Friday, October 2, 2015

பலிக்கொடை:


  ஏழு நாகர்கள் தன்னை சுயபலிகொடுத்துக்கொள்ளல் என்  நெஞ்சை அதிர வைத்தது. இந்த நாகர்கள் என்ன பலன் தம் சமுதாயத்திற்கு கிடைக்கும் என தன்னை பலியிட்டுக்கொண்டனர்? இதையெல்லாம் கதை என்ற அளவில் கூட மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏன் ஏன் என்று மனம் அலறுகிறது. இதன் தேவை என்ன? ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனையில் மனம் உழலுகிறது.   ஆனால் இத்தகைய சுயபலிகள் நம் வரலாற்றில் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. அவை அழியாமல் கற்சிலைகளில், இலக்கியங்களிலென பதிக்கப்பட்டு உள்ளன. அந்த வரலாற்று காலத்தில் இருந்து வெகு தொலைவு நாம் வந்துவிட்டோம். ஆகவே இது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா? அல்லது நாம் போர்களற்ற சமூக சூழலுக்கு முழுமையாக பழகிவிட்டோம் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோமா?
    
  அந்தக் காலத்தில் இயற்கை புரிதலுக்கு அப்பாற்பட்டதாக மர்மங்கள் கொண்டதாக பெரிதும் இருந்தது. கொடும் நோய்கள், பெரும் வெள்ளங்கள், மரங்களை பிடுங்கியெறியும் சூறாவளிகள், பொங்கி ஊருக்குள் புகும் கடல் என எல்லாம் அவன் அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. சாதாரணமான இடி மின்னல்கூட அவன் அறியாதவை. அந்த இயற்கைக்கு அஞ்சி தன்னை அதற்கு அடிபணிந்தவனாக காட்டிக்கொள்ள,  அதனிடம் சகலமும் கொடுத்து சரணடைந்தவன் எனச் சொல்லிக்கொள்ள சுயபலிகளும் பலிக்கொடைகளும்   உண்டாகியிருக்கும் என நினைக்கிறேன். அறிவியலின் துணையினால் நாம் இயற்கையின் மர்மங்களை புரிந்துகொள்வதால், இப்போது இந்த பலிக்கொடைகள் பெரிதும் குறைந்துவிட்டன. அவை  வீரியம் இழந்து பூசனிக்காய் எலுமிச்சை என வெறும் அடையாளங்களாக ஆகிவிட்டன.


     ஆனால் சற்று சிந்தித்தால் இந்த சுயபலிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. இதை நாம் வெறும் செய்திகளாக புறந்தள்ளிவிடுகிறோம்.  சசி பெருமாள் தன்னை பலியிட்டுக்கொண்டபோது இவ்வாறு மனம் பதைத்தது. ஒரு பெரிய யானையை அங்குசத்தின் சிறிய முள் குத்தி அதன் போக்கை மாற்ற முயல்வதைப்போல இந்த சுயபலிகள் இருக்கின்றன. சமூகம்,  புலன்களின் திறன் குறைந்த ஒரு கிழட்டு மிருகம் போன்றது.  நல்லதோ கெட்டதோ அச்சமூகத்தின கவனிப்பை பெற இதைப்போன்ற  அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகிறது என நினைக்கிறேன்.  தன்னை வருத்திக்கொள்வதன் மூலம் தம்மை கட்டுப்படுத்தி இயக்கும் ஒரு பெரும் சக்தியை தன் மேல் அல்லது தன் சமூகத்தின் மேல்  கவனத்தை திருப்ப இவை ஒருவேளை  தேவைப்படுகின்றன போலும். உண்மையில் இந்தச் சுயபலிகள் வீரியம் குறைந்த நிலையில் இப்போதும் இருக்கின்றன. ஒரு சமூக போராளி, போராட்டத்தில் ஈடுபட்டு, காவலரின் தடியடிக்கும், சிறைபிடித்தலுக்கும் என  தன்னை துன்பத்திற்கு உட்படுத்திக்கொள்ளுதல் ஒருவகையில் பார்த்தால் சுயபலி என்றே நான் கருதுகிறேன்.  ஒருவர் தன் நேரத்தை, சுகத்தை,  செல்வத்தை,  சமூகத்துக்கென  செலவிடுதல் எல்லாம் இந்தக் கணக்கில் வரும் என்றே நினைக்கிறேன். இத்தகைய தியாகங்கள் தான் இந்த சமூகத்தை முன்னகர்த்தி செல்கின்றன.


   இப்போதைய சமூகத்தில் பலிக்கொடைகள் இருக்கின்றனவா? ஒரு வேலையைச் செய்கிறோம் அந்த வேலையின் காரணமாக ஒருவன் இழப்பை அடைகிறான், இருந்தபோதிலும் நாம் அந்த வேலையை தொடர்கிறோம் என்றால் அவனின் இழப்பு என்பது அந்த வேலைக்கான பலிதானே? எடுத்துக்காட்டிற்கு பறக்கும் ரயில் சென்னையில் பரவசமூட்டும் வண்ணம் செயல்படுகிறது. ஆனால் அதை அமைக்கும் பணியில் சில தொழிலாளிகள் தம் உயிரை இழந்தனர். அதற்காக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதா?  அல்லது இத்தகைய மரணங்கள் நிகழாது என்ற உறுதியுடன் தான் அந்த பணியை தொடங்கினார்களா? நிகழலாம் என தெரிந்தும் அத்தகைய பணிகளை செய்யும்போது நிகழும் விபத்தின் இறப்புகளை அந்தப் பணிக்கான பலிகள் என்றே கூறுவேன்.  நாம் போர் வீரர்களை எல்லைக்கு அனுப்புகிறோம். இறப்பு நேரிடலாம் என்று தெரிந்தே அனுப்புகிறோம். அதனால் போர் முனையில், எல்லையில், தீவிரவாதிகளின் தாக்குதலில், நடக்கும் ஒவ்வொரு போர் வீரனின் இறப்பும் இந்த நாடு என்ற தெய்வத்திற்கு நாம் கொடுக்கின்ற பலிகள் என்றுதான் சொல்லவேண்டும்.

தண்டபாணி துரைவேல்