Thursday, October 1, 2015

அடைதலும் இழத்தலும்:

அடைதலும் இழத்தலும்:

மனிதன் சிந்திக்கத் துவங்கிய நாள் முதல் செய்து வரும் ஒரு செயல் உன்னதமாக்கல். அவ்வாறு காமத்தின் உன்னதமாக்கப் பட்ட வடிவம் தான் காதல் என்று சொல்வர். ஆனால் அது காதல் என்ற உணர்வை குறுக்கும் ஒரு விளக்கமே. நம் முன்னோர் காதல் என்று வகுத்த உணர்வின் மிகுதியால் துய்க்கப்படும் காமம் தரும் நிறைவை ஒரு துறவி பல்லாண்டுகாலம் பெருந்தவம் செய்து ஈட்ட வேண்டும். இதன் காரணம் மிகத் தெளிவு. காமத்தைத் துறத்தல் என்பது இந்த புடவி படைத்தவனுக்கு ஒரு மானுடன் விடும் சவால். அவன் இயற்கைக்கு எதிரான ஒன்றைச் செய்கிறான். அவனைப் பல சோதனைகளுக்குப் பிறகே இயற்கை அவன் விரும்பியதை அளிக்கிறது. ஆனால் இல்லறத்தில் இருப்பவன் அவன் விரும்பிய நிறைவை எளிதாக அடைந்து விடுகிறானா? இல்லை... அங்கு தான் இயற்கை இரண்டின்மை அடையச் சொல்கிறது. மாதொரு பாகனாகச் சொல்கிறது.

அர்ஜுனன் முதன்முதலாக முழுக்காதல் கொள்கிறான். அவள் மட்டுமே என்று தான் விலகிப் போனவன் திரும்பி வருகிறான். அகம் முழுவதும் நிறைந்த காதல் அவனை நெகிழ்த்துகிறது. உடலின் இறுக்கங்கள் மதுவால் நெகிழ்ந்ததென்றால் மனதின் இறுக்கங்கள் காதலால் நெகிழ்ந்தது. மனதும் உடலும் உருகியதால் தான் அவனால் நாகனாக முடிந்தது. நெகிழ்ந்த மனத்தால் துய்த்த காமம் அவனையும் தாண்டி இப்புடவி சமைத்த பெரும் ஆடலைக் காட்டிச் செல்கிறது. இப்புடவி சமைத்த சக்தியையும், சிவத்தையும் ஒன்றாக உணர்ந்து அதன் ஒரு துளி தான் அவன் என்பதையும் உணர்ந்து நிறைகிறான். என்ன இருந்தாலும் ஆணவம் கொண்டு பெறுபவன் அல்லவா அவன், இவ்வளவு விளக்கங்கள், சொற்கள் தேவை தான். 'துயில்க என் மைந்தா' என ஒற்றை வரியில் அவனைத் தாண்டிச் செல்கிறாள் சக்தி!!! 

ஆனால் இறுதியில் தலையறுத்து சுயபலியாகும் தன் மகன் அரவானைக் காணும் இடத்தில் அவன் ஆழம் அவனையும் ஓர் அன்னையாக அறிகிறது. மேல் மனம் உணரா ஒரு சொல்லை ஆழ்மனம் உணர்ந்ததன் விதிர்விதிர்ப்பு தான் அவன் கொள்ளும் பதற்றம். அடைவதனைத்தும் இழப்பதற்குத் தானா? எங்கோ காலமடிப்பில் தனக்காகக் காத்திருக்கும் தன் மகனின் பிரிவை முழுதுணரும் போது அவன் அடையப்போவது என்ன? கர்மங்களின் களியாடலில் யோகத்தில் அமர்ந்தவன் பாதத்தில் சரணடைவது தானா!!! அவன் கொள்ளப்போகும் மகத்தான மனத்தடுமாற்றத்தின் விதை ஆணிலியாய் அவன் முழுதுணர்ந்த நிறைவின் இழப்பு தானா? இரண்டின்மை வேண்டியவனும், அதை அடைந்த பின்னும் நிறைவுறா அகம் கொள்ளும் அத்தருணம் தான் கனி உதிர காலம் தேர்ந்தெடுத்த தருணமா!!! 

காண்டீபத்தின் ஒவ்வொரு பகுதியும் முந்தையதை விஞ்சுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் பிரமிக்க வைக்கிறீர்கள் ஜெ.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்