Sunday, October 4, 2015

கூரிய திருப்பங்களும் வளைவுகளும்

:
    கணிணியில் பல்வேறு எழுத்துருக்களை  நாம் பயன் படுத்திவருகிறோம். அதில் sans-serif  என்ற ஒரு எழுத்துரு இருக்கும் மற்ற எழுத்துருக்களிலிருந்து அது மாறுபட்டிருப்பது எதில் என்றால் அதில் எழுத்துக்களை கூர்மைப்படுத்தியிருக்கும் நேர்க்கோட்டுதுண்டுகள் நீக்கப்பட்டு மென்மைப் படுத்தப்பட்டிருக்கும். அதை பெண்மைப்படுத்தப்பட்ட எழுத்துரு என எனக்கு தோன்றும். 

   இன்று வெண்முரசில் பெண்ணில் எதனால் பெண்மை மிளிர்கிறது என மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.   கூரான மூலைகளைக் கொண்ட சதுரத்திற்கு வளைவான மூலைகளை அளித்துப்பாருங்கள். நாம் அடைவது ஒரு நளினமான சதுரம் அல்லவா? அதில் ஒரு பெண்மை குடிகொள்வதாக எனக்கு தோன்றும்.  ஒரு  பரப்பில் இருக்கும் கூர்மைகள் அகற்றப்படும்போது கிடைக்கும் வழவழப்பான பரப்பு எனக்கு பெண்மையை நினைவூட்டுகிறது.  ஒரு ஆணின் உடைகள் காலணிகள் போன்றவற்றில இருக்கும் கூரிய மடிப்புகள், திருப்பங்களை வளைவுகளாக மாற்றியவுடன் அவை பெண்ணுக்கானவையாக மாறிவிடுகின்றன,  அப்படியே ஆணின் பேச்சில் சிரிப்பில் இருக்கும் கூர்மைகள்  பெண்ணின் பேச்சில், சிரிப்பில் வளைவுகளால் மாற்றப்பட்டிருக்கும்.  தன் அறிவுக்கூர்மையை அதிகம் வெளிபடுத்திக்கொள்ளாமல் இருப்பது பெண்மையின் குணங்களில் ஒன்றான  மடம் எனக்கூறப்படுகிறது. இப்படியே  வீரத்தின் கூர்மையை குறைத்து அச்சம்,  நிமிர்வின் கூர்மையை வளைத்து நாணம், என பெண்மை தன் குணங்களாக கொள்கிறது.  

   ஜெயமோகன் பார்த்தனை  அவனின் கூர்மைகளை நீக்கி, வளைவுகளை சேர்த்து  ஃபால்குனை என்ற  பெண்ணாக மாற்றுவதை அழகாக சித்தரிக்கிறார்.  அவனை பெண்ணாக தோன்ற வைக்க அவன் சிந்தனையில், நடவடிக்கையில், பேச்சில் , பாவனையில்  இருக்கும் கூரிய திருப்பங்களையெல்லாம் வளைவுகளால் மாற்றுகிறார். அப்போது பார்த்தன் ஒரு  நளினமான பெண்ணாக மாறிவிடுகிறான். உடலின் மாற்றம் என்பது ஒரு பொருட்டல்ல என ஆகிவிடுகிறது. . எந்த ஒரு ஆணும் பெண்ணில் விரும்புவது அவள் உடல் என்பதை தாண்டி அவளிடம் பொன்னென மிளிரும் அந்த பெண்மையை அல்லவா?
 
தண்டபாணி துரைவேல்