Monday, October 12, 2015

அன்பின் மொழி


    தன் குழுவைச் சாராத விலங்கை எதிரியாக காணுவது விலங்குகளின்  குணம். விலங்குகள் தங்களுக்குள் தம் நிலப்பரப்பை காக்க, தன் இணையினை அடைய, தன் குட்டிகளை பேண, தன் இரையினை பெற, பாதுகாக்க அல்லது மற்ற விலங்கிடமிருந்து பிடுங்கிக்கொள்ள என ஓயாமல் சண்டை போட்டுக்கொள்கின்றன. மனிதர் காட்டு மனிதர்களாக இருக்கும்போது அவர்கள் தங்கள் குழுவல்லாத மற்ற குழுவினரை பெரிய எதிரிகளாக கருதினர். அவர்களை போரிட்டு வென்று,  கொல்வது அல்லது விரட்டியடிப்பது என இருந்தனர்.   விலங்குகளிடமிருந்து தன்னை விலக்கிக் காட்டிக்கொள்வது அவன் தன் சிந்தனையால்.  இயற்கையின் இயல்புப்படி தன்னுள் எழும் தேவையற்ற விலங்கு குணங்களை அடக்கி தவிர்த்து நடப்பதுதான்  மனிதம் என்பது.  மற்ற குழு மனிதர்களின் மேல் வெறுப்பு என்பது மனிதன் தவிர்க்க வேண்டிய விலங்குகளின் இயல்பான  குணம். 

காட்டுவாசியாக இருந்தபோது அவனுக்கு இருந்த  அயலார் வெறுப்பு என்ற குணம் இன்றும்  குறையாமல் அவனிடம் இருப்பது மனிதத்துவத்திற்கு எதிரானது ஆகும்.  மனிதர்கள், தாம் இருக்கும் நாடு, இனம், நிறம், மொழி, மதம் காரணமாக தன்னை குழுக்களாக அறிந்துகொள்கிறார்கள். இப்படி குழுக்களாக இருப்பது தவறில்லை. சிலசமயம் அவை அவர்களுக்கு நன்மையளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால் மற்ற குழு  மனிதர்களின் மேல் வெறுப்பை காண்பிப்பது என்பது முழுக்க முழுக்க விலங்கின்  குணம். மனிதத்துவத்திற்கு எதிரானது.  இந்த வெறுப்பு எத்தனை போர்களுக்கு. அதன் மூலம் எத்தனை உயிரிழப்பிற்கு எத்தனை உடமைகளின் அழிவுக்கு காரணமாகிறது என்பதை வரலாறு முழுதும் பார்க்கிறோம்.  

குழுக்களின் இடையேயான வெறுப்புதான் ஏதாவது பிரச்சினையை கண்டெடுக்கிறது, அதை வளர்க்கிறது, பரப்புகிறது, அதை காரணமாகக்கொண்டு மேலும் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறது. தன் குழுவுக்காக தன் உயிரை தியாகம் செய்யும் மனம் கொண்ட அதே மனிதன் மற்ற குழுவினரை எந்தக் காரணமும் இன்றி கொல்லத் தயங்குவதில்லை. அவர்களை அடிமைகளாக்கி தன் காலடியில் வைத்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. அந்தக் குழு சார்ந்த வெறுப்புதான் குண்டுகள் வைத்து மாற்று குழுவினரை கொல்லவைக்கிறது, கண்டம் விட்டு கண்டம் சென்று அங்கிருக்கும் மாற்று இனத்தவரை கூண்டோடு அழிக்கிறது. மொழியால் பிரிந்திருக்கும் வேற்று குழுவினரை ராணுவத்தால் கொன்றொழிக்கிறது, ஒரு மாட்டுக்காக மாற்றுக்குழு மனிதனை கொல்லத்தூண்டுகிறது.  குழுக்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் அவை ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது வெறுப்பின் மொழியில்.  .வெறுப்பு குழுக்களிடையே விஷம்போல் விரைந்து பரவுகிறது.


   ஆனால் ஏதோ ஒரு மனிதன் தன் குழு அடையாளத்தை விட்டு மேலெழுந்து மனிதர்களை வெவ்வேறு குழுக்களாக அல்லாமல் ஒன்றிணைந்த மனிதர்களாக பார்க்கிறான்.  அவன் பேசுவது அன்பின் மொழி. வெறுப்பின் கூச்சல் குரல்களுக்கு இடையில் மிகவும் சன்னமாக ஒலிக்கிறது அவன் அன்பின் மொழி. அவன் அதற்காக தன் குழுவினரால் தூற்றப்படுகிறான். தன் அன்பின் மொழியை பரப்ப அரசு, குடும்பம் துறந்து ஊர் ஊராக அலைகிறான்.  தன் சுகங்களை துறந்து எளியோர்க்கும் எளியோனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான். ஆனால் அதற்காக தன் குழுவினராலேயே அவன் சாட்டையால அடித்து சிலுவையில் அறையப்படுகிறான். தள்ளாடி தடியூன்றி நடக்கும் அவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். இத்தனையையும் தாண்டி அவன் அன்பின் மொழி ஒரு தென்றல்போல் குழு வேறுபாடுகளை தாண்டி பரவுகிறது.


    சித்ரகேசர் பச்சோந்தி மனிதர்களிடம் பேசுவது அந்த அன்பின் மொழி அல்லவா. அவர் பச்சோந்தி மனிதர்களிடம் கடும் வெறுப்பைக் கொள்வதற்கான அனைத்து நியாயங்களும் இருந்தபோதும் அதைத் தவிர்த்து அன்பைமட்டும் தேர்ந்தெடுத்து மனிதத்தை மலர வைக்கிறார்.  ஒரு சிறு அகல்விளக்கு அதை சுற்றி இருக்கும் காரிருளை விலக்கி ஒளியை தருவதுபோல அவர் நடத்தை  பச்சோந்தி மனிதர்களின் வெறுப்பு தயக்கம் ஆகியவற்றை நீக்கி இரு குழுக்களும் பகை நீங்கி  இணையும் ஒரு பேரதிசயத்தை நடத்துகிறது.  வெறுப்பை பரப்புபவர்கள் மனிதகளை  பிரித்து சிதறவைக்கையில் சித்ரகேசர் போன்றவர்கள் மனிதர்களை பூக்களை தொடுப்பதைப்போல் ஒன்றிணைக்கிறார்கள்.

தண்டபாணி துரைவேல்