Friday, October 2, 2015

காதலர்களுக்கு மட்டும்



பெண்ணின் மகத்துவம் தாய்மையாகும் பண்புதான். தாய்மை அடைவதற்கும் முன்பே அந்த தாய்மையின் கணத்தில் பெண் தன்னை மலரவைத்துக்கொள்கிறாள். தாய்மையாகுவது என்பது பொற்கணம் ஒன்றில் தெய்வமே வந்து நின்று சிலையாகிச்செல்லும் தருணம். அது நிகழ்வதற்கு,  நிகழ்த்துவதற்கு, நிகழ்த்திக்காட்டுவதற்குத்தான் அணைத்து ஜீவனும் முயல்கின்றன அதொரு தவம் என்பதை அறியாமலே அந்த தவம் நடந்தேறுகின்றது.  இறைவன்கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஈசன் இடப்பாகாம் உறையும் உமையும் அன்னையென உணரும் தருணத்தில் இறைவி என்பதை மறக்கிறாள்.

இறைவி என்பது எளிதா? எத்தனை எத்தனை பிறவிக்கும் தவத்திற்கும் தியாகத்திற்கும் அப்பால் இருக்கும் பொற்பீடத்தில் எழுதல் அது. அன்னை என்பது இந்த மண்ணில் அதற்கும் அடியில் அதலபாதலத்தில் வந்து விழுதல். மண்ணில், குப்பையில், சேற்றில் குட்டிகளை ஈன்று அன்னையாகி கனிந்து நின்று கம்பீரம் காட்டும் பெண். ஆனால் அந்த தாய்மையின் பீடம் இறைவி இருக்கும் பொற்பீடத்தையும் துளியென ஆக்கிச்செல்கிறது. உலூபி இன்று அர்ஜுனனை மைந்தன் என்று உணரும் தருணத்தில் இறைவி எழுந்தருளும் பொற்பீடத்தை துளியென ஆக்கி செல்கிறாள்.

தாய் என்ற சொல் எளிதானதா? அந்த நிலையை அடைவதற்கு தவமாய் தவம் இருக்கும் பெண்கள் எத்தனை எத்தனை. மண்சோறும், இரத்தச்சோறும் சாப்பிடும் இதயங்களின் வலியை உணரும்போது பெண் என்பவள் வெறும் எலும்பும் சதையும் குருதியும் கொண்ட உடல்மட்டும்தானா? பெண்ணின் உடல் எழும் காமத்தின் வழியாக தான் சென்று அடையும் இலக்கை உச்சமாக வைத்து உள்ளாள். அறிந்தும் உணர்ந்தும் பெண் செல்வது எல்லாம் அந்த இலக்கை நோக்கிதான். அந்த இலக்கு பெண் சுட்டும்வரை ஆணுக்கு அது அறிவிக்கப்படாமலே இருப்பது விதியின் விந்தையா? காமத்தைத்தாண்டி பெண்ணைப்பார்க்கமுடியாமல் ஆண்போவது இங்குதான். காமத்தைத்தாண்டி பெண்ணால் பார்க்கமுடிகின்றது என்பதும் அந்த இலக்குதான். முதல்நாளில் முதல்போகத்தில் கணவனை மைந்தன் என்று பெண்ணால் உணரமுடிகின்றது. //அவள் கை அவன் குழலுக்குள் நுழைந்து அளைந்தது. “துயில்க என் மைந்தா!” என்றாள்.-காண்டீபம்-17// இந்த நிலையை அடைய ஆணுக்கு எத்தனை ஆண்டுகள் வேண்டி உள்ளது அல்லது உடம்பின் மொத்தக்காமமும் வற்றவேண்டி உள்ளது. அப்போது கூட ஆண் தன்னை மகவெனவே உணர்கின்றான்.  மனைவிக்கு அன்னை என்றோ தந்தை என்றோ கணவனால் எளிதில் ஆகிவிடமுடிவதில்லை. மனைவியிடம் மகவென தன்னை ஒப்படைக்க கணவானால் எளிதில் முடிகின்றது. ஆணின் ஆங்காரம் அழிவதால் இது ஏற்படுகிறது. ஆங்காரம் அழிந்தாலும் தாயென ஆகும் ஒரு தருணம் வேறு எங்கோ உள்ளது. 

கடமையில் நிறைந்தவர், பக்தியில் நிறைந்தவர், ஞானத்தில் நிறைந்தவர் அனைவரும் சென்று சேரும் அந்த இடம் தாய்மையில் நிறையத்தான். தாய்மையில் நிறையமுடியாமல்  கடமையில், பக்தியில், ஞானத்தில் செல்பவர் எத்தனை உயரத்தை தொட்டாலும் தொட்டது எதுவும் இல்லை.

கடமை, பக்தி, ஞானம் எதுவும் இல்லாமல் தாய்மையில் நிறையும் வழியொன்று உண்டு என்றால் அது காமம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து உயிர்களின் பொது வழியது. அதை வாரி வழங்குதல் என்பதற்காகவே பயன்படுத்தும் சீவன் கொடுத்தல்மூலம் நிறைகின்றது. ஆனால் காமத்தை எடுத்தல் என்பதற்காக பயன்படுத்தும் பலரால் அல்லாவா சமூகம் வன்புணர்வை சந்தித்து புண்ணடைந்து சீழ்வடிக்கிறது. பெண்மை மாசடைகிறது. தன்னின் பாதியான ஒரு சமுகத்தை ஆண் எவ்வளவு எளிதில் குப்பையாக்கி புற்றுநோய் ஆக்கிவிடுகின்றான். 

ஆண் பெண்ணை அறியவும், பெண் ஆணை அறியவும் காமத்தை ஒரு வாசல் எனவைக்கிறான் இறைவன். அந்த வாசல் வழி நுழைந்து அறிந்தது என்ன? என்ற வினா எழுந்தால். அறியாமையைத்தான் அறிந்துக்கொண்டு உள்ளோம் என்பது தெரிகிறது. உண்மையில் அறியவும், உணரவும் அங்கு ஏதேனும் உண்டா? அறிவும் உணர்வும் அற்று நிற்கும் கணம் ஒன்றில் நம்மை நிறுத்திச்செல்கிறது காமம்.

ஆண் ஆண் என்று தசை இறுக்கி, நரம்பு முறுக்கி உடல்பெருக்கிக்காட்டுவதெல்லாம் பெண்ணை வெல்வதற்குத்தான். ஆனால் பெண்முன் குழையாமல், நெளியாமல் உருகாமல் புழுவென்று ஆகாமல் அஞ்சாமல், எங்கே எங்கே அவள் என்றுத்தேடாமல் பெண்ணை வெல்லமுடியுமா? வெகு ஆழத்தில் மறைந்திருக்கும் பெண்ணை, பெண்ணே வந்து கைநீட்டி அழைக்காமல் வெல்லமுடியுமா? இதுவரை கட்டிவைத்த ஆணை கட்டுடைக்காமல், பெண்ணாகாமல் பெண்ணை வெல்லமுடிவதில்லை. பெண்ணின் துணை இன்றி பெண்ணை அவளின் ஆழத்தில் இருந்து அறியமுடியவில்லை. அவளே கைநீட்டி அழைத்து செல்லிடம் கொண்டு சேர்க்கிறாள்.  உலூபி..உலூபி என்று அழைக்கும் பயந்து அழைக்கும் அர்ஜுனனும், அவனை பாரிகாசம் செய்யும் புற்றும் ஆணிடம் சொல்வது ஆணென்று சென்று பெண்ணை வென்றவன் இல்லை. குழந்தையென்று ஆகி அன்னையைக்கண்டவன் பெண்ணை வெல்கிறான். 

காமம் காமம் என்று அறியப்புகுந்து அறியாமல் நொந்து வெந்து அழிந்து செத்தவர்கள் அதிகம் இந்த மண்ணில். பயந்து செத்தவர்களும் பலர். அது ஒரு கணம், ஆண் பெண்ணென ஆகி பெற்று நிறைவடையும் கணம். பெண் ஆணென ஆகி வழங்கி நிறைவடையும் கணம். பொற்கணம். ஆணும் பெண்ணும் அங்கு ஒரு நிறையும் கலம்மட்டுமே. தன்னைத்தானே சுவைத்து, தன்னில் தான் உறையும் எதிர்பால் அறிந்து நிறையும் கணம், மாதொரு பாகன் ஆகும் கணம். வெண்முரசு தொடும் உச்சம் இது.

இங்கு பாஞ்சாலியிடம் வண்புணர்வையும், உலூபியிடம் மென்புணர்வையும் காட்டும் அர்ஜுனன் வெல்வது இங்குதான். அங்கு வென்றாதாய் பொய்யுலகில் நிற்கிறான். மெய் உலகு என்பது தன்னில் பெண்ணை உணர்வது. 

உடல் அமைப்பில் பெறுவதற்கு என்று அமைக்கப்பட்ட யோனிக்கொண்ட பெண் உடலும், உடல் அமைப்பில் கொடுப்பதற்கு என்று படைக்கப்பட்ட லிங்கம் கொண்ட ஆண் உடலும், பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தான் இந்த காமத்தில் மூழ்குகின்றன. மூழ்கி முடித்துவெளிவரும்போது நடந்ததே வேறு. கொடுக்கச்சென்றது பெற்று வருகிறது. பெறவந்தது கொடுத்து நிற்கின்றது. இந்த இடத்தில் நின்று நோக்கும்போதுதான் தெரிகிறது, காமம் மையத்தில் நின்று காதல்புணர்வில் விழுபவனை அமுதக்குளத்திலும்,   வன்புணர்வில் விழுபவனை அமிலக்குளத்திலும் தள்ளுகிறது என்பது. அமுதக்குளத்தில் விழுபவன் மைந்தனென்று ஆகிறான், அமிலக்குளத்தில் விழுபவன் சவமாகிவிடுகிறான்.

அர்ஜுனனோடு ஒப்பிடும்போது பெரும்காதல் கொண்டவள் உலூபி, நீரின் அலையென, நெருப்பின் தழலென உடல் கொண்டவள். அர்ஜுனன் பார்க்கும்போது உலூபியின் கன்னமும், காதும் பொன்னென மின்ன காமத்தி்ல் நிறைந்து இருக்கிறாள். தனக்குள் பெருகும் காம விடத்தை, அர்ஜுனனை கடிப்பதன்மூலம் அவனையும் நாகமென விடம் கொள்ளவைக்கிறாள். ஆனால், அவளால்தான் இன்னும் பிறக்காத குழந்தைக்கு இடமும் உணவும் தேடவேண்டிய நிலையைப்பற்றி பேசமுடிகிறது. பெண் உடலுக்குள் இருந்தும் இதயத்திற்குள் வாழும் தருணம் இது. ஆண் இதத்தில் இருந்து எழுந்து உடலாகிவாழும் தருணம் இது. பெண்ணைப்படைக்கும்போது இறைவன் எத்தனை பாடுப்படவேண்டி இருந்திருக்கும். 

உலூபியும், அர்ஜுனனும் புது இல்லாம் நுழைவது இன்பம் துய்க என்றாலும், அந்த இல்லாம் நமக்கானது மட்டும் இல்லை நமது குழந்தைகளுக்கும் ஆனது என்ற நினைவை உலூபி ஏற்படுத்தும் இடத்தில் வந்து காமம் அதன் இலக்கை காட்டி அதற்கான வழிஎன்று நிற்கிறது. காமம் மாதொரு பாகன் ஆகும் வித்தையை பயலவைக்கிறது. ஆனால் தரிசனம் காட்டும்போது அது சோமாஸ்கந்தர் என்று முன்வந்து அருள் புரிகிறது. அர்ஜுனன் உலூபிக்கு இடையில் வந்து நிறையும் அரவான்.  

குறுந்தொகைப்பாடல் உரையில் ஜெ, தேன்நிலவுக்’கு வந்து மலர்காடுகளை விலக்கிச்செல்லும் இணைகளை மனதிற்குள் வாழ்த்தும்போது “உங்களுக்கு நடுவே மாபெரும் மலர்க்கூட்டங்களே மலர்வதாக” என்று வாழ்த்துவார். ஓவ்வொரு ஆணும் பெண்ணும் அந்த மாபெரும் மலர்க்கூட்டங்களை தங்களுக்கு இடையில் மலரவைக்கத்தான், மலர் இதழ்கூட இடையில் இல்லாத அரவங்களாக ஆகின்றார்கள். ஜெ சொல்லுவதுபோல, அரவங்கள்தான் உடலால் இரண்டு என்று இல்லாதவையாக ஆகமுடியும். அர்ஜுனனும் உலூபியும் அதை வாழ்ந்துக்காட்டுகிறார்க்ள.  ஆணும் பெண்ணும் கால்கைக்கொண்ட பேசத்தெரிந்த நாகங்கள். அவைகளால்தான் காமத்தை கவிதையாக்க முடிகிறது. 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. 
என்பான் வள்ளுவன் . அந்த வாழ்க்கைக்கு பயணிக்கும் பாதையோ காமத்தால் போடப்பட்டு உள்ளது. அந்த பாதையின் ராஜவீதியை இன்று ஜெ திறந்து வைத்து உள்ளார். காதலர்கள் மட்டும் அதில் பயணிக்கவும். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்