வியாச பாரதத்தில் விசித்திர வீரியனே சில பத்திகள் தான் வருகிறான் என்றால், சித்ராங்கதன் சில வரிகளே வந்திருப்பான். குஹ்யமானசத்தில் தன் ஆடிப் பிம்பம் கண்டு அதை அணைக்கச் சென்று மறைந்ததாகவே வெண்முரசு சொல்கிறது. இளமையில் நான் படித்த பாரதமும் சித்ராங்கதன் அதே பெயர் உள்ள கந்தர்வனால் போரில் கொல்லப்பட்டான் என்றே உள்ளது. அந்தப் போர் மூன்று வருட காலம் நடந்ததாகவும் படித்திருக்கிறேன். எனக்குப் புரிந்த வகையில் சித்ராங்கதன் ஒரு வித மனப் பிறழ்வில் இறந்தான் என்றே தோன்றுகிறது. வெண்முரசு அவ்வாறு ஊகிக்க இடம் அளிக்கிறது.
வெண்முரசில் ஜெ
சித்ராங்கதன் என்ற பாத்திரத்தை கிரேக்க தொன்மமான நார்சிசஸ் போல
சித்தரித்திருக்கிறார். இந்த நார்சிசஸ் என்பவனிடம் இருந்து தான் நார்சிஸ்ட்
என்ற பதம் வந்தது. இந்த நார்சிசஸ் என்பவனை எக்கோ என்ற பெண்
விரும்பியதாகவும், அவன் அவளை வெறுத்து ஒதுக்கியதாகவும், அதனால் மனமுடைந்த
எக்கோ வெறும் எதிரொலியாகவே மறைந்ததாகவும் ஓர் கிரேக்க தொன்மம் உண்டு. அந்த
எக்கோ என்ற பெண்ணின் மீது பரிதாபம் கொண்ட பழி வாங்குதலின் கடவுளான நெமிசிஸ்
(இது ஓர் பெண் கடவுள் என்பது உப தகவல்) நார்சிசசை ஓர் தெளிந்த நீர்
நிலையில் அவன் பிம்பத்தைப் பார்க்க வைத்தது. தன் பிம்பம் அது என்று அறியாத
நார்சிசஸ் அதன் மீது காதல் கொண்டான். அதைத் தழுவ முயன்று அது கைகூடாமல்
மூழ்கி இறந்தான். அல்லது தான் கண்ட அந்த அழகானவனை அடையவே முடியாது என்பதை
அறிந்து தற்கொலை செய்து கொண்டான்.
இங்கே
வெண்முரசில் இன்னும் கொஞ்சம் தெளிவாக்கியிருக்கிறார். சித்ராங்கதன் தன்
அழகின் மீதே ஆர்வம் கொண்டவனாகக் காட்டப் படுகிறான். அவன் ஓரினச்
சேர்க்கையாளன் என்று கருதவும் இடமிருக்கிறது. ஆனால் தெளிவாகச்
சொல்லப்படவில்லை. அவன் தன் அணுக்கமானவர்களாக இளைஞர்களை வைத்துக் கொண்டான்
என்றும், அவர்களினூடாக அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான் என்றும் தான்
வருகிறது. அவன் தேடியது முழுமையான அழகை அல்லது முழுமையான ஆண்மைத் தனத்தை.
அத்தேடல் அவனுக்கு அவனது தாயான சத்தியவதியிடம் இருந்து கருவிலேயே
உருவேற்றப்பட்டதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அவள் தான் யமுனையின்
அடிப்பரப்பில் கண்ட அந்த அழகிய கந்தர்வனைத் தான் தன் மகன் என்றே
நினைத்திருந்தாள். அதைத் தான் அவன் பிறந்தவுடன் சியாமையிடம்
கேட்கிறாள். யமுனையின் அடி என்பது சத்தியவதியின் அக ஆழம் என்று வாசித்தால்
அது இன்னும் பொருள் கொள்கிறது. அதனால் தான் அவள் அவனை நானே கொன்று விட்டேனா
என்று கேட்கிறாள்.
மேலும் விசித்திர வீரியன் ஓர்
நோஞ்சானாக இருக்கப் போய் அவளின் மொத்த எதிர்பார்ப்புகளும் சித்ராங்கதன்
மீதே ஏற்றப்பட்டிருக்கலாம். அதைத் தான் அவன் விசித்திர வீரியனிடம்
சொல்கிறான், "நன்றாகப்பார்…பட்டுத்துணியை நீவி நீவி ஓவியத்தின் கசங்கலை சரிசெய்வதுபோல உன்னை இதோ சீர்ப்படுத்தியிருக்கிறேன்…"
என்று. முழுக்க முழுக்க சத்தியவதியின் எதிர்பார்ப்புகளைத் தன் தோளில்
ஏற்று அவன் அந்த முழுமையான அழகனைத் தேடிக்கொண்டே இருந்திருக்கிறான்.
சித்ராங்கதன் குஹ்யமானசம் வருவதற்கு முன் பல நாட்களாக அந்த கானகத்திலேயே
ஓர் மானைத் தேடி அலைந்து கொண்டேஇருக்கிறான். அந்த நாட்கள் அனைத்திலும் அவன்
ஆடியை நோக்கவே இல்லை. அவன் வேறு யாரையோ தேடாமல், தானாகவே
இருந்திருக்கிறான். பல நாட்கள் கழித்து குஹ்யமானசத்தின் தெளிந்த நீரில் தன்
உருவத்தைத் தானே கண்டதும் அவனுக்கு அரண்மனையில் செய்து கொண்டிருந்தவை
அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இனி மீண்டு அரண்மனை சென்றால் தான் தானாகவே
இருக்க இயலாது என்றும், மீண்டும் இல்லாத ஒருவனை ஆடியில் தேடத் துவங்குவோம்
என்றெல்லாம் மனம் பிறழ்ந்திருக்கலாம். அதன் விளைவாகவே அந்த சுனையில்
விழுந்து இறக்கிறான். அதைத் தான் கவித்துவமாக "நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்" என்று வெண்முரசு சொல்கிறது.
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்