அக்காட்சி எதனுடனும் தொடர்புகொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா? ஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு. (காண்டீபம்- 38)
இந்த மனதிடம் மாட்டிக்கொண்டு நாம் படும் அவஸ்தை இருக்கிறதே அதற்கு ஈடானது எதுவும் இல்லை. எதை செய்யும்போதும் இது ஓயாத எண்ணங்களை எழுப்பும். ஒரு கனியை சுவைக்கிறோம் என வைத்துக்கொள்ளுவோம். அதைச் சுவைக்கும் போது மற்ற சுவையை நினைவுபடுத்தி ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளும். இதற்கு முன் என்றோ சுவைத்தது போல் இது இல்லை என வெறுப்பு, இன்னும் இது சுவையாக இருந்திருக்கலாமோ என எதிர்பார்ப்பு, மற்றவர்கள் இதை முன்னரே சுவைத்திருப்பார்களோ என ஒரு ஏக்கம், இதை சுவைக்காமல் இருந்திருக்கலாமோ என ஒரு குழப்பம், இதைச் சுவைப்பதால் நான் குறைபட்டவனோ என்ற ஒரு தயக்கம், இது சரியா என ஒரு சந்தேகம், தவறு என்றால் எப்படி தப்பித்துக்கொள்வது என்ற தந்திரம், எனக்கு இதை சுவைக்க வாய்திருக்கிறதே என்ற அகம்பாவம், இவ்வளவு நாள் கிடைக்காமல் போய்விட்டதே என்ற தன்னிரக்கம், மற்றொருவன் முன்னரே சுவைத்துவிட்டானே என்ற பொறாமை, இதை மறுபடி சுவைக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம், இன்னும் வேண்டும்போதெல்லாம் கிடைக்குமோ என்ற பேராசை, இவ்வளவு தான் சுவையா என்ற சலிப்பு, இதற்குள் தீர்ந்துவிட்டதே என்ற போதாமை, சரியாக சுவைக்கவில்லையோ என்ற ஐயம், யாராவது பார்த்து இதில் பங்கு கேட்டுவிடுவார்களோ என்று கொள்ளும் மறைவு, பின்னர் இதனால் துன்பம் வருமோ என்ற கவலை என எத்தனை எண்ணங்கள்.
ஒரு சுவைத்தலின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தடுப்பது இந்த ஓயாத எண்ணங்கள் அல்லவா? அனைத்து எண்ணங்களை ஒதுக்கிவைத்து சுவைக்க முடிந்தால் மட்டுமே நாம் சுவைப்பதின் இன்பத்தை உண்மையாக உணர்கிறோம். எண்ணங்களற்ற சுவைத்தலில்தான் உண்மையில் நாம் சுவைக்கிறோம்.
ஒரு குளத்து நீரை பாசிப்பரப்பு மூடியிருப்பதைபோல் நம் இருப்பை எண்ணங்கள் மூடி இருக்கின்றன பாசியினை விலக்குவதுபோல் நம் எண்ணங்களை விலக்கும் போதுதான் நம் இருப்பை உணர்கிறோம். படர்ந்திருக்கும் எண்ணங்கள் என்ற பாசிப்பரப்பை அகற்றும் போது நாம் நம் இருத்தலை உணர்கிறோம். ஒரு குழந்தை தன் இருத்தலை எப்படி அனுபவிக்கிறது பாருங்கள். அக்குழந்தை கொள்ளும் அந்த மகிழ்வு, ஆயிரம் பொருட்களை அடைந்து அனுபவிக்கும் நமக்கு கிடைக்காமல் போவது, இந்த எண்ணக் கூட்டத்தின் நடுவே நாம் நம் இருப்பின் உணர்வை தொலைத்துவிடுவதால்தான்.
தண்டபாணி துரைவேல்