வீரன் என்பவன் அச்சமற்றவன் மட்டும் அல்ல. பல போர்த்திறன்களை கற்றவன் என்பது மட்டும் இல்லை. போரில் அவன் கற்ற போர் நுணுக்கங்களை நன்றாக பயன்படுத்துபவனாக இருக்கவேண்டும்.. அவன் போர்க்கள சூழலை உள்வாங்கிக்கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவனாக இருக்கவேண்டும். இன்று பார்த்தன் போர் செய்யும் முறை நுணுகி ஆராயத்தக்கது. நம் கண்களுக்கு பலஹீனமாகத் தெரியும் சூழலை அவன் எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதைப் பார்ப்போம்.
1. அவன் பெண்ணுருவில் இருக்கிறான். ஆகவே அவனை மணிப்பூரக வீரர்கள் அவனை போரிட அனுமதிப்பது கடினம்.
அவனை எதிரியின் ஒற்றனாய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். பார்த்தன் தன் பெண்மையின் சாதுர்யத்தால் அவன் சொல்வதை கலிகனை செவிகொடுத்து கேட்கவைக்க முடிகிறது. தன் பெண்ணுருவால் அவர்களை வியப்பில் ஆழ்த்தி அவர்களின் பிடியில் இருந்து நழுவி போர்முகம் செல்கிறான்.
2. சித்ராங்கதன் காயமுற்று இருக்கிறான். அவன் போர்வீரர்கள் களைப்புற்றும் அச்சமுற்றும் இருக்கிறார்கள். அதனால பார்த்தனுக்கு அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது:
பார்த்தனுக்கு சித்ராங்கதனிடம் அனுமதி கேட்கும் அவசியம் இல்லாமல் போகிறது. அவன் மற்ற வீரர்களை உடன் அழைத்துச் சென்றிருந்தால் அவன் இன்று செய்யும் போர் முறைக்கு எவ்வித உதவியும் கிடைத்திருக்காது. மேலும் அவர்களை காக்கும் சுமையும் அவனுக்கு சேர்ந்திருக்கும். ஆகவே பார்த்தன் தனித்து சென்று போரை வெல்லமுடிகிறது.
3. ஒரு வில்லாளிக்கு தேவையான வெட்டவெளி களமாக இல்லாமல் மரங்கள் அடர்ந்த காட்டினுள் போரிடவேண்டிய சூழல்:
அந்த சூழலை மிகச் சாதகமாக பார்த்தன் ஆக்கிக்கொள்கிறான். தன்னை மர உச்சியில் ஒளித்துக்கொள்கிறான். அங்கிருந்து கீழிருப்பவர்கள் மேல் அம்புகளை செலுத்துவது மிகவும் எளிதாகிவிடுகிறது. அதுவும் பாருங்கள் அம்புவரும் திசையை காண முயலும் வீரர்களை முதலில் வீழ்த்துகிறான். அவன் திசை நோக்கி முகம் திருப்பும் வீரன் முதலில் கொல்லப்படுகிறான். ஆதலால் உயிரோடிருப்பவன் யாரும் அவனை இன்னும் காணவில்லை. அப்படி பார்த்தனை கண்டவன் உயிரோடிருப்பதில்லை என்ற நிலை இருக்கிறது.
4. பார்த்தன் தனி ஒருவனாக எதிர்த்து செல்லும் படை, மிகப்பெரிதாக இருப்பது:.
ஆனால் பெரிய படையாக இருப்பதாலேயே அவர்கள் சற்று அசட்டையாக இருக்கிறார்கள் அதை திறன்பட பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு சிலரை குழப்புவதைவிட ஒரு பெரிய கூட்டத்தை குழப்புவது எளிது. எதிரிகள் விலகி ஓடிய நிலையில் நாகர் படை சரியான வியூகம் திட்டம் ஏதுமன்றி இருந்திருக்கும். திடீரென்று, விடுக்கும் ஆள் யாரென காண முடியாமல், அம்புகள் மேலிருந்து பாய்வது அக்கூட்டத்தை மிகவும் குழப்பி திக்குமுக்காட வைக்கிறது.
பத்து பதினைந்து நிமிடம் கூட இந்தச் சண்டை நிகழ்ந்திருக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் அச்சண்டையை மிகுந்த விறுவிறுப்போடு எவ்வித தர்க்கமுரணுக்கும் இடமளிக்காமல் நம் கண்களில் திடைப்படம் போல் காட்டுகிறது ஜெயமோகனின் எழுத்து
தண்டபாணி துரைவேல்