Friday, October 30, 2015

ஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)



நாம் ஒன்றை அறிந்திருக்கிறோம் என்பதற்கும் ஒன்றை உள்ளபடி உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. நாம் இந்த உடலை வெறும் சதை, எலும்பு, ரத்தம், நரம்புகளால ஆனது என அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஒருமுறை என்  மாணவன், சற்று வயது முதிர்ந்து பருமனாக இருப்பவன், முற்பகலில் நடந்த எங்கள் துறை விழா ஒன்றில் மிகவும் ஆவேசத்தோடு நடனமாடினான்.  பிற்பகலில் விடுதியில் மயங்கிவிழுந்து மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.  மறுநாள் அவனுக்கு அஞ்சலி  செலுத்த மாணவர்களுடன் மருத்துவமணை சென்றேன். அவன் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு பிண ஆய்வு செய்யும் அறை வழியாக செல்ல வேண்டியிருந்தது.  மின்னணு தராசில் பொருள் வைக்க நீள்சதுர தட்டு ஒன்றை பயன்படுத்துவார்களே அதைபோன்ற ஆனால் ஆறடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட நீள் சதுர எவர்சில்வர் ட்ரே ஒன்றைப் பார்த்தேன். அது ஏன் என யோசிக்கும்போது அங்கிருந்த பெரிய மின்னணு தராசு கண்ணில் பட்டதும் மனம் அதிர்ந்தது. உடல் சிலிர்த்தது. அங்கிருந்து ஓடிவிடலாம் என ஒருகணம் நினைத்தேன். அந்தத் தட்டு பிணஆய்வுக்கு வரும் மனித உடல்களை எடைபோடப் பயன்படுத்தப்படும் ஒன்று. மனித உடல் வெறும் ஊன் என உள்ளத்தில் தைக்கும்  பொருளாக அது இருந்தது. 


   அப்போது அந்த கணத்தில் என் மனம் உடலை ஊன் என உள்ளூர உணர்ந்து அதிர்ந்தது. இதைப்போல்  சென்னை இராயப்பேட்டை மருத்துவமணையில்,   கழிவறை பீங்கான் உடைந்து ஒருவன் காலின் தோல் கிழித்து சதையும் எலும்பும் தெரிய துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோதும் இத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் அது மீண்டும் பெரிதாக மனதில் உறைத்தது.  அப்புறம் இன்னும் சில சமயங்களில் அதைப்போன்ற நிகழ்வுகளில் இவ்வுணர்வை அடைந்திருக்கிறேன். ஆனால் அவை தற்காலிக உணர்வுகளாக சில மணி நேரத்தில்  மறைந்துவிடுகின்றன. மீண்டும் எனக்கு உடல் ஊன் என்பது ஆழ்மனம் உணரும்  ஒன்றாக  இல்லாமல் வெறும் அறிவு என்ற அளவில் மாறிவிடுகிறது.

        ரிஷபர் அழகும் நளினமும் கவர்ச்சியும் கொண்ட ஒரு உடல் வெறும் ஊனென குறுகிவிடும் முழுமையை கண்டுணர்கிறார்.  அந்த உணர்வை முழுமையாக தன்னுள் வாங்கி மறையாமல் அப்படியே தக்கவைத்துகொள்கிறார்.   அதை மேலும் மேலும் தியானித்து வீடுபேற்றை அடைகிறார். அதை இன்றைய வெண்முரசு அற்புதமாக காண்பிக்கிறது.

    இதைப்போல் ஒரு பதினேழு வயது சிறுவன் ஒரு அறையில் தனித்திருக்கும்போது ஏனோ அவனுக்கு மரணபயம் ஏற்பட்டது. தான் இறந்து விட்டதாகவும் தன் ஐம்புலனகளும் அவிந்துவிட்டதாக கற்பனை செய்துகொள்கிறான். அவன் உடல் அவன் கண்ணெதிரே இறந்துவிட்டது. அப்போது அவன் உடல் வெறும் ஊனென உணர்ந்துகொள்கிறான். அப்படியென்றால் தான் உடலில்லை என ஆகிறது. அப்படியென்றால் நான் யார் என அறிய முற்படுகிறான். அந்தக் கணம் அவனுக்கு ஞானம் சித்திக்கிறது. தன் வீடு உறவுகளைவிட்டு வெளியே போகிறான்.  அதற்கப்புறம்  அவன் ஞானத்திற்கென எந்த சாதனையோ தவமோ செய்ததில்லை.  சிலவருடங்கள் தியானத்தில் மௌனத்தில் தன்னுள்ளே ஆழ்ந்து,  பின் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மனம் இரங்கி குருவென ஆகி தன் வாழ்நாள் முழுதும் ஞான அருள் பொழிந்து வாழ்ந்த அந்த மகான்,  பகவான் இரமணர் ஆவார்.


   ஞானிகளின் கதையை சொல்வது அல்லது அவர்களுடைய தத்துவங்களை எடுத்துக்கூறுவது என்பது சிறப்பு என்றால் நம் கண்ணெதிரே ஒருவன் ஞானியாக மலர்ந்து முக்தியடைவதை சித்தரிப்பது  அதிசிறப்பு.  அதனால் வெண்முரசை படிப்பது என்பது ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கும் ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனக் கருதுகிறேன்

தண்டபாணி துரைவேல்