Wednesday, October 21, 2015

கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள்
     ஊர்களில் வயற்காட்டில் இதைப் பார்த்திருக்கலாம. மாடுகள் ஒரு நீளமான கயிற்றில் கட்டப்பட்டு ஏதாவது மரத்திலோ கல் தூணிலோ கட்டப்பட்டிருக்கும். மாட்டிற்கு இருக்கும்   சுதந்திரம் இந்தக் கயிற்றின் நீளம் வரை.  ஒவ்வொரு முறை அந்த மாடு அந்த நீளத்தை கடக்க முயலும்போது அந்தக் கயிற்றின் இறுக்கத்தை உணர்ந்து திரும்பிவிடும்.
   பூமியில் இருக்கும் உயிர்கள் எல்லாம இயற்பியல் விதிப்படி புவியீர்ப்பு என்ற விசை என்ற கயிற்றால் கட்டி வைக்கப்பட்டுள்ளன. புழுக்கள் போன்ற உயிர்கள் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் நீளம் மிகக்குறைவு என்றால்  பறவைகளை கட்டியிருக்கும் கயிற்றின் நீளம் மிக அதிகம்.  தாவும் விலங்குகள் சற்று நீளும் தன்மையுள்ள கயிறுகளால கட்டப்பட்டுள்ளன.  மனிதன் விண்ணுந்தை(rocket) உபயோகித்து புவியோடு பிணைத்திருக்கும் அந்த புவியீர்ப்பு கயிற்றிலிருந்து  விடுபட அறிந்திருக்கிறான்.  எந்த ஒரு தளையிலிருந்தும் விடுபட நினைப்பது மனித சிந்தனையின் இயல்பு.


        மனிதனின் சிந்தனை தன்னை இந்த உடல் என்று நினைத்துக்கொள்வதிலிருந்து விடுபட நினைக்கிறது. அழிந்துபோகும் வெறும் உடலல்ல நான் எனக்கொள்கிறது. ஆனாலும் நாம் உலகை அறியும் ஐம்புலன்கள் நம் உடலை சார்ந்தவை. அதன் மூலம நாம் அடையும் உணர்வுகள் நம்மை உடலோடு கட்டிவைக்கின்றன.     ஒருவன் குழந்தையாய் இருந்து சிந்திக்கும்போதே அவன் இந்த உடல் தன்னை உலகோடு பிணைத்துவைத்திருப்பதை அறிகிறான். அவன் ஓர் அறியாத ஏதோ ஒரு உலகிற்கு மேலெழவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, தளர்ந்து இறக்கும் இவ் வாழ்க்கையின் சலிப்பை வெகு சீக்கிரம் அறிந்து கொள்கிறான். அதே நேரத்தில் இவ் வாழ்க்கையிலிருந்து அவனால் விடுபடமுடியாமல்  பாசம், நட்பு,  காமம் போன்ற பலவிதமான ஆசைகள் என்ற திரிகளால் முறுக்கப்பட்ட கயிற்றினால கட்டப்பட்டிருக்கிறான். சிலர் கயிற்றின் திரிகளை ஒவ்வொன்றாக அறுத்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல்கிறார்கள். இரூம்பு வடத்தைக்கூட  துண்டித்து விடலாம. ஆனால் அதிக அளவில் நெகிழும் மற்றும் நீளும் தன்மையுடைய  இரப்பர் கயிற்றினை அறுப்பது கடினம். நாம் எவ்வளவு தூரம் மேலெழுந்தாலும் அது நீண்டு வந்து நாம் தளையற்று இருக்கிறோம் என உணர வைக்கும். ஆனால் நம்மை நாமறியாத தருணத்தில் மீண்டும் கீழிழுத்துக்கொள்ளும். இந்த கயிறின் ஒரு முனையை மாயை கையில் பற்றி நம்மை விட்டு பிடித்து விளையாடி வருகிறது. கயிறிலிருந்து விடுபட்டுவிட்டோம் என நினைத்து மகிழ்ந்து தன்னை யோகிகள் என்றும் துறவிகள் என்றும் முக்தியடைந்தவர்கள் என்றும் சொல்லிய பலர் அந்த நெகிழும் கயிறால் இழுக்கப்பட்டு தலைகுப்புற விழுவதை பலமுறை கண்டிருக்கிறோம்.


    தியான மார்க்கத்தில் இந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு மேலெழும் பயணத்தை அர்ச்சுனன் சுனைகளை  கடந்து செல்லும் வழிகளாக ஜெயமோகன் விளக்குகிறார். சற்று கடினமான பாடத்தை படிப்பதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தன் அனுபவங்களுக்கேற்ப அறிந்துகொள்ளவேண்டிய ஞானம்.  இதில் என்னை ஒரு ஆரம்ப நிலை மாணவனாக உணர்கிறேன். நான் எதைச் சொன்னலும் அது முழுமையானதாக இருக்காது. பிழை கொண்டதாக் இருக்கும் என அஞ்சுகிறேன்.
     

ஆனால்அர்ச்சுனனின் இந்த விடுபடும் பயணத்தில் தடுப்பவளாக  இங்கு ஏன் குந்தி வருகிறாள்.  அவன் மனதில் அப்போது திரௌபதியோ உலூபியோ சித்ராங்கதையோ அல்லது அவன் பிள்ளைகளோ வராமல் குந்தி வருவதன் காரணம் என்ன?   ஒரு மனிதன் முழுமையான விடுபடலுக்கு செல்வதை ஒரு தாயா தடுக்கிறாள்?  ஆம். சிந்தித்து பாருங்கள். ஒருவனை துறவிலிருந்து தடுப்பதில் தாயின் பாசம் பெரிய பங்காற்றுகிறது. மற்ற அனைத்தையும் துறந்தவர்கள் கூட கடைசியாக விடுவதாக இருப்பது தாயின் பந்தத்தைத்தான். ஆதி சங்கரர் தன் தாயிடமிருந்து விடுவித்துக்கொள்வதே அவர் துறவறம் என ஆகிறது. உடல் மாயை, உறவு மாயை என்று கூறிய அவர்  மீண்டும் அத்தாயின் இறப்பின் சமயம் அன்னையிடம்  வருகிறார். பகவான் இரமணர்  தன் தாயையும் துறவுகாண வைத்து இப்பந்தத்தை கடக்கிறார்.  நம்மை உடலென ஆக்கிக்கொடுத்தது தாய். அவளுக்கு முதலில் நாம் அவள் வளர்த்தெடுத்த உடல்மட்டுமே.  நாம் அன்னைக்கு அதனால் கடமைப் பட்டிருக்கிறோம் என்ற நினைவு நம்மை இந்த உலகோடும் இந்த உடலோடும் பிணைக்கும் கயிறின் மையத்தில் இருக்கும்  உறுதியான திரியாகும். நம்முடைய தாய்ப் பாசம்தான் நம்மை வெறும் காமுகர்கள் என ஆக்காமல் காதலர்கள் என ஆக்குகிறது.  நம் தாய்ப்பாசமே நாம் நம் பிள்ளைகள் மனைவி, உறவுகள், நட்புகளிடம் காட்டும் பல்வேறு  பாசங்களாக உருமாறுகிறது.  இந்த பந்தங்களின் வேறாக  தாய்ப்பாசம்  இருக்கிறது.  ஆகவே அர்ச்சுனனை பிணைக்கும் கயிறின் உருவகமாக குந்தி காட்டப்படுகிறாள்   என நினைக்கிறேன்

தண்டபாணி துரைவேல்