Thursday, October 22, 2015

மாயை

மகாவாக்கியம் - http://venmurasudiscussions.blogspot.in/2015/10/blog-post_99.html

//  அப்படியென்றால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை எதுவும் எழுதப்படாத ஒரு வெற்று காகிதம் போன்றதா? //  நவீன அறிவியலிலும் மெய்யியலிலும் Tabula rasa என்றொரு கருத்து உண்டு. அது எழுதப்படாத பலகை என்று பொருள் தரும் லத்தின் வார்த்தை. இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் குழந்தைகளின் உள்ளம் அறிவு என்பது எழுதப்படாத கரும்பலகை போல. அவை வளர்கின்ற சூழலுக்கு ஏற்றார் போல் வடிவமைக்க பெறுகிறார்கள் என்று வாதிடுகிறது.

இதன் எதிர் தரப்பு குழந்தையின் பிறப்பதற்கு முன்பே அதன் குணாதிசயங்கள் தனிதன்மைகள் வரையறுக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறது.

இதிரண்டுக்கும் அப்பால் மனிதர்கள் தங்களுக்குள் கூட்டு நனவிலி - collective unconscious என்பதை கொண்டிருக்கிறார்கள். அது மனித பரினாமத்தில் அறுபடாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக வந்து கொண்டே இருக்கிறது. இந்த collective unconscious என்பது உள்ளுணர்வுகளாலும், ஆழ்படிமங்களாலும் ஆனது. ஒரு உயிரினம் அதன் சூழலிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அது தன் இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவது இதனாலேயே.

கொற்றவை நாவலில் இதை கூறும் வகையில் ஓரிடம் வரும். கடலால் தமிழ் மக்களின் இடம் அழிந்து மிகச்சிலரே உயிர்தப்பி மேலே வந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் மொழி வளத்தை முற்றிலும் இழந்து வெறும் நடைமுறை பயன்பாட்டுக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கி விடும். அந்த சமயத்தில் ஒரு சிறுமிக்கு சன்னதம் வந்து பழைய செம்மொழி அவள் வாய்வழியாக சொற்களாக வந்து கொட்டும்.

----
//நம் மதங்கள் நம்மை வெறும் உடலல்ல என பழங்காலத்திலிருந்து சொல்லிவருகின்றன.//

மேற்கத்திய அறிதல் முறைகளிலும் உடலை மட்டுமே நாம் என்று சொல்லும் போக்கு இருக்கவில்லை. நவீன மெய்யியலின் தொடக்க புள்ளியான Descarteவே அந்த வித்தியாசத்தை உணர்த்துகிறார். Substance என்ற கருத்தை முன்வைக்கிறார். மெய்பொருள் என்று மொழி பெயர்க்கலாம். எது எந்த மாற்றத்திற்கும் ஆளாகாதோ, ஒரு பொருளின் சாராம்சமாக எது விளங்குகிறதோ அதுவே substance என்று கூறுகிறார்.  மனிதனின் சாரம்சம் அவனது சிந்தனை என்கிறார். I think therefore I am என்ற கருத்தை மனிதனின் இருப்புக்கு ஆதாரமாய் சொல்கிறார். அதையே தனது முதல் நிரூபனமாக கொண்டு மற்ற நிரூபனங்களை செய்கிறார். அவரே mind and matter என்ற முக்கியமான பாகுபாட்டை உருவாக்கி தந்தவர். அவரும் அவருக்கு பின்னால் வந்த பிற தத்துவவாதிகளும் Substance என்ற இந்த கருத்திலிருந்து கடவுள் என்ற கருத்திற்கு பல் வேறு வகையில் தொடர்பு கொடுக்கின்றனர்.

----

// அனைத்தும் அறிந்திருக்கும் அந்தப் பேரியற்கையையே  நாம் பரப்பிரம்மம் என்று சொல்கிறோம். //

பேரியற்க்கையே பரபிரம்மம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. நீங்கள் அத்வைதத்தை சார்ந்து எழுதியிருப்பதாக எடுத்துகொள்கிறேன். இம்மானுவல் காண்ட்டின் கூற்றுப்படி நமது அறிவு என்பது நமது புலன்களால் கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்களுக்கு எட்டும் அறிவையே நாம் காண்கிறோம். அது முழுமையான உண்மையல்ல. புலன்களால் நமக்கு வடிக்கட்டி தரப்படும் ஒரு உலகம். அதை அவர் Phenomenon என்கிறார். அப்படி பார்த்தால் இந்த பேரியர்க்கையும் உண்மையல்ல.

இதையே காண்டுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதி சங்கரர் தனது மாயாவாதத்தில் முன் வைக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. பொய்யல்ல, ஒரு மயக்க நிலை. நம் அறியாமையால் உண்மையை  உருமாற்றி நாம் அறிகிறோம் என்கிறார். அதன் படி பேரியற்கையும் மாயையே. இந்த மாயாதிரையை களைந்து பரப்பிரம்மம் எதுவோ அதை தரிசிப்பதே முக்தி.

ஹரீஷ்