Monday, October 26, 2015

உணர்வெழுத்து

வெண்முரசின் சிறப்பம்சங்களில் ஒன்று மனித மனம் கொள்ளும் உணர்வுகளைக் கச்சிதமான வார்த்தைகளாக்குவது. அது அத்தனை எளிதல்ல. அது அகத்தைப் புறமாக்குவது. அனுபவங்கள் வார்த்தைகளாகும் போது நீர்த்துப் போவது தான் இயல்பு. அவ்வாறல்லாமல் மேலும் கூர்மையாக்கி, அதே அனுபவத்தை மீட்டு அளிப்பது என்பது மகத்தான சாதனை. வெண்முரசு அதைச் சத்தமேயில்லாமல் செய்து செல்கிறது.
காண்டீபம் 38 ம் அத்தியாயத்தில் அர்ஜுனன் கூற்றாக வரும் இவ்வரிகள் அத்தகைய ஓர் சாதனையின் சான்று. “வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா? ஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்றுஉணர்வதே.” 

என்ன ஒரு வரிகள்!!! அர்ஜுனன் உலூபியை வெல்ல ஏழு பாதாளங்களில் மேலேறி வரும் அத்தியாயத்தில் கடைசி உலகத்தின் மையத்தை நோக்கிச் செல்லும் போது அவன் ‘இங்குள்ளேன்’ என்று கூறுவான். ‘இங்கிருக்கிறேன்’, ‘உள்ளேன்’ என்று பல இடங்களில் ஒரு சொல்லாக இவ்வார்த்தைகள் வெண்முரசு முழுவதிலும் வந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் அவை எனக்கு முழுப் பொருளையும் அளிக்கவில்லை. இத்தனை நாட்களிலும் ஏன் அச்சொற்கள் அவ்விடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று குழம்பிக் கொண்டே இருந்திருக்கிறேன். இன்று அதற்கு ஒரு தெளிவு கிட்டியது.

‘உள்ளேன்’ என்ற சொல், இருத்தல் என்பதை மட்டுமே உணர்ந்த சித்தமாக, அசையாமல் அச்சொல்லாகவே மாறிய ஒன்றாக, அந்தமிலா ஆனந்தத்தில் திளைத்ததாக இருப்பதையே குறிக்கிறது. ‘இங்கிருக்கிறேன்’ என்றோ ‘இங்குளேன்’ என்றோ கூறும் போது அவ்வுணர்வு இன்னும் இன்னும் கூர்மை கொள்கிறது. நிர்மலமான வானை தெய்வங்களும் விரும்பும் அல்லவா!! இந்த நிலையை அடையத் தானே அத்தனை சாதகர்களும் தவமிருக்கின்றனர். சொல்லள்ளி சொல்லள்ளி சொன்னதெல்லாம் இந்த ஒற்றைச் சொல்லாகத் தானே!! 

என்னளவில் ஓங்கி உயர்ந்த பனி மூடிய மலைகள் என்னில் இந்த தூய இன்ப நிலையைக் கிளர்த்தியிருக்கின்றன. காண்டீபத்தின் இந்த வரிகள், பனி மூடிய சிகரங்கள் ஆழத்து நீரில் முகம் பார்த்து, தன்னொளியால் நடு இரவை அந்தியாக்கிய தருணத்தில், திரை விலகி வெளிவந்த பிறை நிலவைக் கண்டு மெய்மறந்து நின்ற அந்த குளிர் இரவின் அனுபவத்தை அப்படியே இவ்வரிகள் எனக்கு மீட்டளித்தன.

பார்த்தன் அவ்வுணர்வை ஒரு தித்திப்பாக உணர்ந்தேன் என்கிறான். கடலூர் சீனு சொல்வதைப் போல என்ன ஒரு அருமையான சொல் தேர்வு!! இனிப்பை உண்ணும் போது ஒவ்வொரு இனிப்பின் தன்மைக்கு ஏற்ப தித்திப்பை நம் உணவுப்பாதையின் ஒவ்வொரு பகுதியில் உணர இயலும். தாமிரபரணி நீரைக் குடிக்கையில் தித்திப்பை நெஞ்சில் உணரலாம். நெல்லியின் தித்திப்பு அடித்தொண்டையில். தித்திப்பு என்பது அனுபவிக்கத் துவங்குகையிலேயே மறையும் உணர்வு. நினைவில் மீட்ட இயலா உணர்வு. இனிப்பை நினவுறலாம், மனத்தால் இனிப்பு தரும் சுவையை உணர்ந்து நாவூறலாம். ஆனால் தித்திப்பை அனுபவிக்க மட்டுமே இயலும். இங்கே அவன் உடலே நாவாக மாறி தித்திப்பை அனுபவிக்கிறான். 

ஆனந்தம் என்பது அப்படியே இருக்குமா என்ன? அல்லது அந்த ஆனந்தத்தில் தான் நிலைத்து விட இயலுமா!! மலையுச்சியிலேயே வாழ இயலாது என்று தானே வெண்முரசும் சொல்கிறது. சில கணங்களே நீடிக்கும் அவ்வுணர்வு நமக்குத் தரும் ஆற்றல் அபரிமிதமானது. அக்கணங்களுக்குப் பிறகு வருவது ஓர் ஏக்கம்!!! இனிய ஏக்கம்!! ‘முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா?’. இக்கேள்வியிலேயே பதிலும் உள்ளது. நினைவுகளைத் துரத்தி அழகை அனுபவிக்க இயலுமா? தித்திப்பு என்ற சொல்லை உணர்ந்த தருணத்திலேயே இணைத்து அவன் சித்ராங்கதையை நினைவு கூறுகிறான். மனம் பொங்கி வழியும் போது அதைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணையைத் தேடும். பெரும்பாலும் அத்துணை மீண்டும் வரச் சாத்தியமில்லாத இறந்த காலத்திலேயே இருப்பது மனதின் மந்தணம். இழப்பின் ஏக்கம் என்பது மனதின் சிவமூலி. 

இவ்வரிகளைப் படிக்கும் போதே மனதில் வந்த மற்றொரு தருணம், மழைப்பாடலில் தேவயானியின் மணிமுடி வழங்கப்பட்ட குந்தியின் மகிழ்ச்சி!! முடிசூடிய மறுநாள் காலை கங்கைக்கு ஓர் சடங்குமுறைக்காகச் செல்லும் குந்தி உணரும் மகிழ்ச்சியைப் பற்றிய பின்வரும் வரிகள். 

மகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள்   ல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல்.கழுவிய   பளிங்குப்பரப்பு போல துல்லியமா. இருக்கிறோமென்ற உணர்வு  மட்டுமே இருப்பாக.ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள்.அனைத்தும்   பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க   காலம் அதன்முன்அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.
மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோலநிகழவேண்டும். எப்படி இது   நிகழ்ந்தது என்ற வியப்பையும் னைத்தும் இப்படித்தானே என்ற  அறிதலையும்இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல்அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின்மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம்போல. இந்தக்  காலைநேரம் போல.” 
.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்