Tuesday, October 13, 2015

ஆசிரியரும் குருவும்



மானிடன் என்றதும் கால், கை, முகம், ஐந்து இந்திரியங்கள் என்று ஒரு கோட்டு ஓவியம் கண்முன்  எழுந்து முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆனால்.மானிடன் என்பது அவ்வளவுதானா? ஃபால்குணை ஒரு எல்லை, சித்ராங்கதன் ஒரு எல்லை, இந்த எல்லைகள் இணையும் ஒரு புள்ளி முழு மானிடன். ஒருவள் அள்ளிக்கொள்கிறாள், ஒருவன் தன்னை முழுதும் அற்பனிக்கிறான். குருவும் சீடனும் உருவாகி ஒன்றும் ஒருசிற்பம் முழுமானிடன். ஒரு விதை வான்தொடும் விருட்சம் ஆவதும், ஒரு வான்தொடும் விருட்சம் ஒரு விதையாகுவதும் பறத்தலின் கணத்தை அடைவற்கு உரியது என்று காட்டிச்செல்கிறது. 

சித்ராங்கதன் வருவதற்கு முன்னமே ஃபால்குணை பறவை என பறந்துக்கொண்டு இருக்கிறாள். ஃபால்குணையை அடைந்தப்பின்னே சித்ராங்கதன் பறக்கும் கணத்தை அடைகிறான். சீடன் இல்லாமல் குருவால் அந்த கணத்தில் வாழமுடியும். குரு இல்லாமல் சீடனால் அந்த கணத்தை அடையமுடியாது.

ஃபால்குணையை அடைவதற்கு முன்பும் சித்ராங்கதன் நாரையைப்பார்த்து இருக்கிறான். அதன் குருதியை சுவைத்திருக்கிறான், அதன் குருதிமூலமே தன்னை ஆண் என்று ஆக்கிக்கொண்டு உள்ளான் ஆனால் குருதான் அதன் தாய்மையைக்காட்டுகின்றார். ஒன்றின் உடலை அறிய, குருதியை அறிய குருதேவை இல்லை, அதற்கும் அப்பால் உள்ள தாய்மையை, தாயாகும் தருணத்தை அடைய, தன்னை இழந்து கரைந்து நோக்குதால், நோக்கப்டும் பொருள், நோக்குபவன் என்ற மும்மைகள் அழிந்து ஒன்றென ஆகும் வாழ்க்கையை கொடுக்க குருதேவைப்படுகிறார். ..

சித்ராங்கதனை நீரில் எறிந்து வெளி நீந்தி வெளிவர வைப்பதன் மூலமும்,   நாரையை கழுத்து அறுக்க வைத்து அதன் குருதியை கடிக்கவைப்பதன் மூலமும் சித்ராங்கதனை ஆண்மகனென வெளிக்கொண்டு வருகிறான் சித்ரபாணன்.  உடல், நிழல் அப்பால் உள்ள உருவமற்ற நாரை என மூன்றில்மூழ்கடித்து தாய்மையை விழிக்கவைத்து சித்ராங்கனை உள்ளுக்குள் கொண்டு செல்கிறாள் ஃபால்குணை. சித்ரபாணன் ஒரு ஆசிரியன், ஃபால்குணை ஒரு குரு. ஆசிரியன் உள்ளே இருப்பதை வெளியே வளர்த்து எடுக்கிறார். குரு வெளியே வளர்ந்தவைகளை உள்ளே கொண்டு குவித்துவிடுகிறார். ஆசிரியன் உடைக்கமுடியாத, அறுக்கமுடியாத கட்டுகளை குரு உடைக்கிறார் அதுதான் குருவின் வல்லமை.  

ஆசிரியன் கோபத்தால் செய்வதை, குரு கருணையால் செய்கிறார். ஆசிரியன் சீடனைவிட்டு விலகி விலகி சென்று கற்பிக்கிறார். குரு, சீடனும் தானும் வேறு வேறு அல்ல, ஓர் உடல் ஓர் உயிர் என்றாகி கற்பிக்கின்றார்.

ஆசிரியன் ஆண்மையை உண்டாக்கலாம்,வெல்லவைக்கலாம், பதிவியை கொடுக்காலாம், ஆனால் அவரும் அவரை அறியாமலே கட்டிவைக்கிறார். குருமுன் அனைத்தையும் இழக்க நேரிடலாம், அஞ்சலாம், கண்ணீர்விடலாம் ஆனால் அவர் பிரமம் ஆக்குகின்றார்.
ஃபால்குணை, சித்ராங்கன் கதை இன்று விதை, வான்தொடும் விருட்சம் என்று விரிகிறது. காண்டீபம்-27ம்கூட விதை விருட்சம்தான்.

சித்ரபாணன் சித்ராங்கதனுக்கு கைகள் முளைக்க வைத்தார் என்றால், ஃபால்குணை சித்ராங்கதன் கைகளை இல்லாமல் ஆக்குகிறாள்.
//நான்காக எட்டாக பதினாறாக விரியும் திசைகளென கைகளைக் கொண்டவை தெய்வங்கள். பிரம்மம் என்பது கைகளற்றது, படைக்கலங்கள் மட்டுமே கொண்டது” ஃபால்குனை சொன்னாள்.//-காண்டீபம்-27

ஆசிரியனால் தெய்வமாக்கமுடியும்,குருவால்தான் பிரமம் ஆக்கமுடியும். நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.