அன்புடன் ஆசிரியருக்கு
ஆனால் சற்று உண்மையாக
யோசிக்கையில் நீங்கள் சொல்வதுபோல் அழிவை விரும்பும் எளிய மனமாக நான்
இருந்திருக்கிறேன். பிரம்மாண்டமான பெரும் போர்கள் இடிந்து மண்ணில்
விழும் பெருங்கட்டிடங்கள் மோதிச் சிதறும் ஆயுதங்கள் என ஆங்கிலத்
திரைப்படங்கள் அளிக்கும் அழிவுச் சித்திரத்திற்காகவே நான் அவற்றை
விரும்பியிருக்கிறேன் என்பதே உண்மை. அடுத்த கட்டமாக பெரும் அழிவு
நிகழவிருக்கும் பரபரப்பினை உருவாக்கி இதயத் துடிப்பினை உயர்த்தி
அவ்வழிவினை பல தடைகளை கடந்து தடுக்கும் சுயநலமற்ற வீரம் நிறைந்த
மக்கள் போற்றும் கதாநாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் படங்களை அதிகம்
விரும்பினேன்.
அதன்பின் தன் தியாகத்தை ஒருவரும் அறியவில்லை
என்றாலும் கூட மக்களை காப்பாற்றியே தீருவேன் என்ற இலட்சியம் கொண்ட
கதாநாயகர்களை மனம் விரும்பியது. இதே உளநிலை என் வாழ்விலும்
பிரதிபலித்திருப்பதை உணர முடிந்தது. இறுதியாக பெறும் சலிப்பே எஞ்சியது.
முழுமையாக அழிக்கப்பட வேண்டிய "கெட்டவர்கள்" நிஜ வாழ்க்கையில் இல்லாத
போது அவர்களை அழிக்க வேண்டிய "நல்லவன்" சோர்வினையே கொடுத்தான். பின்
அந்த நிறைவு கொள்ளாத "நாயக ஏக்கம்" உள்ளுக்குள் புதையுண்டது.
வெண்முரசின் அனைத்து வலுவான ஆளுமைகளும் முதல் மூன்று நூல்களிலேயே
அவர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளுடனும் குழப்பங்களுடனும்
தீர்மானங்களுடனும் அறிமுகமாகி விடுகின்றனர்
இருவரைத் தவிர. திரௌபதியின்
பிறப்பும் அவள் ஆளுமையும் அனைத்து விதமான நுட்பங்களுடன்
உத்தானபாதனின் கதையில் தொடங்கும் பிரயாகையில் வெளிப்படுகிறது. அதுவொரு
தாங்கிக் கொள்ளக் கூடிய அதிர்ச்சி. ஆனால் நீலனின் அறிமுகம் நிச்சயம்
தவளையின் தலையில் இமயம் என்று தான் சொல்ல வேண்டும். அன்னை மேல்
கால்போட்டுத் தூங்கும் ராதையை அவன் தன் மழலைக் குளிர் கரங்களால் அனைக்க
வரும் நீலத்தின் முதல் பகுதியிலிருந்து கடம்பின் முன் நின்று அவன்
குழலிசைக்கும் இறுதி வரை நடந்தது என்ன என என்னால் உணர முடியவில்லை.
ஆனால் படமெடுக்கும் நாகம் காண்கையில் பயமும் பரவசமும் ஒருங்கே
தோன்றுமே அது நிகழ்ந்திருந்தது என்னுள் என நினைக்கிறேன். அந்த
அடித்தளத்திலிருந்து அவன் கட்டமைக்கப்பட்டான். நீலத்தினை தவிர்த்தும்
வெண்முரசினை படிக்க முடியும். அப்படி படிக்கையில் குந்தியிடம் அவன்
நிகழ்த்தும் அரசு சூழ்கை புரியும். ஆனால் அடுத்த கணம் அவள் காலைப்
பிடித்துக் கொண்டு அவன் பேசும் கனிச்சொற்கள் புரியாது. அதுபோலவே பல
தருணங்களைச் சொல்லலாம். இருந்தும் அத்தருணம் மீண்டும் என் நாயகனை
எனறென்றைக்குமான நாயகனை கண்டறிந்த தருணம்.
கொலையையும் காதலையும்
ஒன்றென நிகழ்த்துபவன். நிகழ்வில் தொடர்பற்றவன். வெண்முரசின் வழியே
அவனை விரித்துக் கொண்டே செல்லலாம் எனினும் நான் சொல்ல வந்தது அவன்
என்னுள் நிகழ்த்திய நுண்ணிய மாற்றங்களை. எனக்குத் தெரிந்த எளிமையான
சரிகளையும் தவறுகளையும் கடந்து ஒட்டுமொத்த வாழ்வையும் பெரும்
பெருக்காக காண வைத்தது உங்கள் வழியே உருக்கொண்ட கிருஷ்ணன். வண்ணக்கடலில்
கார்த்தவீரியன் ஆயிரம் கரங்களோடு உருவகம் கொள்வார். சூரியனையும்
"ஆயிரம் கரங்கள் நீட்டி அணைப்பவன்" எனச் சொல்வதுண்டு.
பில்லியனும்
டிரில்லியனும் இருந்தும் எனக்கு இன்றும் ஆயிரம் என்பதே கவர்ச்சிகரமான
பெரும் எண்ணிக்கையாக இருக்கிறது. உணர்வுகளை மட்டுப்படுத்தி
யோசிக்கையில் விஷ்ணுபுரத்தை அறிமுகப்படுத்தும் நாராயண குருவின் வரி
"ஒவ்வொன்றாய் தொட்டெண்ணுதல்" என்பதே நினைவிலெழுகிறது. அவனும் ஆயிரம்
கரம் கொண்டு ஒவ்வொன்றாய் தொட்டெறிந்ததிருப்பானோ?அவனுக்கே
வெளிச்சம்.திடீரெனத் தோன்றியதை எழுதிவிட்டேன். அதிகப்பிரசங்கித் தனம்
தெரிந்தால் மன்னிப்பீர்களென நம்புகிறேன்.
அன்புடன்
சுரேஷ்
சுரேஷ்