அன்புள்ள ஜெ,
எனக்கு த்ரௌபதி - நகுலன் ; திரௌபதி - சகாதேவன் இவர்களின் இணை (ஜோடி பொருத்தம்) மிகுந்த சுவாரஸ்யமாக படுகிறது.. அர்ஜுனனன் - மிகச்சிறந்த வில்லாளன் / பீமன் - பெருந்தோள் கொண்ட பெரும் வலிமை கொண்ட வீரன், தருமன் - பட்டத்து இளவரசன் என்ற பெரும் தகுதியை கொண்டவன்; அவர்களே த்ரௌபதி என்ற பெரும் ஆளுமை முன்னாள் சிறு குழந்தை என ஆகிறார்கள். அவர்கள் முன்னே எந்த தகுதியும் இல்லாத நகுலனும் சகாதேவனும் எங்கே?
இது முற்றிலும் பொருந்தாத இணை / ஜோடிகள்! அவளின் அகத்தில் நகுலனுக்கும் / சகாதேவனுக்கும் எந்த இடம் இருந்திருக்கும்?
இப்போதும் நாம் நாட்டில் பார்க்க கூடிய விஷயமாகவே இது இருக்கிறது.. பொருந்தா மனம் .. நான் சொல்வது வயதிலோ / அந்தஸ்திலோ அல்ல .. மனைவியின் ஆளுமை - கணவனின் ஆளுமை என்பதில். சில நேரங்களில் தி.ஜா. இந்த இடத்தினை தொட்டு இருப்பார்.
நீங்கள் மகாபாரதத்தில் வீரர்களை மட்டுமே சொல்லப்போவதில்லை , ஜனநாயக யுகமாகையால் அனைவைரையும் சொல்ல போகிறீர்கள்.
நீங்கள் நகுலன் / சகாதேவன் பார்வையிலும் அதிகம் கூறவேண்டும். தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் அனாதைகளாக , பெரும் ஆளுமை கொண்ட அண்ணன்களின் மத்தியில் , புகழும் இல்லாது வலிமையையும் இல்லாது , தங்களின் ஆளுமைக்கு / திறமைக்கும் ஒவ்வாத மனைவியோடும் (வேறு திருமணங்கள் நடந்ததாக சொல்லபட்டாலும்)அவர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். என்னை பொறுத்தவரை அவர்களின் பார்வை சுவாரஸ்யமான கோணம் ..
கோகுல் சீனிவாசன்