இனிய ஜெயம்,
மற்றுமொரு அழகான அத்யாயம். ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே எதை எதை உணர இயலுமோ அர்ஜுனன் அதை உணர்ந்து கடந்து சென்றுகொண்டு இருக்கிறான்.
குறிப்பாக அவன் ஊர் நீங்கும் சித்திரம். முற்றிலும் ஒரு பெண் உள்ளே என்னவாக இருப்பாளோ அதுவாகவே இருக்கிறான். உன்மேல் அன்பாக இருந்தோமே என்பது எனும் சொல் எப்படி நிபந்தனை எனும் தளையை தன்னுள் கொண்டிருக்கிறதோ, அப்படியே தான் அன்பு செலுத்த 'பிறர்' நிலையும் சார்ந்த நிலை என்ற தளையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
முதியவள் அர்ஜுனனை நோக்கி சொல்கிறாள் ''தொப்புள் தடம் உள்ளவரை நீ உறவுகளால் தளைக்கப்பட்டவந்தான்''. நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன் ''தொப்புள் தடம் என்பது மனிதன் துண்டிக்கப்பட்டவன் என்பதன் சாட்சி. இங்கே நிரந்தரம் என்று எதுவும் இல்லை''
நிபந்தனை அற்ற அன்பு அதை நோக்கிய அர்ஜுனனின் பயணம். பெண்ணாக இருந்து அர்ஜுனன் கொள்ளும் தேடல், இரண்டுமே நீலன் பாதம் கண்ட பின்பே நிறைவு கொள்ளும்.
அர்ஜுனன் மணிப்பூரகம் என்பதை தனது வடிவாக கண்டது போல, எங்கோ சித்ராங்கதன் ஃபால்குனையை மணிப்பூரகத்தின் வடிவாகக கண்டிருக்கிறான். இருவருமே ஒரு வகையில் மிதக்கும் நிலங்கள்தான்.
மண்ணில் வேர் செலுத்தி, விழுதுகளால் நிலம்பற்றி வாழும் ஆல் ஒரு போதும் நீர்த்தாவரங்களின் பயணத்தை அறியாது
கடலூர் சீனு