Wednesday, October 28, 2015

வெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்



கோவையில் இரண்டாவது கூடுகையாக வெண்முரசு கலந்துரையாடல் விஜயசூரியனின் இல்லத்தில் நடைப்பெற்றது.

இந்த கூடுகை ஒவ்வொரு வாசகரும் தனக்கு வெண்முரசு ஏற்படுத்திய பாதிப்பையும் அதன் தாக்கத்தையும் பேசுவதாகவும், இதன் மூலம் தாங்கள் தங்கள் கடந்து வந்த வாழ்க்கையின் பாதைகளையும், நிகர் வாழ்க்கை வாழவும் வகை செய்யும் கூறுகளையும் பேச முற்பட்டார்கள்.
மேலும் வெண்முரசின் ஒரு அம்சம் உதாரணமாக குல வரலாறு, நகர் அமைப்புகள், நிலக்காட்சிகள் என்று மட்டும் கட்டுரையாக எதிர்வரும் காலங்களில் படிக்காமல் ஒட்டு மொத்த பார்வையாக கட்டுரை எழுதலாம் எனவும் பேசினார்கள்.

இதில் புதியவர்களின் கருத்துக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் பார்வையாக முதலில் அவர்களை பேசச் செய்து பின் எல்லோரும் கலந்துரையாடலாம் எனவும் பின் வரும் கூட்டங்களில் கட்டுரைகளை படிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
குணா- இவர் தனக்கு. தனி பாத்திரங்களின் வடிவமைப்பு, அந்த கதாபாத்திரத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை கூறுகளை சொல்லும முறையும், காலப்போக்கில் ஒரு கதாபாத்திரம் சென்றடையும் இடமும் எதுவும் வாழ்வில் நிலையற்ற தன்மை பெற்றிருப்பதையம் வெண்முரசிலிருந்து அறிந்து கொள்வதாக சொன்னார்.

சுந்தர் ராஜன் – இவர், தனக்கு வெண்முரசின் நிலக்காட்சி விவரணைகள் ஆற்று பிரயாண போக்குவரத்து முறைமைகள் அதை சார்ந்த பொருளாதாரம், வாணிபம், அரசியல், நகர விவரணைகள், ஆகியவை மிகவும் ஈர்ப்பதாகவும் கூறினார்.

ராஜாராம் – இவர், மூல மகாபாரதத்திலிருந்து வெண்முரசு பல இடங்களில் பிரிந்தும் நகர்ந்தும் செல்வது ஏன்? எனவும், காண்டீப நாவலில் ஐந்து சுனைகளில் அர்ஜீனனை நோக்கி வரும் ஐந்து கேள்விகளை புரிந்து கொள்வது சிரம்மாக இருந்ததாகவம் சொல்லவும், அதைப்பற்றி விவரணைகள் கொடுக்கப்பட அது மிகவும் விரிவடைந்து செல்லவே, இதை மட்டும் அடுத்த கூட்டத்தில் வாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.


விஜயசூரியன் – தனக்கு வெண்முரசை படிப்பதற்கு முதலில் ஒருவரை கருப்பு வெள்ளையாக அவர்களின் இயல்புகளை பகுத்து கொண்டதை தவிர்த்து அவர்களின் சூழ்நிலையிலிருந்து பார்க்கும் கோணத்தையும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகள் எதனால் எடுக்கிறார்கள் என்னும் பாகுபாட்டையும் உய்த்து அறிந்து கொள்ள முடிகிறது, அதனால் முதலில் ஏற்பட்ட வெறுப்பு நீங்கி அவர்களின் செயல் எதனால் செய்யப்பட்டது என்ற புரிதலால் பரிவுகூட ஏற்படுகிறது என்றார்.

செந்தில் – முதற்கனலில் நாகர்களின் சரித்திரமாக ஆரம்பித்து வெண்முரசு தொடங்குகிறது. இதன் மேம்பட்ட விவரணையை மேலும் அதிகமாக அனுபவிக்க பல்வேறுபட்ட பாரத கதைகளான ஸ்ரீஜெயா, ராஜாஜியின் பாரதம், சோ எழுதியது ஆகியவைகளையும் படித்தால் நல்லது என்றார்.

மேலும் எல்ல புத்தகங்களும் மகாபாரத நிகழ்வுகளை மட்டும் சொல்லி போகும் போது ஐராவதி கார்வே எழுதிய ”யுகாந்தா” மட்டும் மகாபாரத கதை பாத்திரங்கள் தங்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஏன் அங்ஙனம் செய்தார்கள் எதனால் அப்படி நடந்தார்கள் எனும் கேள்வியையும் எழுப்பி அதற்கு பதிலும் சொல்கிறது என்றார்.

மேலும், வெண்முரசுவில் வரும் கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நிகழும் நெருக்கடிகளையும், சிக்கல்களையும், நுட்பமாகவும் குவித்தும் சொல்லிவிட்டு பின்பு காட்சி அமைப்பை உயர்தி ஊர் மற்றும் நாடு ஆகியவைகளை பறவை பார்வையாக காட்டும் போது தனி மனித பிரச்சனைகளின் அர்த்தமற்ற போக்கை சொல்லிச் செல்வதை ரசித்து பாராட்டினார்.

இந்த குறிப்பை சுரேஷீம் விஜயராகவனும் ஓப்புக்கொண்டு மற்ற புத்தகங்களை படித்திருந்தால் ஒப்பு நோக்கவும், மேம்பட்ட வாசிப்பு அனுபவத்திற்கும் ஏதுவாகும் என்றனர்.

ராதகிருஷண்ன் – தொடர்ந்து வாசிப்பின்பத்திற்காக வெண்முரசை படித்துக்  கொண்டிருப்பதாகவும். தொழில் நிமித்தமாக விட்டுவிட்டும் படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். சகோதரிகளான அம்பிகையும் அம்பாலிகையும் அரசு சூழ்தல் போராட்டத்தில் இரு துருவங்களாக இருந்தவர்கள் முடிவில் வாழ்கையின் பொருளற்ற தன்மையை உணர்ந்து சத்தியவதியுடன் வனவாசம் செல்வது மிக ரசிக்கத்தக்கதாக இருந்ததாக சொன்னார்

சந்திரசேரன் – வெண்முரசில் வரும் அரசியல் நிலைகளை விவரிப்பது, தற்போதைய அரசியல் சூழல்களை காட்டுவது போலவே உள்ளதால் ரசிக்க முடிகிறது என்றும், இதில் வரும், போர்காட்சிகள் வியூகங்கள், ஆகியவைகளின் பிரமாண்டமும், விவரணைகளும் தத்ரூபமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது எனவும், மேலும், இதில் வரும் இணைபாத்திரங்களாக
துருபதன்  x  துரோணர்
அர்ஜீனன்  x  கர்ணன்
துரியோதனன் x பீமன்
கிருஷ்ணன் x சததன்வா
திருஷ்ட்தயும்னன் x கிருதவர்மன்

ஆகியோரின் பாத்திரபடைப்பில் சமநிலை பேணுவதை சிலாகித்தார். இதில் போர் இயந்திரங்கள், போர் பொறிகள் ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை பற்றியும் அதன் ஆரம்ப படிநிலைகள் எவ்விதமிருந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்
சகுனியின் வீழ்ச்சியின் கணத்தை

 அவன் கால் ஒநாயால் கடிபடுமிடமிருந்து தொடங்குகிறது என கூறிவிட்டு ஒருவர் மேல் மதிப்பும் மரியாதையும் விலக்கம் கொள்ளுமிடம் என துரோணர் துருபதனிடம் போலித்தனமாக பேச ஆரம்பிப்பதை பார்த்த அர்ஜீனன் கொள்ளும் விலக்க புள்ளியாக விவரித்தார்.

ரத்தீஷ் – வெண்முரசில் வரும் தொடர் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விவரித்தார். சித்ரகர்ணி எனும் சிங்கம், பசுவை கொல்ல, அதன் வலதுகண் குறைப்பட்டிருப்பதை ஒரு அத்தியாயத்தில் சொல்லி விட்டு பின்பு வேறு அத்தியாயத்தில் அது ஏன் அதன் கண் பழுது பட்டிருக்கிறது என்பதற்கான விடையாக செம்பருந்து கொத்திகண்ணை காயப்படுத்தியதையும், அச்செம்பருந்தை குஹ்யஜாதை எனும் பெண் ஒநாயின் மகனான குஹ்யசிரஸ் வேறு ஒரு இடத்தில் உண்டு கொண்டிருப்பதையும் சொல்லி வாழ்வின் போக்கை போலவே இது உள்ளதாகவும், இத்துடன் கதை மாந்தர்களான சகுனி, காந்தாரி ஆகியோரின் வாழ்வு பின்னி பிணைந்துள்ளதையும் சுட்டிகாட்டினார்.

மேலும் இவர் மண நிகழ்வுகளின் மூலம் அரசியல் வலுப்பெறுதலையும், எதிராளியை பலவீனப்படுத்துதலையும் சுட்டி காட்டி அது இன்றைய அரசியலுடன் ஒத்துப் போவதையும் கூறினார்

விஜயராகவன் – காண்டீபத்தில் அர்ஜீன்ன் பயணத்தை புறப்பயணமாக பார்க்கும் அதே நேரத்தில் அகப் பயணமாகவும் ஜனனேந்திரியங்களில் 7 சக்கரங்களையும் இடமளிப்பதையும், ஐவகை பிராணன்களையும் உருவகப்படுத்தி இருப்பதையம். உலூபி மண முடிக்கும் காதையில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

குணா - பாத்திரங்கள் அறம் மீறிய அல்லது தங்களது இயல்பான குணநலனிலிருந்து மாறி செயல்புரியும் போது ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்குமளவிற்கு போகிறார்கள் என வினா எழுப்பினார்
இதற்கு அகங்காரம் மிக்க ஆக்கமும் வீரமும் உள்ள பாத்திரங்கள் தங்கள் அறத்திலிருந்து பிறழும் போது அதை அவர்களின் பிரதி பிம்பமே ஒப்புக் கொள்ள மறுக்கிறது அதனால் அவர்களின் புற மற்றம் அக வீழ்ச்சி மிக கடுமையாக உள்ளது என விபரம் தரப்பட்டது.
உதாரணம் துரோணர், காம்பில்ய போருக்கு பின் கர்ணன்.

மேலும் சந்திரசேரன், சித்ராங்கதனாகவும், பால்கணையாகவும் விவரித்து, ஒவ்வொரு ஆணிலும் உள்ள பெண் பாகத்தையும், ஒவ்வொரு பெண்ணிலும் உள்ள ஆண் பாகத்தையம் விவரிப்பதாகவும் எடுத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது எனவும் சொன்னார்

மீனாம்பிகை – ஒட்டு மொத்தமாக வாசிப்பின்பம் கொடுக்கும் ஆக்கமாக வெண்முரசு வரிசையை படித்து வருவதாகவும், எதிர் கருத்தாக வெண்முரசு மூல மகபாரத்திலிருந்து விலகி செல்வதாக சொன்னபோது அதற்கு பதிலாக இவர் காளிதாசனுக்கம், வில்லிபுத்தூராருக்கும் கற்பனையின் மூலத்திலிருந்து விலகுவதற்கு இடமிருக்கும் போது வெண்முரசிற்கும் அந்த இடம் தாராளமாக உண்டு என கூறினார்
.
சுரேஷ் – ஒரு மாபெரும் காவியம் எழுதப்படும் போது கட்டாயம் கால வழு போன்ற சிறிய பிரச்சனைகளை கவனிக்க வேண்டியதில்லை என்றார். ஆடிப்பாவைகள் என தங்களின் அந்தராத்மாவை ஆசிரியர் விவரிப்பதையும், சிறுகதையான கடைசி முகத்தில் ஆரம்பித்து சித்ராங்கதன் x சத்தியவதி மற்றும் அர்ஜீன்ன் x குந்தி ஆகியோர்களின் கேள்விகள் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் கேள்விகளாக ஐந்து சுனைகளிலும், சத்தியவதியும் சுனையில் விவரிப்பதையும், இதே இக்கட்டு விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷ்ண்ணுக்கும் லட்சுமிக்கும் வருவதையும் எடுத்துக் காட்டினார். இதற்கு, எல்லா மகத்தான எழுத்தாளர்களுக்கும் இந்த ஒற்றை சரடு அவர்கள் எழுதிய எல்லா ஆக்கங்களிலும் தொடர்வதை விஜயராகவன் சுட்டினார். உதாரணம், தாஸ்தாஸ்வஸ்கி, டால்ஸ்டாய், ஜெயமோகனின் நீலி வடிவம் பல கதைகளில் தொடர்வது..

மேலும் சுரேஷ் பேசும் போது. தமிழ் இலக்கிய பரப்பில் வரும் மிக பிரமாண்டமான படைப்பு வெண்முரசு தொடராகும். இதை பற்றி ஆக்க பூர்வமான, பொருட்படுத்தக்க விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இதன் வடிவத்தை பார்த்தே படிக்காமல் விம்ர்சிப்பது வருந்தக்கது. அதை பொருட்படுத் தேவையில்லை.

ஆனால் எந்த ஒரு ஆக்கத்திற்கம் நேர்மறையான, ஆக்கபூர்வமான விமர்சனம் தேவை. வெறும் விதந்தோதுதலும், நயம் பாரட்டுதலும் மட்டும் போதாது என்றார்.

அதற்கு மீனாம்பிகையும் விஜயராகவனும் விஜயசூரியனும் அவ்வாறான பொருட்படுத்த தக்க விமர்சனம் ஏதும் உண்டா? என கேட்க
.
சுரேஷ் தினமும் இரவு 12.30 மணிக்கே படித்து முடிக்கும் வாசகரும் விமர்சகருமான ஒருவர், வெண்முரசின் மொத்த தொகுப்பும், ஜெ. இதுவரைதான எழுதியவற்றையெ மீண்டும் தொகுக்கிறார் (SUM UM BONUM)  என கூறுவதாக சொல்ல,

அதற்கு வாழ்வில் எதுவுமே புதுமைகள் இல்லை, அதேபோல் வாழ்வில் எல்லாமே புதுமைதான் என சொல்லப்படுவதுண்டு என எதிர் கருத்து வைக்கப்பட்டது.

இரண்டாவதாக வெண்முரசின் மூலம் ஒரு அகண்ட கலாச்சார ஒருமித்த இந்தியதன்மையை வைக்க முற்படுவதாகவும், விமர்சனம் எழுகிறது என்றார்.

இதற்கு ஒரு ஆக்கம் முழுமைபெற்ற பின்பே இறுதியான விமர்சனம் வைக்க முடியும், தொடர்ந்து கொண்டிருக்கும் போது இப்படி சொல்ல முடியாது, மேலும் தற்போது இங்கு விவாதிக்கும் நண்பர்கள் விமர்சிக்க ஏதும் உண்டா என கேள்வி எழுப்ப, அதற்கு செந்தில் படைப்பூக்கத்தின் வாசிப்பு இன்பத்திலோ, கதை போக்கிலோ எந்த விமர்சனமும் சொல்ல இயலாத அளவில் சீராக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நகர் விவரிப்பு, உண்டாட்டுகள், ஜோடனை போன்ற அலங்காரங்களை விவரிக்கும் போது மிகவும் நுண் விவரிப்பு அடிக்கடி வருவது விமர்சனமாக உள்ளது என்றார்.

சுரேஷ், அது வரை மிக உயர்வாகவும் சமநிலையுடனும் விவரிக்கப்பட்ட குந்தியின் பாத்திரப்படைப்பு சௌவீர மணிமுடியை சூடிக் கொண்டதாக கீழிறக்கப்படுதல், கௌரவ பாண்டவர் சமநிலையை பேணுவதற்காக இருக்கலாம், இது நெருடலாக உள்ளது என்றார். இதற்கு மீனாம்பிகை எந்த காரணமுமின்றி ஒருவர் தன் அறத்தை மீறி கீழ்மையாகவும், அதுவரை கீழ்மையாக இருந்த ஒருவர் மேன்மையாகவும் நடப்பது வாழ்வில் இயல்பு என்றார்.

இத்துடன் விவாதம் நிறைவுக்கு வந்தது, அடுத்த கூட்டத்தில் ரித்தீஷ் கட்டுரை வாசிப்பதாகவும், சுனையின் 5 கேள்விகள் பற்றியும் விஜயசூரியன் பேசுவார் என முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் 15-11-2015 வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த கூடுகை முடிந்த மதியம் 1.30 மணியளவில் எல்லோருக்கும் (12 பேர்) விஜயசூரியனின் மனைவி அன்போடு அறுசுகை உணவிட்டார்கள், மகிழ்வோடு உண்டுவிட்டு கூடுகை முடிந்து வந்தோம்.