Tuesday, October 27, 2015

போரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)


   ரைவதகரின் நாட்டு மக்கள் கண்டர்களின் படையினரால் கொன்று அழிக்கப்படும் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. கண்டர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு அறம் என்ற ஒன்று கிடையாதா? இது அவர்களின் படையினருக்கு மட்டுமே உரித்தான கொடுங்குணமா?

  ஒரு நாட்டின் படை என்பது ஒரு யானையைப்போன்றது.  அதன் தேவைக்கேற்ப உணவளித்து பராமரித்துவந்தால் அது மிகுந்த பலமும் விசுவாசமும் நிறைந்ததாக இருக்கும். அந்நாட்டு மக்கள் அதனிடம் பிரியமும் மரியாதையும் வைத்திருப்பர். அதனுடைய இருப்பு அவர்களுக்கு பாதுகாப்புணர்வை தரும்.  ஆனால் அதே  படை  பகை நாட்டின் உள் நுழைந்து போரிடும்போது மதயானையாக மாறி கொடுமைகளை நிகழ்த்தும். கண்ணில் படுபவரை காலில் போட்டு நசுக்கும். எதிர் வருபவன் வீரனா, வயோதிகனா, குழந்தையா, பெண்ணா, எனப் பார்க்காது.   நல்லது, கெட்டது, தருமம், இரக்கம்  அனைத்தும் அதன் கண்களுக்கு தெரிவதில்லை.


     படை வீரன் ஒவ்வொருவனும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன். ஆனால் எதிரிகளின் நாட்டில் எந்த தயக்கமுமின்றி வயோதிகரை,  ஒரு பெண்ணை, ஒரு இளங் குழந்தையை, கொடூரமாக கொல்கிறான். அந்தச் செயலில் எந்த உறுத்தலும் இல்லாமல் களி வெறியுடன் ஈடுபடுகிறான். அங்கே அப்போது அனைத்து தருமங்களும் கொல்லப்படுகின்றன. என்னவாயிற்று அவனுள் இருந்த மனிதத்திற்கு?  ஏன் விலங்கினும் கேடாக நடந்துகொள்கிறான்? அவனுள் வாழ்ந்த அறத்தேவதை எங்கு சென்று ஒளிந்து கொண்டாள்? 


   இது ஏதோ ஒரு படை, எங்கோ  செய்த அழிவல்ல. வாதாபி கொண்டான் என்ற பட்டப்பெயருக்கான  சண்டையிலிருந்து, மாற்று நாட்டில்  அமைதி காப்புக்கென செய்யப்பட்ட சண்டை வரை நம் படை வீரர்களும்  அவ்வாறு நடந்து  கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறார்கள்.  உலக அமைதி, சகோதரத்துவம் பேசிய மதத் தலைவர்  வழி நடத்திய படை,     அன்பு, இரக்கம், மன்னிப்பின் நாயகனின் அருள் பரப்ப எழுந்த படை,     அஹிம்சை கருணை இரு கண்களெனகொண்டவரின் வழி வந்த நாட்டின் படை அனைத்தும் இவ்வாறு அநீதிகளை இழைத்தவைதான்.  ஏன் சொந்த நாட்டில் கலவரத்தை அடக்க,  கொள்ளையனை பிடிக்க, தீவிரவாதத்தை அடக்க என  சென்ற படையின் மீது கூட இந்தக்  குற்றச்சாட்டுகள் உண்டு. போர்வீரர்களுக்கு அப்போது என்னவாகிறது?   அவர்கள் அப்போது இறப்பின் கோர வாயின் உள்ளிருந்து நழுவி  வந்தவர்கள் என்பதாலா?  தன்னுடன் போரிட்ட நண்பர்களை இழந்த கோபமா? அடுத்த கணத்தைப் பற்றிய நிச்சயமின்மையா?   கண்ணெதிரே கண்ட இறப்புகள் தந்த விரத்தியா? எதிர் வருபவர்களில் எதிரியை மட்டுமே காணும் அச்சமா?  வெற்றி தந்த பேரகங்காரமா?
     

இவை அனைத்தும்  கலந்த ஏதோ ஒன்று மனிதனின் மனதில் கொடுமையை நிறைக்கிறது. ஆகவே ஒரு சிறந்த அரசு தன் நாட்டை  போரில் வீழாமல்   பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தலைவன் தன் மக்களை போருக்குள் புகுத்தி விடக்கூடாது. எதோ ஒரு படையின் பிடிக்குள் தன் மக்களை ஆழ்த்திய தலைவன் மக்களுக்கு பெருந்துயரத்தை இழைக்கிறான். நாட்டின் நன்மைக்காக எனச் சொல்லி  ஆயுதம் தூக்கும் ஒருவன்  போரை தன் நாட்டின் மக்கள்மீது சுமத்துகிறான். எதிரி ராணுவத்திற்கு தன் கொடுமைகளை செய்ய அவன் அழைப்புவிடுக்கிறான். மக்கள் நடுவே அமர்ந்துகொண்டு சில வீரர்களை அனுப்பி எதிரிக்கு சேதம் விளவித்து போராடும் தலைவர்கள் நாம் வீர நாயகர்கள் எனக் கொண்டாடுகிறோம். அவர்களை சிங்கங்கள்  என நாம் பாராட்டி சிலிர்த்துக்கொள்ளலாம். ஆனால் தன் நாட்டு மக்களை எளிய முயல்களாக  எதிரிப்படையின் வேட்டை நாய்களுக்கு உணவாக்கியவர்கள்  அவர்கள்.    நாம் ஒரு வீர நாயகனை கொண்டாடும் முன்னர் அவன் செய்கையால எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், எத்தனைபேர் கொடும் துயரங்களை அனுபவித்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவனால்  கொல்லப்பட்டவர்கள், அவனை கொல்வதற்காக அவன் எதிரிகளால் அழிக்கப்பட்டவர்கள் என இருபக்கமும் விழுந்த பலர் பிணங்களின் மேல்தான் ஒரு வீர நாயகன் அமர்ந்திருக்கிறான்.

    அனைவருக்கும் நன்மைதரும் போர் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே நேரத்தில் போர் நம் மீது திணிக்கும்போது வேறு வழியில்லை நாம் போரிட்டுதான் ஆகவேண்டும். ஒரு நல்ல தலைவன் போரை தவிர்ப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்தபிறகு, அனைத்து மக்களின் நன்மைக்காக அவர்களின் ஒப்புதலைப்பெற்றுக்கொண்டு தான் போருக்கு செல்ல வேண்டும். முழு வெற்றிக்கு சாத்தியமிருக்கிறதா என ஆய்ந்து தெளிந்தபின்னர்தான் அவன் போரை துவக்க வேண்டும்.    ரைவதகன்  முதலில் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமால், திறனில்லாம, போரில் ஈடுபட்டு, தன் மக்களை போரில் பலிகொடுத்துவிடுகிறான். அதே ரைவதகன் தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டு போரில் வெற்றி பெறுகிறான். ஆக போரில் நுழையும் ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த  விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது வீண் அகங்காரத்திற்காகவோ,  வேறு வழிகளை பரிசீலிக்காமலோ இருத்தல் மிகப்பெரிய தவறு ஆகும்.வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதில் மட்டும் அறத்தை காப்பதற்கென்று, தன் மக்களை காப்பதற்கென்று மட்டுமே ஒரு போர் நடத்தப்படவேண்டும்.

தண்டபாணி துரைவேல்