உலகில் பலவிதமான முட்செடிகள் இருக்கின்றன. சில சிறிய முட்களை உடையவை, சிலவற்றின் முட்கள் மிக மெல்லியவை குத்திய பிறகுதான் முட்களை உணர்வோம். சில செடிகளின் முட்களை ஒரு பக்கமாக தடவினால் குத்தாது. ஆனால் எதிர்பக்கமாக தடவினால் கைகளில் தைத்துக்கொள்ளும். இலைகளில், தண்டுகளில், கனிகளில், விதைகளில் என பல்வேறு இடங்களில் முட்கள் அமைவதுண்டு. முட்களே இலைகளாக கொண்ட செடிகள்கூட உண்டு. சில தாவரங்களின் முட்கள் சுறாவின் பற்களைப்போல நீண்டு மிகக் கூறியதாக இருக்கும். அதன் அருகில் செல்லவே அச்சமாக இருக்கும். ஆனால் அத்தனை முள்கொண்ட தாவரத்தின் மலர்களும் அழகாக பலவண்ணங்களில் மிளிர்பவை, வாசம் நிறைந்தவை, தொடுவதற்கும் மிக மென்மையானவை.
அதைப்போல மனிதர்கள் ஒவ்வொருவரும், சுயநலம், பொறாமை, கோபம், அகங்காரம், பேராசை போன்ற முட்களைக்கொண்டிருப்பவர்கள். ஆனால் அவர்களிடமும் பூக்கள் பூப்பது உண்டு அதை நாம் அன்பு என்று சொல்கிறோம். மனிதர்கள் தம் உணர்வுகளில் மிகவும் மென்மையானது அழகானது அன்புணர்ச்சியாகும். நாம் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் கரிசனத்தை அன்பு என்று சொல்கிறோம். தாயன்பு, தந்தையன்பு, பிள்ளைகள் பெற்றோர்மேல் மேல் காட்டும் அன்பு, சகோதர சகோதரிகளுக்கிடையேயான அன்பு, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் அன்பு, நண்பர்கள் தமக்குள் காட்டும் அன்பு என இவை மனிதர்களில் பூக்களாய் மலர்ந்திருக்கின்றன. ஒருவேளை இந்த மலர்களுக்காகத்தான் இறைவன் இந்த மனித குலத்தை சகித்துக்கொள்கிறான் போலும்.
அப்படிப்பட்ட அன்புகளில் பெரும்பாலானவை உறவுகளுக்கிடையே இடையே வருவன. குழந்தையிலிருந்தே கற்பிக்கப்பட்டு வருவன. அதாவது உறவு அதனால் அன்பு. ஆனால் நட்பில் தலைகீழாக இது இருக்கிறது. ஒருவர் மேல் அன்பு அதனால் நட்பு. நட்பில் துளிர்க்கும் அன்பில் பந்தம் ஏதும் இல்லை. பானுமதி கர்ணன் மேல் கொண்டிருப்பது நட்பாய் பூத்த அன்பு. பலதார மணம் மிக இயல்பாக இருக்கும் காலம்தான், அதுவும் அரசியல் காரணங்களுக்காக அரசர்கள் பல மனைவியரை மணக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் உள்ள காலம். இருந்தாலும் துரியோதனன் பானுமதிமேல் கொண்ட பேரன்பினால் இன்னொரு மணம் செய்துகொள்வதை சற்றும் சிந்திக்காதவன். வேறு யாராவது அவன் இன்னொரு மணம் செய்துகொள்ளலாம் எனக் கூறியிருந்தால் அவர் தலையை மண்ணில் உருட்டி இருப்பான். அத்தகைய கணவனின் காதலை இன்னொருவளிடம் பங்கிட்டுக்கொள்ள பானுமதி முடிவு செய்கிறாள். அதற்கு எப்படி அவள் மனம் ஒப்புகிறது? கர்ணன் மேல் கொண்ட நட்பின் விளைவாக அவளுக்கு அவனிடம் பெருகிய பேரன்பு அல்லவா காரணம்.
ஆனாலும் கூட ஒருவருக்கு நன்மை செய்ய தான் பள்ளத்தில் விழுவது அவ்வளவு புத்திசாலித்தனமா என்று பார்க்கவேண்டும். பானுமதி துரியோதனன் இன்னொரு மணம் செய்துகொள்வது தனக்கு ஏற்படும் ஒரு இழப்பாக கருதவில்லை. அவள் அன்பு பொங்கும் ஊற்று. ஒரு ஊற்று அனைவரின் தாகத்தை தனிக்கும், அதற்கு தாகம் என்பது என்றும் கிடையாது. அவள் மனம் நிறைந்தவள். அவள் அன்பைப் பெறுபவள் அல்ல. அன்பை அளிப்பவள். துரியோதனனின் இன்னொரு திருமணம் அவளிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது.
எனக்கு அகல் விளக்கின் ஒளிதான் பிடிக்கும், மெழுகுவர்த்தி வேதிப்பொருளால் செய்யப்பட்டது என்பதால் அதன் மேல் சற்று மன விலக்கம் உண்டு. ஆனால் தத்துவார்த்தமாக அகல்விளக்கைவிட எனக்கு மெழுகுவர்த்திதான் சிறப்பானது எனத்தோன்றுகிறது. அகல் விளக்கு எரிவதற்கு அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும், அவ்வப்போது அதன் திரியை தூண்டிவிடவேண்டும். ஆனால் மெழுகுவர்த்தி எரிவதற்கு வேறு எதுவும் தேவையில்லை. யாராவது தூண்டிவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் அது தன்னை உருக்கிக்கொண்டு தூண்டுதல் ஏதுமின்றி தானாக எரியக்கூடியது. தன்னுள் நிறைவு கொண்டது. மெழுகுவர்த்தி முழுதும் அழிந்தபிறகுதான் அதன் சுடரினால் ஒளி தரும் பணி முடிவடையும். பானுமதி தன் நலனை குறைத்துக்கொண்டு கர்ணனுக்கு உதவி செய்யும் பேரன்புகொண்டவளாக இருக்கிறாள். தன் கணவன் மேல் கொண்ட இன்னொரு பெண்ணின் காதலை புரிந்து அவளை தனக்கு இணையென வைக்கிறாள். அவள் தன்னிறைவு கொண்டவள் என்பதை அது காட்டுகிறது. அவள் முழுதும் நிறைந்திருக்கும் பேரன்பு மெழுகுவர்த்தியின் தீபமாய் அவள் சொல் செயல்களில் ஒளிவிடுகிறது.
தண்டபாணி துரைவேல்