Tuesday, October 13, 2015

ஞானபீடச்சக்கரம்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

சுய இயல்பு உடையவர் ஆதல் என்பது மீண்டும் பிறத்தல்! மீண்டும் பிறத்தல் என்பது எளிதானதா? அப்படி ஒரு தருணம் வரும்போது அகம் அஞ்சி, குலைந்து தவிக்கிறது, தப்பித்து ஓடிவிட நினைக்கிறது. தனது புனைவுகளை சூடி மீண்டும் நடிக்கவே விரும்புகின்றது.

பெரும்சுமைகளை புனைவுகளை சூடி நடிக்க தொடங்க முதலில் கஷ்டப்படவேண்டி உள்ளது. நடிக்கத்தொடங்கியப்பின்பு நடிப்பது எளிதாகிவிடுகிறது. சுயத்தில் இருப்பது பெரும் சுமையாகிவிடுகிறது. ஃபால்குனையால் அணைக்படும் சித்ராங்கதன் தனது சுயத்திற்குள் நுழையும் தருணத்தில் அஞ்சிவிளகுகின்றான். மீண்டும் தனது கால்குறடுகளை கவசங்களை தோள்வளைகளை அணிந்து நடிக்கவே விரும்புகின்றான்.
“வா” என்ற ஒற்றைச்சொல்லில் நான் நீ, இளவரசன், ஆடல்மகள் என்ற எல்லையை உடைத்து எரியும் ஃபால்குனையால் மனத்தடாகத்தில் குதித்து தனது சுயமாகிய பெண்ணாகிறான் சித்தராங்கதன் என்னும் சித்ராங்கதை.

பெண்கள்மீதுதான் எத்தனை எத்தனை வெளிப்புனைவுகள், அவைகள் அனைத்தும் பெண்களை பெண்களாக இருக்கவிடாமல் செய்ய புனையப்பட்டவை. அவைகளை களைந்து பறக்கவிடும்போதே பெண் பெண்ணாகிறாள். கவசம் என்றும், அணிமணி என்றும், பட்டென்றும் அனைத்தும் பெண்ணை பூட்டிவைக்கின்றன என்பதை சித்ராங்கதன் பாத்திரம் காட்டிச்செல்கிறது. பெண்கள் அவைகளை துறந்து வெளிவரும்போது மனத்தடாகத்தில் பெண் தனது இனிமைக்காக காமத்திற்காக விழைவிற்காக உடல்கொண்டு வாழ்தலின் அர்த்தத்தைப்பெருகிறாள் என்பதை காட்டியதோடு வெண்முரசு நின்று இருந்தால் அது பெண்ணை லோகாதாய வாழ்க்கையிலேயே வைத்துவிட்டது என்ற குறைவந்துவிடும். அதை விஞ்சி சென்று சித்ராங்கதை நாரைக்குஞ்சுகளுக்கு உணவூட்டும் தருணத்தில் தனது விரலையே முலையென உணரும் தருணத்தில் மெய்யுணரும் தருணத்தில் நிலைக்க நிற்கவைக்கிறது. உண்மையைச்சொல்லி, உண்மையின் வழியாக மெய்மையில் நின்று நிற்கும் தருணத்தில் வெண்முரசு தனது கிரீடத்தை சூடிக்கொள்கிறது. 
சித்ராங்கதை தனது மெய்ப்பையை கழட்டும் உண்மையான அர்த்தம் இங்குவந்து கிடைக்கிறது. காசுக்காக தனம்விற்கும் பெண்ணும், குழந்தைக்காக தனம்கொடுக்கும் தாயம் எவ்வளவு பெரும் தூரத்தில் நிற்கிறார்கள் என்றும், இருவரும் ஒரே வண்ணத்தில் எந்தமாதரியான சித்திரத்தை வரைகிறார்கள் என்றும் நம்மை காணவைக்கிறது.

தடாகத்தின் ஆழத்தில் மூழ்குகின்றவர்கள் மீல்வதில்லை என்ற நிலை இருந்தாலும், அதில் மூழ்கிதான் பார்ப்போமே என்று அறிதலுக்காக விழும் பால்குனை லோகத்தடாகத்தின் மிதக்கும்தீவுகள்போல எல்லா இடத்திலும் விரவி தன்னை ஆண் என்று ஆக்கிக்கொள்கிறாள் அதாவது ஃபால்குனன் ஆகிறாள். லோகத்தடாகத்தில் மூழ்கி அமிழ்ந்துவிடுவோம் என்று பயந்து பின்பு ஆசையால் விழுந்து, ஃபால்குணைப்போல் எங்கும் விரவாமல் தாய்மை ஒன்றிலேயே குவிந்து நின்றுவிடும் சித்ராங்கதன் பெண்ணாகின்றான் அதாவது சித்ராங்கதை ஆகின்றான்.

மனத்தடாகத்தில் விழுந்து மனவெளி முழுவதும் விரிந்து பரவுவது ஆண்மை, சந்திரன் தன் கலைகளை இழந்து வானம் மட்டுமாகவே ஆவதுபோல், ஆண் தன்னை இழந்து இன்மையாவது ஆண்மை, பிரபஞ்சம் மட்டுமே என்ற ஒன்றே என ஆவது ஆண்மை.
மனத்தடாகத்தில் விழுந்து மனவெளியின் ஒரு புள்ளியில் குவிவது பெண்மை. சந்திரன் தன் கலைகளை சேர்த்து சேர்த்து வளர்பிறை வானில் ஒரு பூபோல ஆவதுபோல் பிரபஞ்சவெளியில் பெண் பூப்பது பெண்மை. பிரபஞ்சத்தில் தன்னையும் ஒரு உருவாக ஆக்கி பிரபஞ்சம், பெண் என்ற இரண்டாக காட்டுவது பெண்மை.  

ஆண்மைக்கும் பெண்மைக்கும் மையத்தில் உள்ள ஞானமாகிய பீடம் வர்தலும் தேய்தலும் அற்று, விரிவதும், குவிவதும் அற்று அசைவின்மையில் என்றும் நிற்கும். அந்த ஞானபீடத்தைச்சுற்றி ஆண்மையும் பெண்மையும் அசைந்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறது. அசையாத ஞானப்பீடத்தின் அச்சாக அந்த இறைவன் நிற்கின்றான். ஆணையும் பெண்ணையும் கொண்டு ஞானபீடச்சக்கரம் சுழல்கின்றது

ராமராஜன் மாணிக்கவேல்