Saturday, October 10, 2015

பித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:      இயற்கை அனைத்து விலங்கினங்களிலும் ஆணினத்துக்கும் பெண்ணினத்துக்கும் இடையே ஒரு பொதுவான வித்தியாசத்தை வைத்திருக்கிறது. வீரம், வேட்டைத் திறன் அல்லது குழுத் தலைமை போன்றவற்றில் பெண்ணினம் ஆணினத்தை மிஞ்சுவது சில இனங்களில் இருக்கிறது. ஆனால் தன் துணையை வலிந்து புணரும் தன்மை ஆணினத்துக்கே இருக்கிறது. ஒரு பெண்விலங்கு  எவ்வளவு ஆற்றலிருந்தாலும்  ஆண் விலங்கை அதன் அனுமதியின்றி வன்முறையினால் புணர முடியாது. ஏன் இப்படி இயற்கை வைத்துள்ளது எனத் தெரியவில்லை.

   ஆக புணர்வுக்கான புறத் தூண்டுதலை ஆண்விலங்குகளே ஆரம்பித்து வைக்கின்றன. அவையே ஒரு புணர்வுச் செய்கை ஆரம்பித்து முடிவதுவரை பொறுப்பேற்றுக் கொள்கின்றன. தன் பெண் இணையை உணர்வுக்கு தூண்ட தன் உடலில் பல வண்ணங்கள், தாடி, கொம்பு, கொண்டை, தந்தம், பிடரி, தோகையென பல மாறூதல்களைக்கொள்கின்றன. தன் துணையை கவரும் பொருட்டு கூடுகளைக் கட்டுகின்றன், குதித்து ஆடுகின்றன, தோகை விரித்து நடனமாடுகின்றன, பளப்பளப்பான பொருட்களை பரிசளிக்கின்றன. ஒரு பறவையினத்தில் ஆண்பறவை தன் துணையை கவர  மலர்கள், குழாங்கற்கள், குச்சிகள் போன்றவற்றை வைத்து பூங்கா ஒன்று அமைப்பதை டிஸ்கவரி தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். பெண்ணிற்கான தூண்டுதல் இவ்வாறாக ஆண் விலங்குகளிலிருந்து வருகிறது.
   

ஆனால் ஆண் விலங்கு தன் புணர்வுக்கான தூண்டுதலை எவ்வாறு பெறுகிறது. பெண்விலங்கு தோகை விரித்து ஆடுவதில்லை. பிடரி வைத்துக்கொண்டு ஆண் எதிரில் சென்று சிலிர்த்துக்கொள்வதில்லை. அவை தன்னை பெண்ணெனக் காட்டிக்கொள்வதே ஆண் விலங்குகளுக்கான தூண்டுதலாக அமையும் வண்ணம் இயற்கை வைத்திருக்கிறது.   மனிதர்களில் ஆணுக்கு  அவனைத்தூண்ட  பெண்ணென உருக்கொண்டு அவன் இணை இருந்தால் போதும் என இருந்தது. ஆனால் மனித சமூகம் அறிவின் துணை கொண்டு வளர்ந்து இருக்கிறான். அவன் மற்ற விலங்குகளைப்போல் இயற்கையின் கைப்பாவை இல்லையென நிறுவ விழைகிறான். அவர்கள் ஆடை அணிந்துகொண்டனர்.   மற்றும் ஆண் தன் மனதை இயற்கையின் தூண்டுதலுக்கேற்ப சிந்தித்துக் கொள்வதை தடுக்க முயற்சிக்கிறான்.  ஆகவே வெறும் ஆடை மூடிய பெண்ணுடலின் கவர்ச்சியிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளமுடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் இயற்கை  பெண்ணிற்கு தன்னுள் மேலும் பெண்மையை மிளிரவைக்கும் திறனை அதிகமாக தந்திருக்கிறது. அவள் ஆடைகளை, அவள் பெண்ணென தோன்றுவதை தவிர்க்காத வண்ணம் அணிந்துகொள்வதுடன்,  அந்த ஆடைகளில் அவள் பெண்மை மேலும் ஒளிரும் வண்ணம் செய்து கொள்கிறாள்.

அவள் அணிகலன்களை பூணுகிறாள். அவள்  தன் கண்களுக்கு மையிட்டுக்கொள்கிறாள். தலை முடியை வாரி பல்வேறு அலங்காரங்களை செய்து கொள்கிறாள். அவளின் பாவனைகளில் பல மென்மையான் அழகான நளினங்களை கொள்கிறாள். இவை அனைத்தையும் ஒரு பெண் அறிந்து செய்கிறாள்  என்பதில்லை. இயற்கையின் வழி அவள் செயல்படுகிறாள்  என்றே சொல்ல வேண்டும். சிறு பெண் குழந்தை ஒரு வண்ண ஆடையை தோளில் போட்டு  கண்ணாடியில்  அழகு பார்த்துகொள்கிறது. அப்போது அக்குழந்தைக்கு அதன் மனம் அறிந்த நோக்கம் என்று என்ன இருக்க முடியும்?  நேற்று  ஒரு பெண் தன் இன வழக்கப்படி தன்னை உடல் முழுதும் கருப்புத்துணியால் போர்த்திசெல்வதைப் பார்த்தேன்.

ஆனால் அந்த கருப்புதுணியின் முகப்பில் அழகிய வண்ண மயிற்பீலி வண்ண நூலால் வரையப்பட்டிருந்தது. பெண்களால் தம் பெண்மையை மறைத்து வாழ முடியாது.  அவளிடம் பெண்மை எப்போதும்  ஒரு அணையாத தீபம் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும்.  அப்படி இல்லாமல் கற்பு, இனமானம், பண்பாடு, மதம் எனச் சொல்லி அவளை முடக்கி தன் பெண்மையை வெளிக்காட்டாமல்  வாழச்சொல்லுதல், ஒரு பறவையை சிறகொடித்து தரையில் வாழவைப்பதைப்போல் இயற்கைக்கு முற்றிலும் முரணானது.

    பெண்களில் பெண்மை மிளிர்வதும் அதனால் ஆண்கள் கவரப்படுதலும் இயல்பானது,  இயற்கையின் விதிப்படி நடப்பது. ஆனால் ஃபால்குணை உண்மையில் பெண்ணல்ல அல்லவா? ஏன் அவளால் மணிப்புரி ஆண்கள் கவரப்படுகிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் அவள் அழகு அவர்களை பித்துக்கொள்ளச் செய்கிறது.   அந்த ஆண்கள் இதற்கு முன் அழகிய பெண்களை பார்த்ததேயில்லையா?

    ஒரு அழகிய பெண் பேரழகியாவது  அவள் தன்னில அந்த பெண்மையை சிறப்பாக ஒளிரச் செய்வதில் இருக்கிறது. ஃபால்குனை பார்த்தனின் பெண் வடிவு. பார்த்தன் பலநூறு பெண்களில் அழகைக் கண்டவன். உடலழகையும் தாண்டி அந்தப் பெண்களின் அவர்கள் அறியாது இயல்பாக காட்டிய அழகிய பாவனைகளில் சுடர் விட்ட பெண்மையை அறிந்தவன்.  எந்த பாவனை, எந்த நளினம், எந்த அசைவு, எந்த சைகை, ஒரு ஆணின் இதயத்தை சென்று தைக்கும் எது அவர்களின் சித்தத்தை மயக்கி பித்துகொள்ளவைக்கும் என்றறிந்தவன்.   அவன் ஃபால்குனையாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் அவள் உள்ளத்தில் பதிந்திருக்கும் அந்த சிறந்த பாவனைகளை வெளிப்படுத்தி  காணும் ஆண்களையெல்லாம் சித்தம் மயக்கி தடுமாற வைக்கிறாள்.

தண்டபாணி துரைவேல்