அன்பு ஜெயமோகன்,
ஒற்றைப்பெருஞ்சொல்லில்
இருந்து புலர்கின்றன கதிர்களாய் சொற்கள். ஒவ்வொரு கதிரிலும் பறவையின் துடிப்பு.
ஒவ்வொரு கதிரிலும் மானின் பாய்ச்சல். புலர்கின்றன கதிர்கள். நடுங்குகிறது இருள்.
சேர்ந்து சேர்ந்து சொற்கள். நெருங்கி நெருங்கி சொற்கள். அணைத்த சொற்களின் திரள்
வெளிச்சம். இருளுக்கு எதிரான பெரும் முழக்கம். கதிர்களின் தொகுப்பில் உருப்பெறுகிறது
பரிதியொன்று. காணும் விதிர்ப்பில் கருக்கொள்கிறது சுருதியொன்று.
ஒற்றைப்பெருஞ்சொல்லில்
இருந்து புலர்ந்த சொற்பரிதி. கதிர்களின் வெம்மையில் குளிர்காய்கிறேன். அனலின்
கதகதப்பில் அலைபாய்கிறேன். இருளைக் கிழித்து சொற்களின் தாவல். இணையாய் விரைகிறது
வாழ்வின் பாடல். சொற்களின் பயணத்தில் புதுப்புதுக் காட்சிகள். கண்டுகொள்பவருக்கு
கணக்கில்லா மீட்சிகள். கதிர்களின் முதுகேறிப் பயணிக்கிறேன். காலங்கள் பொடியாக
பிரமிக்கிறேன்.
ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து அரும்புகின்றன துளிகளாய் சொற்கள்.
ஒவ்வொரு துளியிலும் வேரின் மூச்சு. ஒவ்வொரு துளியிலும் படைப்பின் வெப்பம்.
அரும்புகின்றன துளிகள். நோக்குகின்றன விழிகள். நழுவி நழுவிச் சொற்கள். தழுவித்
தழுவி சொற்கள். திரண்ட சொற்களின் தேரோட்டம். வடம்பிடிக்கத் துடிக்கும் போராட்டம்.
உருண்டோடும் சொற்களில் கிளைக்கிறது நதியொன்று. திகைப்பின் தத்தளிப்பில்
துவங்குகிறது துதியொன்று.
ஒற்றைப்பெருஞ்சொல்லில்
இருந்து முகிழ்த்த சொல்நதி. நுரைத்தோடும் சொற்களில் கரைந்தோடுகிறேன். இழுவைக்கு
இணங்கி விரைந்தோடுகிறேன். வழிகளைக் கிழித்துச் சொற்களின் பயணம். நடுங்கி நிற்கிறது
வாழ்க்கையின் மரணம். சொற்களின் பாய்ச்சலில் புதிய திசைகள். விரியும்
காட்சிகளில் துடிக்கும் இசைகள். நுரைத்தோடும் சொற்களில் கரைந்தோடுகிறேன். ஒவ்வொரு
கணமும் நிறைந்தோடுகிறேன்.
ஒற்றைப்பெருஞ்சொல்லில்
இருந்து நிமிர்கின்றன மரங்களாய் சொற்கள். ஒவ்வொரு மரத்திலும் குழந்தையின்
பால்வாசம். ஒவ்வொரு மரத்திலும் கன்னியின் முலைவாசம். நடனமாடுகின்றன மரங்கள்.
தழுவத்துடிக்கின்றன கரங்கள். நகர்ந்து நகர்ந்து சொற்கள். சேர்ந்து சேர்ந்து சொற்கள்.
குவிந்த சொற்களின் புதுநடனம். விரிந்த காட்டின் பெருமெளனம். சொற்களின் அசைவில்
பூக்கிறது மென்காற்று. மயங்கும் மனதிலிருந்து எழுகிறது புதுப்பாட்டு.
ஒற்றைப்பெருஞ்சொல்லில்
இருந்து விளைந்த சொல்வனம். நெருங்கி இருக்கும் மரங்களில் குதித்தேறுகிறேன்.
கிளைகளைத் தொங்கிக் கொண்டு களைப்பாறுகிறேன். மரங்களுக்குள் சுழன்று சுழன்று
புதுநடனம். இலைகளின் தழுவலோடு களிநடனம். காணும் மரங்களில் கணக்கில்லா கனிகள்.
சொட்டும் சாற்றில் அளவில்லாச் சுவைகள். மரங்களின் தலைகள் மிதித்து முன்செல்கிறேன்.
துயரங்களின் பிடிதகர்ந்து பின்செல்கிறேன்.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.