Monday, October 12, 2015

ஆசிரியன்


இனிய ஜெயம்,


மற்றுமொரு கூறிய அத்யாயம்.  பள்ளி ஆசிரியன் அளிக்கும் கல்விக்கும், குரு அளிக்கும் கல்விக்குமான வேறுபாடு என்ன?  பள்ளிக் கல்வி செத்துப் போனது. ஏட்டில் இருப்பதை மனனம் செய்து அதை புறத்தில் பிரயோகித்துப் பார்ப்பது. குரு அளிக்கும் கல்வி உயிர் உள்ளது.  புரத்தை அகத்தின் ஆழத்துடன் உரையாட வைத்து மனித இருப்பின் இரண்டிமையை உணர வைப்பது.

இங்கே ஒரு குரு இந்த நொடி, இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து இங்கே இப்போதே அறிந்து கொண்டு, [முதலில் பறவையாக இருந்து, பின் சிறகுகளாக இருந்து, அதன் பின் பறத்தல் ஆக மட்டுமே எஞ்சி] அதை சீடனுக்கும் உணர்த்துகிறார். குறிப்பாக அவர் இயற்கையில் இருந்து தனது வித்தையில் தேர்ச்சியை உயர்த்தினாரா? அல்லது தனது வித்தை இயற்கையில் எங்கு என்ன விதமாக இலங்குகிறது என்று அறிந்து உரைக்கிறாரா?

முதலில் குரு சித்ராங்கதனின் அகத் தடையை உடைக்கிறார். அவனது அகத்தை புறத்துடன் உரையாட வைக்கிறார். அந்தத் தடை சித்ராங்கதன் தனது மெல் உணர்வுகளை கொல்வதில் துவங்குகிறது.  அதில் அவனை நோக்கும் பறவை ஒன்றின் விழியில் முட்டி திகைத்து ஊழ்கத்திளிருந்து விலகுகிறான். எல்லா சாதகனும் திகைத்து பின்வாங்கும் இடம் இதுவே. சாதகனுக்கு குரு தேவைப்படும் இடமும் இதுவே,  நீச்சல் சித்ராங்கதனை அவன் தந்தை புனலுக்குள் எறிவதைப் போல, குரு அவனை அவனது துரியத்தின் ஆழத்துக்குள் எறிகிறார்.  இறுதிக் கொடியின் பிடியும் தளர, மிதக்கும் தீவை இழந்து ஆழத்தில் அமிழ்கிறான் சித்ராங்கத.   பின் காண்கிறான் அன்னைப் பறவை விழி கறந்த பேரன்பை.

இங்கே மிதக்கும் நிலம், மனித எண்ணங்கள் என்பதன் ஸ்தூலமாகவே விரிகிறது.  ஒரு சென் கதை உண்டு. சீடன் ஒருவன் வானில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் பறவையை தன் அம்பால் வீழ்த்திக் காட்டுவான். குரு  பறக்கும் பறவையை தனது பார்வையாலேயே வீழ்த்திக் காட்டுவார். அக் கணம் சீடன் தான் கற்க வேண்டியதது என்ன என அறிந்து கொள்வான்.  அந்த சீடன் எதை கற்க்கிரானோ அதையே இங்கு சித்ராங்கதணும் கற்கிறான்.

பறவை வந்து அமரும் ஒரு கணத்துக்கு முன், அதன் அகம் அங்கு சென்று அமர்ந்து விடுகிறது,  கருத்து பொருளை செயல்படுத்துகிறது அம்பு பிந்திமையத்தை தொடு முன் அதை வில்லாளியின் அகம் துளைத்து விடுகிறது.

இதோ இதை எழுதும் கணம், என்னுள்ளே கவசமும் குண்டலமும் ஒளிர, கர்ணன் கிந்தூரத்தை உயர்த்தி நாண் பூட்டி கேசினியை குறி வைக்கிறான்.  மனதில் குருவின் பாதம். வணங்கி நாணை விடுவிக்கிறான்  அதற்க்கு ஒரே ஒரு கணத்துக்கு முன் அவன் அகம் பிழைக்கிறது. அம்பும்..... 

கடலூர் சீனுி