒப்பனைப்பொருட்கள் போன்றவற்றை தேடித் தேடி சேகரித்தவண்ணம் இருக்கிறாள்.    ஆண் பெண்ணில் பார்ப்பது அழகை  என்றால்,  பெண் ஆணைப்பார்ப்பது அவன் உணர்வில் எதிரொளிக்கும் தன்  அழகை.  ஒருவகையில் ஆண் பெண்ணிற்கு ஒரு ஆடி போல இருக்கிறான்.   

    தன்னை அலங்கரிக்கும் அத்தனை பொருட்களில் அவள் பெரிதென நினைப்பது பொன் அணிகலன்களையே.    பெண்ணிற்கென இருக்கும் கவலை அவள் அழகு குன்றுமோ என்ற நினைப்பு. ஆனால் பொன் என்றும் அழகு குன்றாதது.  கடினப்பாறைகளாலான மலைகள் போன்ற அனைத்தையும் கரைத்து குலைக்கும் காலம் கூட பொன்னின் அழகில் மயங்கி அதன் அழகை குன்ற வைப்பதில்லை. மேலும் காலம் பொன்னை  புதையலென பொத்தி காக்கின்றது.   

        பொன்,  உலோகங்களில் பெண்மை நிறைந்தது. அதை போர்க்கருவிகளுக்கு உபயோகிக்க முடியாது. கடினமான பணிகளுக்கான கருவிகள் செய்ய பயன்படுத்தமுடியாது. மென்மையானது மற்றும் எளிதில் வளையும்,  நீளும் தன்மைகொண்டது. அதனால் அது அணிகலன்கள் மற்றும் கலைபொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. தன்னுள் வளைவுகளையும் நெளிவுகளையும் ஏற்று நுணுக்கமான வேலைப்பபாடுகளை தன்னுள் இயல்பாக ஏற்கிறது. அதனால் பெண்மையின் அழகை ஒளிர வைக்கும் அணிகலன்களுக்கான உலோகமாக  பொன் விளங்குகிறது.  பெண்ணுக்கென்ற உலோகமாக பொன்னை இறைவன் படைத்திருக்கிறான் போலும். அதனால் ஒரு  பெண்,  பொன்னிற்கு மயங்குதல் இயல்பானதாக  இருக்கிறது.  


  அந்த மயக்கத்தில் கட்டுண்ட தேவருலக பெண்களைப் பேசுகிறது
வெண்முரசு. வர்கை முதலான தேவ மகளிர் பொன்னின் மேல் கொண்ட மயக்கத்தால் தம் கடமை மறக்கின்றனர். அவர்களுக்கு தண்டனையாக பொன்னுலகில் வாழ வைக்கப்படுகின்றனர். இது  சாபம் போல் இல்லாமல் வரம்போல் அல்லவா தெரிகிறது.


       ஒரு பொருளின் சிறப்பு அது கிடைப்பதற்கான  அரிதினால் உணரப்படுகிறது. தேடிக் கண்டடையவேண்டிய ஒரு பொருள் கவர்ச்சியூட்டுகிறது. ஆனால் கண்டடையப்பட்டவுடன் அது மற்றபல பொருட்களில் ஒன்றென  பொலிவிழக்கிறது. நம்மை அதிகம் கவரும் எப்பொருளும் நமக்கு அபரிதமாக கிடைக்கையில் அதிகம் சலிப்பூட்டும் ஒன்றாக மாறுகிறது.  நம்மை அழகுபடுத்திய  அணிகலன்கள்  அதீதமாகும்போது நம்மை பிணைக்கும் கை, கால்  விலங்குகளக மாறுகின்றன. இது எல்லாவற்றுக்கும் பொருந்தும் அல்லவா? நமக்கு சுவையாக இருக்கும் தின்பண்டம் அதீதமாகும்போது நமக்கு திகட்டுகிறது. வாயாருகே கொண்டுசெல்லும்போது குமட்டுகிறது.  விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சி வரும் அப்பம் அப்பம் என்று  ஆவலோடு அலைபவன், அவை அவனுக்கு அதிகம் அதிகம் எனக் கிடைக்கும்போது அவை மலக்குவியல் எனத் தெரிகிறது நாளெல்லாம் வாந்தி  எடுத்துக் கொண்டிருப்பான்.

   ஒருவகையில் விரும்பிய பொருளின் மேல் வரும் அந்தக் குமட்டல்  நல்லதுதான். அதனால்  அப்பொருளின் ஆசையிலிருந்து  விடுபட்டு விடுகிறோம். ஆனால் விடுபட முடியாமல் போகும் போது அதனுள் சிறைபட்டவர்களாக மாறிவிடுகிறோம்.     அந்தத் தேவ மகளிருக்கு, எங்கும் பொன் எதிலும் பொன்னெனெ இருக்கும் குபேரனின் உலகம்   சிறை எனத் தெரிகின்றது.     இப்படித்தான் பொன்னில் மயங்கி பொன்னால் சிறைபட்ட அந்த தேவ மகளிரைப்போல்,   காமத்தால், செல்வத்தால், பதவியினால், புகழினால் என பல்வேறு விதங்களில் சிறைபட்ட  மனிதர்களாக நாம் இருக்கிறோம். 

தண்டபானி துரைவேல்