Saturday, October 17, 2015

பொன்நாக விருட்சம்

திசைகள் என கைகள் பெருகி படைக்கலம் ஏந்துவது தெய்வம்
கைகள் அற்று படைக்கலம் ஏந்துவது பிரம்மம்
ஐம்புலன் தட்டுகளும் நிகரில் இருப்பதால் தேவர்களின் இமைமுள் நகர்வதில்லை. ஐம்புலன் தட்டுகளும் நிகரற்று இருப்பதால் மானிடர் இமைமுள் நிலைநிற்பதில்லை.
இமைப்பை வென்றவர் முனிவர்
இமைப்பை கடந்தவர் தேவர்
குவிதல் பெண்
பரவுதல் ஆண்
விழைவின் இன்பத்தின் துன்பத்தின் அளவின் வேறுபாட்டாலே மானிட முகங்கள் வேறுபாடு காட்டுகின்றன. தேவர் உலகத்தில் எல்லாம் நிகராகவே இருப்பாதல் முகம் மாறுவதில்லை. வெண்முரசு இப்படி யுகாந்திர இருளுக்குள் ஏற்றும் ஞானதீபம் வாழ்வை பொன்னென மின்னி மலரவைக்கிறது.

பொன்னை அறிவாகவும், உணர்வாகவும்  அறியும் உணரும் தருணத்தை உருவாக்குகிறது காண்டீபம் 32ன் கதை.

பொன் என்பது ஒரு உலோகம் அதற்குமேல் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை வர்கை உணர எத்தனை உணர்வு நிலையான கனவுக்காணவேண்டி உள்ளது. ஒரு அணுவில் நாற்பத்தி ஏழு எலக்ட்ரான், நாற்பத்தி ஏழு புரோட்டான் இருக்கும் உலோகத்திற்கு வெள்ளி என்று பெயர். ஒரு அணுவில் எழுபத்தி ஒன்பது எலக்ட்ரான், எழுபத்தி ஒன்பது புரோட்டான் உள்ள உலோகத்திற்கு தங்கம் என்று பெயர். தங்கத்திற்கும் வெள்ளிக்கும் உள்ள வேறுபாடு அதன் அணு எண்ணை நிர்ணயிக்கும் எலக்ட்ரான்களால் ஆனது. இந்த உலோகங்கள் பஞ்சபூதங்களுடன் கொள்ளும் உறவு அனைத்தும் காரணங்காரியங்களால் விளக்கப்படுகிறது. எலக்ட்ரான்களின் சுழற்சியால் அதன் உலோக வல்லமை உருவாகிறது. அறிவியல் அதை அந்த காரணகாரியங்களை காட்டி உலோகம் என்று நிலை நிறத்துகிறது. “ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும்” திருவுடையார்களும் அந்த இடத்திற்கே வந்து நிற்கின்றார்கள். பொன் ஒரு உலோகம் என்பதற்குமேல் அவர்கள் இடம் எந்த உணர்வும் இல்லை.  

அறிவுக்கு முன்போ அல்லது அறிவுக்கு பின்போ வரும் உணர்வு நிலை என்பது வேறு. அது வெள்ளி அணுவுக்குள் எத்தனை எலக்ட்ரான் உள்ளது, தங்கத்தின் அணுவுக்குள் எத்தனை எலக்ட்ரான் உள்ளது என்று ஒப்புநோக்கி செயல்படுவதில்லை. ஆராய்வதில்லை, அறிவைகசக்குவதில்லை. மாறாக பொன் என்ற உலோகம் மட்டும்  உணர்வோடு கலந்து என்ன என்ன செய்கின்றது என்பதை மட்டும் அது பார்க்கிறது. கவிதையாய், கனவாய் இது விரிந்துச்செல்கிறது. இது அறுதி உண்மை என்று தர்க்கபூர்வமாய் அதை விளக்கவும் முடிவதில்லை. அந்த உணர்வு நிலையில் அது உண்மை. இங்கு பொன்னின் எலக்ட்ரான், புரோட்டான் கணக்கில் வருவதில்லை, அது வேலைக்கு ஆவதில்லை. பொன் என்னும் ஒரு உலோகம் நடத்தும் பிரபஞ்சதரிசன கலைநடனம் காட்சியாக்கப்படுகிறது. அங்குதான் பொன் விஞ்ஞானத்தை தாண்டி தனது மெய்ஞானத்தரிசனத்தை  காட்டுகிறது. முற்றிய கதிர்மணியில், பழுத்த இலையில், அடிமரத்தின் வைரத்தில், அடிவானத்து ஒளியில், கைமகவின் கால்களில், இளங்கன்னியர் தோள்களில். இப்படி பிரபஞ்ச தரிசனம் காட்டும் பொன்னை வெறும் உலோகம் என்று உலகம் எப்படி நம்பும். இந்த பிரபஞ்ச தரிசனம் எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அதில் உள்ள மயக்கும். உண்மையின் தரிசனமா? மாயையின் மயக்கா என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. அதனால்தான் நல்லதோ தீயதோ செயல்கள் மாறுபடலாம் ஆனால் அனுபவம் தூயதாகவே இருக்கும்.  

விஞ்ஞானமோ, மெய்ஞானமோ முழுதும் விளையாத பேதை நெஞ்சை இங்கு பேதை கொள்ள செய்கிறது பொன். மானிடக்கன்னியோ, தேவக்கன்னியோ அங்கு விழுகிறாள் வெறும் விழைவில். விழைவின் விரைவால் மயக்கம், மயக்கத்தால் வருகிறது கரவு. கேட்டதெல்லாம் தரும் கற்பக தாருவின் நிழலில் வாழ்பவர்களையும் ஒரு துளிப்பொன் மூக்குத்தியாய், தோடாய், தொப்புள் நகையாய், நெஞ்சத்தின் பதக்கமாய் மயக்கும் என்றால் பொன்னின் வல்லமைதான் என்னே! மண், பொன், பெண் மூன்றும் ஒருவனை கள்வனாக்கும் என்றாலும் பொன்போல் ஒருவனை கள்வானாக்கும் மற்றொன்று இல்லை. பொன்னைத்திருட கைகள்கூடவேண்டாம், காலின் இருவிரல்கள்போதும் என்று வர்கை காட்டிக்செல்கிறாள். எத்தனை எளியபொருள் எத்தனை பெரிய விழைவுக்கு காரணமாகின்றது. பொருளால் அல்ல  அதன் பிரபஞ்ச கலைநயத்தால் பொன் அத்தனை பெருமைகளை விழைவுகளை உண்டாக்குகிறது.

ஒரு துளி பொன் நாகபடிமமாகி பிரபஞ்சத்தை அடைத்துக்கொள்ளும் விஸ்வரூபத்தில் தெரிகிறது பொன்னின் மகத்துவம். சிறு கம்பிச்சுருள் அவிழ்வதுபோல் அவிழ்ந்து சுண்டுவிரல் ஏறி மோதிரமாய், கங்கனமாய், தோள்வளையாய், ஆரமாய், கிரீடமாய் ஆகி பின்பு நாகக்குடையாகவும் விரிந்து பெண்ணை தெய்வமாக்கியும் போதாமல், தெய்வத்தின் எல்லையை கடந்து  மேகமாய், இடியாய். மின்னலாய விராடரூபம் எடுக்கும்போது தெரிகிறது ஒரு துளி பொன்னென்னும் விதைக்குள் எத்தனை பெரிய நாகவிருட்சம் இருக்கிறது என்பது. பெண் பொன்னென்னும் நாகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டும்போது தெரிகிறது பொன்மாயையின் வல்லமைசக்தி.  பெண்ணுக்கு முன்பு துளியாக இருந்த பொன்னுக்கு முன்பு பெண் எத்தனை துளியாகிவிடுகின்றாள்.  துளிப்பொன் முன் எத்தனை அச்சம் கொள்ளவேண்டி உள்ளது.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்-திருக்குறள்.

காண்டீபம் காட்டும் பொன்விஞ்ஞானம் அதன் எல்லைகளின் விரிவைக்காட்டுகிறது. காண்டீபம் காட்டும் பொன்மெய்ஞானம் அதன் பாதளத்தை விசும்பைக்காட்டுகிறது. வர்கை துளிப்பொன்னை எடுக்கும்போது அது ஒரு உலோகம் என்பதை மறந்து அதை உணர்வாக வரித்து தனது உடலாக ஆக்கிக்கொண்டாள். பொன் உடலாக ஆகி குபேரபுரிக்கு சென்று விழும்போது பொன் உணர்வுல்லது அல்ல ஒரு உலோகம் என்பதை அறிகிறாள். உணர்வில் இருந்து அறிவுக்கும், அறிவிலிருந்து உணர்வுக்கும் தள்ளாடுகின்றாள். நினைவின் அறியாமையை. கனவின் அறிவால் அறிகிறாள். இரண்டையுமே கடந்துப்போகாமல் நிகர்நிலை அடையமுடியாது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் “காலில் குத்திய முள்ளை மற்றொரு முள்ளால் எடுத்தப்பின்பு இரண்டு முள்ளையும் எரிந்துவிட்டு நடக்கவேண்டும்” என்று சொல்கிறார்.

ராமராஜன் மாணிக்கவேல்