Monday, October 26, 2015

தேரோட்டி.-3


இனிய ஜெயம்,

இன்றைய அத்யாயம் கதன் வழியே அன்றைய மதுராவின் சமூகமும், அரசு குடிகளும், அதன் அரசியல் செயல்திட்டமும், உள்ளுறையும் நீலன் மீதான பொறாமையும் என அர்ஜுனனுக்கு [அவன் யார் என்று அறிந்தே] உரைப்பதன அத்யாயமாக இருந்தாலும், இன்றைய அத்தியாத்தின் துவக்கமும் முடிவும், இதை தனித்ததொரு சிறுகதை போல காட்டுகிறது.

குறிப்பாக அர்ஜுனன் யானைக் கூட்டத்தின் இருப்பை அறியும் சித்திரம். விழிக்கையில் அர்ஜுனன் பார்க்கும் முதல் புறம்காட்சி அவனது அகத்துள் இறங்கும் விதம்.முதலில் அதன் ஒலியை கேட்டு அவன் உடல் விழிக்கிறது, அதன் மணத்தில் அவனது புலன்கள் விழிக்கிறது, விழி நீவி நீவி காட்சி விரிய, அவன் உள்ளம் விழிக்கிறது. இந்த வரிசையில் எங்கும் அவன் எண்ணம், பிறக்க வில்லை.

உள்ளம் விழித்த கணம் அவன் இருப்பை தித்திப்பாக உணர்கிறான். தித்திப்பு என்ன ஒரு சொல் தேர்வு. இனிப்பு என்ன ஒரு அபத்தாமான சொல். ஆம் தித்திப்பு என்பதே உணர்வைத் தைக்கும் சொல்.

அர்ஜுனனின் முதல் எண்ணமே, சித்ராங்கதையை அழைத்து வந்து விடுகிறது.  இழப்பதன் இனிமைக்குப் பெயர்தான் ஏக்கமோ ?

இறுதி வரிகள் கவித்துவமும், தியான கணமும் கச்சிதமாக முயங்கிய தருணம்.

வெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.

 இனிய ஜெயம்,

உங்களது எழுத்தில் மிகத் தனித்துவமான விவரணைகளில் தலையாய காட்சிகளில் ஒன்று இது. உங்கள் படைப்புத் திறன் மிதித்து ஏறி உயரும் மற்றொரு படி.
 
கடலூர் சீனு