Tuesday, October 13, 2015

அறிவு சிந்தனை செயலாக்கம்


  ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல் என்பதில் முதல் பாடமாக அமைவது அதை சரியாக முழுமையாக புரிந்து மனதில் உள்வாங்கிக்கொள்வது.  ஒரு திறனைப் பற்றிய புரிதல் இல்லாமல் ஒருவன் அத்திறமையில் நிபுணனாக முடியாது. போரிடுதல் என்பது ஒரு செயல். அதை கற்க வரும் சித்ராங்கதனுக்கு ஃபால்குனை முதலில் செயல் என்றால் என்ன என்பதை விளக்க முற்படுகிறாள். ஒரு சிறந்த ஆசிரியர் எப்போதும் கண்ணெதிரே நடக்கும் அல்லது நடந்த நிகழ்வினை உதாரணமாகக்கொண்டு விளக்குவார். அவ்வாறே செயல்களின் நிகழ்முறையை   ஃபால்குனை,  ஒரு  நாரை    நாணலின் உட்காரும் நிகழ்வின் மூலம் சித்ராங்கதனுக்கு கற்பிக்கிறாள்.  சித்ராங்கதன் கற்றதை நான் இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.
 நாம் இந்த எடுத்துகாட்டுகளையும் மனதில் வைத்துக்கொள்வோம்.
    

 நேரிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் கால்பந்தாட்ட நிகழ்வு ஒன்று நேரடிய காட்சியாக பல்லாயிரம் மக்களால் பார்க்கப்படுகிறது. அதில் ஒரு கணம். பந்து உதைப்பவனின் காலருகில் வருகிறது கோல் அடிக்கும் வாய்ய்ப்பிருக்கிறது.  அவன் பந்தை உதைக்கிறான். நாம் அங்கு காலத்தை உறைய வைத்துப் பார்க்கலாம். அந்த கணத்தில் என்ன நடக்கிறது.
   
ஒரு போர் நடக்கிறது. கையில் வாளோடு எதிரியுடனான ஒரு சண்டையின் ஒரு நிலை. எதிரியின் வாள் தன் கழுத்தை நோக்கி வருகிறது, அவன் தடுக்க முயலும் அந்த ஒரு கணத்தில் நிகழ்வது என்ன?
   
ஒரு சதுரங்க போட்டி ஒரு முக்கிய நிலை. ஒருவன் காய் நகர்த்த வேண்டும். ஆட்டமுடிவை தீர்மாணிக்க வேண்டிய முக்கிய நகர்வு. அது எப்படி நிகழ்கிறது.
   
 ஒரு காரை ஒருவன் ஓட்டிச் செல்கிறான். முன்னால் செல்லும் ஒரு பெரிய வாகனத்தை தாண்டிச் செல்ல வேண்டும் எதிரே வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன. ஒரு நேரத்தில் அவன் முந்தப்போகிறான், அந்த கணத்தில் அவன் செயப்போவது என்ன? 

    மேற்கூறிய நான்கு நிகழ்வுகளிலும் ஒருவன் செயலாற்ற வெண்டிய நிலையில் இருக்கிறான். இந்த நான்கு நிகழ்வுகளுக்கும் பொதுவாக மூன்று அம்சங்கள் இருக்கின்றன.  அவை அறிவு, சிந்தனை, செயலாக்கம்.


 அறிவு   
  

ஒருவன் ஒரு செயலை உடனே  புதிதாக கற்றுக்கொண்டு செயல் பட முடியாது. அவர்களுக்கு இருப்பது அந்த ஒரு நொடிப்பொழுது. அந்தச் செயல்களை செய்வதற்கான அறிவு ஏற்கெனவே அவர்களுக்கு இருந்தாக வேண்டும்.   அனைத்து நிகழ்வுகளிலும் அவர்கள் செயலாற்றுவதற்கான அறிவை ஏற்கெனவே பெற்றிருக்க வேண்டும்.  அந்த அறிவு மூன்று விதமாக பிரிக்கலாம்.
     

ஒன்று நாம் பிறக்கும்போதே பெற்றிருக்கும் அறிவு. நாரை தன் பரிணாமவளரிச்சியின் மூலம் பெரிய சிறகுகளை அடைந்திருக்கிறது. அதற்கு பறக்கும் திறனும் அதற்கான உடலமைப்பும் பிறவியிலேயே வாய்த்திருக்கிறது.      அவ்வாறு  ஒரு பந்தை லாவகமாக உதைக்கும்   நம் கால்களின் அமைப்பு, வாளை சுழற்றும் கைகளின் இயல்பு விரல்களை தனித்தனியாக பிரித்து பயன்படுத்தும் அறிவு, தூரத்தை கணிக்கும் முப்பரிமான காட்சிகளை, பல வண்ணங்களை வேறுபடுத்தி காணும் கண்கள் கொண்டுள்ள அறிவு. இது நம் உயிரணுக்களின் மூலம் நாம் அடைந்திருப்பது. இந்த அறிவு பல்லாயிர ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் மூலம் அடைந்தது. நம் மூதாதையர் துளித்துளியாக தம் அணுக்களில் அவர்கள் அறியாமலேயே சேர்த்த அறிவு. இந்த அறிவு நம் உடலில் ஏற்கெனவே பதிந்து வைக்கப்பட்ட ஒன்றாகும். 

   இன்னொரு அறிவு நமக்கு நம் பெற்றோர்  மூத்தவர் ஆசிரியர்களால் நமக்கு கற்பிக்கப்பட்டது.    அவர்கள் தம் வாழ்வில் கற்றிருந்தது, மட்டும் அனுபவங்களில் அறிந்தது போன்றவற்றைக் கொண்டு நமக்கு கற்பித்ததால் வந்த அறிவு.  இந்த அறிவு காலம் காலமாக வளர்ந்து வரும் அறிவாகும்.
   

நாரை சிறு குஞ்சாக இருக்கும்போது தன் தாய்ப் பறவை பறப்பதையும் அது ஒரு அசைந்தாடும் நாணலின் மேல் லாவகமாக அமர்வதையும் ஆயிரம் முறை பார்த்திருப்பதன் மூலம் அச்செயலைப்பற்றிய அறிவை அடைகிறது. கால்பந்தை உதைப்பதற்கான் நுணுக்கம், வாள் வீசுவதற்கானநுட்பம்,  சதுரங்க காய் நகர்த்தலின் அறிவு ஆகியவை வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த அறிவைவிட இன்று நாம் கொண்டிருக்கும் அறிவு மிக அதிகம். நாம் இன்று பெற்றிருக்கும் அறிவு என்பது நம் முன்னோர்கள் சிறுகச் சிறுகச் சேமித்துவைத்திருக்கும் செல்வக் குவியலின் ஒரு பகுதி ஆகும்.

   மூன்றாவதாக நாம் அனுபவங்கள் மூலம் அடையும் அறிவு.   ஒரு அறிவை அடைந்திருக்கிறோமா என நாம் அறிந்துகொள்வதும், அதில் நாம் எந்த அளவுக்கு தேர்ச்சி யடைந்திருக்கிறோம், நாம் அதில் கொண்டிருக்கும் அறியாமை  மற்றும் குறைபாடுகள் என்னென்ன என நாம் அறிவதும்,  அனுபவங்கள் மூலமாகவே. ஒருவன் அடையும் அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க நாம் அந்த அறிவில் மிகுந்த நுட்பத்தை அடைகிறோம். அனுபவ அறிவே, தாம் கற்ற அறிவை பயன்படுத்திக்கொள்ளும் திறமையை, நமக்கு அளிக்கின்றன.  நமக்கு தானாக கிடைக்கும்அனுபவங்கள் மிகக் குறைவாக இருக்கும்.  ஆகவே நாமே பயிற்சிகளின் மூலம் நம் அனுபவங்களை பெருக்கிக்கொள்கிறோம்.  வெவ்வேறு விதமான சூழல்களை ஏற்படுத்திக்கொண்டு நாம் செய்யும் பயிற்சிகள் நம் அறிவை  செயல்படுத்தத்தக்கதாகவும் நுட்பமாகவும் மாற்றுகிறது. 
    

நாரை வளர்ந்து பறக்கத் தெரிந்தவுடன். பல நூறுமுறை எவ்வித காரணமும் இன்றி பறந்து நாணலில் அமரமுயற்சிப்பதுமான பயிற்சி அது விளையாட்டென நிகழ்த்தியிருக்கும்.  அந்தப்  பயிற்சியின் மூலம் கிடைத்த அறிவைக்கொண்டதாக அந்த நாரை விளங்குகிறது. அதைப்போல கால்பந்துவீரகள், போர் வீரர்கள், சதுரங்க வீரர்கள், கார் ஓட்டுபவர்கள் அடையும் பயிற்சியின் இன்றியமையாமை நமக்கு மிக நன்றாக தெரியும். அவர்களின் அறிவு அப்பயிற்சிகளின் மூலம் தான் வளர்கிறது.
 

சிந்தனை
   

செயலில் அறிவுக்கு அடுத்து இன்றியமையாதது, சிந்தனை.   ஒரு செயல் செய்வதற்கான அறிவைப்பெற்ற ஒருவன் செயல்பட சிந்தனை வேண்டியிருக்கிறது.  ஒருவன் எத்துணை அறிவு  கொண்டிருந்தாலும்,  அச்செயலுக்கான எவ்வளவு பயிற்சியை பெற்றிருந்தாலும் ஒவ்வொரு செயல் நடப்பதற்கான சூழல், எதிர்கொள்ளும் நபர்கள் வெவ்வேறு.  ஆக அது ஒவ்வொரு முறையும் புது செயல்போல ஆகிறது.
     ஒரு நாரை அமரப் போகும் நாணல், அந்த நாணல் அமைந்திருக்கும் கோணம், அப்போது வீசும் காற்றின் வேகம்,  போன்றவை புதியது.  அதே போன்ற சூழல் ஏறெக்னவே அதற்கு அமைந்திருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஆக அந்த நேரத்தில் நாரை தான் அந்த நாணலில் அமர்வதை பல கோணங்கள், திசைகள், மற்றும் வேகங்களில் தன்னுள் நிகழ்த்திப்பார்க்கிறது.  அதன் மூலம் அது சரியான முறையை அது தேர்ந்தெடுக்கிறது.  ஆயிரம் களம் கண்ட கால்பந்து வீரனுக்கும் அந்தநேரம் அது  புதுச் செயல். எதிர்அணியின் வீரர்கள் இருக்கும் நிலை,   அவர்கள் செயல்படும் விதம் ஆகியவை புதிது. எதிரியின் வாள் சுழற்றும் திறன், சூழல்,  ஒரு போர் வீரனுக்கு புதிது. சதுரங்கத்தின் அப்போதைய காய்களின் நிலை, ஆடும் எதிர் விளையாட்டுக்காரனின் திறன் புதிது. எதிர் வரும் வாகனங்களின் வேகம், முந்த வேண்டிய வாகனத்தின் வேகம், அவற்றிக்கிடையே இருக்கும் இடைவெளி தூரம் என்பதுஅவனுக்கு புதிது. ஆக அப்போது அந்த செயலுக்கான அறிவை பயிற்சியை அவன் கண நேரத்தில் அடைய வேண்டும். அங்கு அவன்  தன் சிந்தனையை மட்டுமே துணைகொண்டு இருக்கிறான்.   வெவ்வேறு முறையில் தன் சித்தத்துக்குள்ளே அந்த செயலை நடத்திப் பார்த்து அதன்படி அச்செயலை இவ்வாறு செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறான். கால்பந்து பலவிதங்களில் பல கோணங்களில்  அவன் சித்தத்தில் உதைக்கப்படுகிறது. வாள் பல்வேறு விதங்களில் சுழற்றி தாக்கிப்பார்க்கப்படுகிறது. காய்கள் பலவிதங்களில் நடத்தி அதற்கான எதிரியின் ஆட்டத்தை யூகித்து அடுத்த நகர்த்தல் திட்டமிடப்படுகிறது. கார் பல்வேறு வேகங்களில் செலுத்திப்பார்த்து முந்துவதா வேண்டாமா என முடிவெடுக்கப்படுகிறது.
 

செயலாக்கம்   
  

தான் இதுவரை சேகரித்த அறிவின் துணைகொண்டு  அவன் சித்தத்தில் நடக்கும் இந்த பரிசோதனைகளுக்கு பிறகு அவன் ஒரு முறையை தேர்ந்தெடுத்து அதன்படி செயல் படுகிறான்.


         ஒரு அம்பை எடுத்து வில்லில் வைத்து நாணை இழுத்து பூட்டுவது போன்றது அறிவைப் பெறுதல், அந்த அம்பை எய்துவதற்கான கோணத்தை விசையை முடிவு செய்தல் போன்றது சிந்தனை, பின்னர் அம்பு விடுத்தல் என்பது செயலாக்கம்.
  

அறிவைப்பெறுதல் இறந்தகால செயல்பாடு, செயலுக்கான சிந்தித்தல் எதிர்காலத்தில் நடப்பதைபற்றியது, செயல் மட்டுமே நிகழ்காலத்தையது. இப்படி முக்காலங்களை கருத்தில் கொண்டு ஒரு செயல் நடத்தப்படுகிறது.
  

வெண்முரசு, ஒரு நாரை நாணலில் அமர்வதைக்காட்டி,  ஒரு   செயல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறது.  செயல் என்பதை அறிந்த நாம் எந்த ஒரு  செயலிலும் எப்படி திறன் அடைவது  என்பதையும் அறிய இயலும்

தண்டபாணி துரைவேல்