Saturday, October 24, 2015

வெண்முரசில் யோகசக்கரங்கள்


நமது யோக மரபில் குறிக்கப்படும் சக்கரங்களும் , அது நம் வாழ்வோடு இணைந்திருக்கும் இடம் மற்றும் பொருள் பற்றி வென்முரசு முதற்கனல் முதல் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது . இன்று உலகம் முழுவதும்   இந்திய யோக பயிற்சி முறைகளில் யோக சக்கரங்கள் பற்றிய பயிற்சி முறைகளை ஒரு சில மரபுகள் மிக சரியாக கையாள்வதை போல, அத்தனை நுணுக்கங்களுடன் வென்முரசு பேசுகிறது.
 ''சுவாமி சத்யானந்த சரஸ்வதி''யின் யோகா அண்ட் கிரியா { Yoga and Kriya}  என்கிற மிகச்சிறந்த நூல் தான் இன்று உலக யோக குருமார்களுக்கான அடித்தளம். சமிபத்தில் மீண்டும் அந்த நூலை வாசிக்கும் நல் வாய்ப்பை பெற்றேன்.வென்முரசு இன்னும் ஆழமாக படிக்கவேண்டிய பொக்கிஷம் என்பது புரிந்தது  . வென்முரசு முழுவதும் காட்டப்படும் ஏழு என்கிற குறியீடு நம் உடலில் உறையும் சக்கர  நிலைகளையும் , அதன் அமைப்பையும், செயலகளையும் திரும்ப திரும்ப குறிக்கிறது.
முதல்கணலில் ,விசித்திரவிர்யனை பரிசோதிக்கும் அகத்தியர் சொல்லும் இந்த உடல் 7 பசுக்கள் கொண்ட மந்தை.ஏழு தாமரைகள் விரிந்த தடாகம். ஏழு சக்கரங்களாலான இயந்திரம். ஏழுபொருள் கொண்ட சொல்.”  7விண்ணுலகங்கள், 7 மண்ணுலகங்கள்,  7 பெரும் காளைகள் என்று பல்வேறு குறியீடுகளாக  தொடர்கிறது.. 

                                                                              மூலாதாரம்:
இடைக்கு கீழ் இருப்பது முதல் புள்ளி மூலாதாரம் இதுவே உடலில்ருந்து உடலுக்கு தாவும் நெருப்பு என்கிறார் முதல் கனலில் அகத்தியர்.  இதன் அமைப்பை யோக மரபு மூலாதார சக்கரம் என்றும் இது ஒரு ஆணில்  பிறப்புறுப்புக்கும் , ஆசனவாயிர்க்கும் நடுவே நான்கு இதழ் கொண்ட தாமரை வடிவில்  அல்லது சுருள் பாம்பின் வடிவில் இருப்பதாகவும், பயம், காமம் குரோதம், போன்ற அடிப்படை எதிர் மறை சிந்தனைகள் தோன்றும் இடமாக உருவகிக்கிறது.  அதே சமயத்தில் வென்முரசில் அகத்தியர் சொல்வது போல ''இளவரசர் வண்ணங்களை விரும்புகிறார். ஒலிகளை ரசிக்கிறார். உணவை சுவைக்கிறார். மூலாதாரத்தில்தான் வாழ்க்கையை அழகாக்கும் மூன்று தேவதைகள் வாழ்கிறார்கள். காதல்கொள்ளச் செய்யும் பிரேமை, ஒவ்வொன்றையும் அழகாக்கும் சைதன்யை, ஒவ்வொன்றையும் அன்றே அக்கணமே என்று காட்டும் ஷிப்ரை.”  இந்த அற்புதமான உவமைக்கு பின் ஒன்றை கவனித்தேன்,, மூலதாரத்தில் ஏற்படும் ஆற்றலின்மை ஒருவரின் அன்றாட மன, உடல் ,செயல்களில் நேரிடையாகவே, நேர்,மற்றும்  எதிர் மறை விளைவுகளை உண்டாக்குகிறது. 


அடுத்ததாக ,
                                                                        சுவாதிஷ்டானம்
“அன்னத்தை அனலாக்கும் சுவாதிஷ்டானம் என்கிறது  வென்முரசு.
 ஆறு இதழ்கள் கொண்ட மலர் என்றும், ஆசை, காமம், உணவு மற்றும் ,ருசியின்  மீது வேட்கை, போன்ற அடிப்படை குணங்களின் ஆதாரப்புள்ளி.   மனிதர் அனைவருள்ளும் இருக்கும் லௌகீக பிடிப்பின் தளம் இந்த சுவாதிஷ்டானம்.  பிறவியெடுக்கும் ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் விட்டுசெல்லும் தடம்,  தன் சந்ததி. மனித இன தொடர்ச்சிக்கு காரணமான  இச்சையின் ஊற்று ஊறும் கிணறு, இந்த தளம். இந்த பகுதியின் ஆற்றலின்மை ஒருவனை செயலற்றவனாகவோ , அதீத ஆற்றல் காமுகனாகவோ, கீழான இச்சைகள் கொள்பவனாகவோ  மாற்றவல்லது , அச்சமும் , பதட்டமும் அடிப்படை இயல்பாக கொண்ட உடல் பகுதி என்கிறது யோக மரபு.  இது ஆசனவாயிர்க்கும் பிறப்புறுப்புக்கும் மேலே உட்பொதிந்து இருப்பதாக யோகமரபு விவரிக்கிறது. 
மூலாதாரத்தையும் , அதை அடுத்த ச்வாதிஷ்டானத்தையும் இணைக்கும் இந்த வென்முரசு  பகுதி கவனிக்கத்தக்கத்து. 
//விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்.//
 அடுத்ததாக
                                                                                   மணிப்பூரகம்
காற்றை உயிராக மாற்றும் மணிபூரகம் என்கிறது வென்முரசு. 
நாபியின் பின்னால் வயிற்றின் மையத்தில் 10 இதழ்கள் கொண்ட தாமரையாய் மலர்ந்த்திருக்கும் மலர் என்றும், தூய ரஜோ குணத்தின் வாசல் என்றும், இங்கே காற்றாக நிறையும் ஆற்றல் ஒருவரை தொடர்ந்து உயிர் வேகத்துடன் செயல்பட தூண்டுவதாகவும் யோகமரபு வரையறுக்கிறது.  தங்களுக்கென வகுத்துக்கொள்ளப்பட்ட,ஒற்றை இலக்கை நோக்கி தொடர்ந்து செயல் புரியும் வல்லமை பெறுவர் என்கிறது யோகமரபு. இந்த பகுதியில் உறையும் ஆற்றலின்மை  வெற்றி இலக்கிற்காக மூர்க்கம் கொள்ள செய்வதும்,
 மணிபூரகத்தின் ஆற்றல்,  அச்சமற்ற வீரத்தையும் தரவல்லது என்பது விதி.   விளைவுகளின் மூலம் தமோகுணமும்,ரஜோகுணமும் மாறி மாறி நிகழும் நிலம் இந்த மணிப்பூரகம்.  

தமோகுனத்தின் மூலம் ஒற்றை இலக்கை கொண்ட சிகண்டி இதன் உவமை. 
ரஜோகுனத்தின் மூலம் ஒற்றை இலக்கை கொண்ட கர்ணன் இதன் நேர்மறை உவமானம். 

//. பீஷ்மரைக் கொன்று அஸ்தினபுரியின் அழிவை நிகழ்த்தும் தமோகுணம் கொண்ட ஒரு மைந்தன் தனக்கு வேண்டும் என்று மீண்டும் கேட்டார்........ துருபதனே, முன்னரே உன் தந்தை தமோகுணம் திரண்ட மாவீரன் ஒருவனை மைந்தனாக ஏற்றிருக்கிறான். அவன் பீஷ்மரைக் கொல்வான்.//
அடுத்ததாக, 
                                                                       அனாகதம் 
குருதியை வெம்மையாக்கும் அனாகதம், ஈசான ருத்ரன் குடிகொள்ளும் ஆலயம்  என்கிறார் அகத்தியர் முதல் கனலில், 
ஜீவாத்மாவின் உறைவிடம் என்றும், நெஞ்சின் மையத்தில் உறையும் 12 இதழ் கொண்ட தாமரை,  மனித உணர்சிகளின் ஊற்றுக்கண், உணர்சிகள் பக்தியாய், அன்பாய்,சந்தோசமாய் கனியும் ஹிருதய கமலம்  என்கிறது யோகமரபு .

///ஏழு வேள்விநெருப்புகளே, கேளுங்கள். மூலாதார நெருப்பே, காமத்தை விட்டு விடு. ஓம் அவ்வாறே ஆகுக! சுவாதிஷ்டானத்தில் இருந்து பசி அகன்றுசெல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! மணிபூரகம் பிராணனை மறக்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! அநாகதம் உணர்வுகளை விட்டுவிடட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! ஆக்ஞையே, எண்ணங்களை அழித்துக்கொள். ஓம் அவ்வாறே ஆகுக! சகஸ்ரமே, இருத்தலுணர்வை விட்டு மேலெழுந்துசெல். ஓம் அவ்வாறே ஆகுக!” காஸ்யபரும் சீடர்களும் சிதையில் நெய்யை ஊற்றியபடி சொன்ன மந்திர ஓசை எங்கோ தொலைதூரத்துக் காற்றொலி என ஒலித்துக்கொண்டிருந்தது.//

வென்முரசின் இந்த வரிகள் அநாகதத்தை உணர்வுகளின் உறைவிடம் என்கிறது,                   அன்பு மேலோங்கிய அத்தனை பாத்திரங்களும் அனாகத ஆற்றலிலேயே பேசுகிறது. 


அடுத்ததாக
                                                                              விசுத்தி

தூய்மைபடுத்தல் எனும் பொருள்கொண்ட விசுத்தி எனும் சக்கரத்தின் இருப்பு உடலில் தொண்டையின் மையம் என்கிறது மரபு, ஆன்மாவின் அமிர்தம் உடலில் ஊரும் மையம் . ஊதா நிறத்தில் 16 இதழ்கள் கொண்ட தாமரையின் வடிவம் இந்த விசுத்தி. ஆன்ம சாதகன் ஒருவனின் சாதனையில் அனாகதம் வரை அடைந்த அனுபவங்கள், மறுபடியும் கீழ்நோக்கி செல்லுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம், விசுத்தியின் அனுபவம் பெற்ற  ஒருவன் இதிலிருந்த தன்னை மேல்நோக்கி உயர்த்திக்கொள்ள மட்டுமே செலுத்திக்கொள்ள, கதவுகள் அனைத்தும் திறக்கும் பகுதி, என்கிறது யோகமரபு.  மனிதனின் படைப்பு திறன், ஆணையிடும் குரல் ,செறிவான பேச்சாற்றல் போன்ற திறன் அனைத்தும் மறை பொருளாய், மங்கியோ, மிளிர்ந்தோ அமைந்துள்ள பகுதி விசுத்தி .   ஆற்றலற்ற விசுத்தி 
கள்ளுண்ட குசலன் கூட கீதை உரைப்பது போல. 
//குசலன். “தனித்த வேட்டைக்காரன் நான்! ஆறு முனைகளிலிருந்தும் அம்பெய்கிறேன். என் மூலாதாரத்தின் அம்பு தவறுகிறது. சுவாதிட்டானத்தின் அம்பு தவறுகிறது. மணிபூரகத்தின் அம்பு தவறுகிறது. அனாகதம் பிழைக்கிறது. விசுத்தி பிழைக்கிறது. ஆக்கினை நின்று தவிக்கிறது.”“ஆறாவது அம்பு சென்று தைக்கும் ஏழாவது அம்பின் நுனி. ஆம் அதுதான்…//
ஆற்றல் நிறைந்த விசுத்தி 
இளைய யாதவனின், ஒற்றை சொல்லில் விதுரன் அடங்குதல் போல.
அடுத்ததாக 
                                                                  ஆக்ஞை 
கட்டளை அல்லது ஆணை  என்று பொருள்படும்  ஆக்ஞை எனும் சொல், ஆணைகளை பிறப்பிக்கும் அல்லது பெறும் இடமான புருவத்தின் மைய பகுதியில், இரண்டு இதழ்கள் கொண்ட தாமரையாகவும் , ஞானத்தின் கண்களாகவும், நுண்ணறிவின்,தளமாகவும், உடலின் நவதுவாரங்கள் தாண்டிய 10வது நுண் துவாரமாக , 'ஓம்' என்கிற பீஜ மந்திரத்தின் இருப்பிடமாகவும் . ஆக்னா சக்கரத்தை யோகமரபு  சுட்டுகிறது. 

//பின்பு பெருங்கருணை மழையெனப்பொழிந்து மண்குளிர்ந்தது. விண்ணில் பெருகியோடின பொன்னிறமான வான்நதிகள். ஒலிகள் எழுந்து ஒன்றோடொன்று இணைந்து ஒன்றென்றாகி ஓங்காரமென ஒலித்து அமைதியில் அடங்கின. கயிலை முடி மீண்டும் குளிர்ந்தது. வெண்பனிசூடி இமயமலைமுடிகள் தங்கள் ஊழியமைதிக்குள் மீண்டும் சென்றமைந்தன. தன்னுள் தானடங்கி விழிமூடி ஊழ்கத்திலமர்ந்தான் முக்கண்ணன்.
விழிகாணாததை அவன் நுதல்கண்டுகொண்டிருந்தது. அவன் பின்னால் மெல்லடி வைத்து இளநகையுடன் இடையொசிய முலைததும்ப வந்தாள் சிவகாமி. அவனருகே குனிந்து அவன் விழிகளை ஒருகையாலும் நுதல்விழியை மறுகையாலும் மூடிக்கொண்டாள்//

இதையே நுதல் விழி என்கிறது வென்முரசு. விசுத்தியை தாண்டிய  ஆக்னையும்,சஹஷ்ரமும் மனித நிலையின் ஆகச்சிறந்த உயர் தளங்களையும், மனிதரில், விண் வாழும்,  தெய்வம் எழும் நிலையையும் சுட்டுகிறது .

//தருமன் நின்று “ஆம் தம்பி, நாம் வெல்வோம்…” என்றான். “இன்று எனக்கு அது தெரிந்தது. சுயோதனன் கர்ணனை நம்பி அத்துமீறுவான். அறம் பிழைப்பான். அதன் விளைவாக நம்மிடம் தோற்பான். ஆனால்…” அர்ஜுனன் எதிர்பார்ப்புடன் நின்றான். “தன் அறத்தால் இச்சூதன்மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி” என்றான் தருமன். பார்வையை விலக்கி தலைகுனிந்து அவன் சொன்னான் “இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்தபோது அவன் இடத்தில் என்னை வைத்து நடித்துக்கொண்டிருந்த நான் ஆழத்தில் கூசிச்சுருங்கினேன். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. இந்தப் பேரவையில் அவன் பாததூளியை தலையிலணிய சற்றும் தயங்கவில்லை. அஸ்தினபுரியின் இளவரசனாக அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாக தன்னை முன்வைத்தான். அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”//
தருமனின் நுதல் விழி மலர்ந்து , அவனில் தெய்வம் எழும் எண்ணற்ற,  அறம் வழுவாத கணங்களில் , வென்முரசின் இந்த பகுதி மிகசிறப்பான ஒன்று. 

அடுத்ததாக 

                                                                         சஹஸ்ராரம் 

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை, இதுவே பிரம்மம், இதுவே சூன்யம், இதுவே இங்குள்ள அனைத்தும், இதுவே எதுவுமற்ற ஒன்றும், இதுவே காலம் கடந்த நிலை, இதுவே பேரானந்த பெருவெளி என்கிறது யோகமரபு.  
1-   //நூறாண்டு காலம் இங்கு தவம் செய்து தன் அரவுப்புற்றில் இருந்து நாகமணியை நெற்றிப்பொட்டிற்கு எடுத்து ஆயிரம் இதழ் அலரச்செய்தவர். இங்குள தண்ணொளி அவரது சகஸ்ரத்தில் எழுந்த பெருநிலவின் ஒளியே” என்றாள். “நான் அச்சம் கொள்கிறேனடி. சென்றுவிடுவோம்” என்றாள் லதை//
2-   //ராமன் தன் விற்திறனை நிறுவ ஓர் அம்பில் ஏழு மரங்களை முறித்தான் என்றொரு கதை வருகிறது. அதற்கு நுண்ணிய வேதாந்தப் பொருள் கொள்வது வழக்கம்.”“ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன் என்பதே அதன் பொருள் என்பார்கள்” என்றார் அக்ரூரர்.//
 கோசலத்தில் ஏழு காளைகளை அடக்கும் இளைய யாதவனின் செயல் , ராகவ ராமனோடு ஒப்பிடப்படும் யோக நிலை அக்ரூரரால் விளக்கப்படும் ஏழு காளைகளும் யோகசக்கர குறியீடுகளே,
 ஒவ்வொரு ஆன்ம சாதகனின் பரம்பொருள் தேடலின் ஒற்றை இலக்கு இந்த சஹஷ்ரம். என்பதை மேலே சொன்ன வரிகளின் மூலம் வென்முரசு சுட்டுகிறது. 
வென்முரசு வாசிப்பில் இவ்வகையான யோக, குறியீட்டு, முறையிலான வாசிப்பிற்கு பின் ஒவ்வொரு கதை மாந்தரும் இனி எந்த நிலையிலிருந்து தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் என்றும் , எந்த உணர்வு நிலையிலிருந்து இயங்குகிறார்கள் என்றும் இன்னும் நுட்பமாக, ஆழ்ந்து படிக்க என் ஆவல் தூண்டபடுகிறது. 
இது  எளிய வாசிப்பாக கூட இருக்கலாம், ஆனால் நான் இப்படியெல்லாம் வாசிப்பேன் என்பதே என்னளவிலான  மிகப்பெரிய சாதனை தான். 
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள, வென்முரசில் ஏராளமாக கொட்டிக்கிடக்கிறது ...இந்த சிறு கைகளால் அள்ள முடிந்ததை முயற்ச்சிக்கிறேன்...
வியாசனின் பெரும் கருணை துணை நிற்கட்டும்.....
அவ்வாறே ஆகுக 
ஓம்......ஓம்....ஓம்......
அன்புடன்
சௌந்தர்