Wednesday, March 4, 2015

ஆடியின் அனல்இனிய ஜெயம்,

கணிப்பொறி இன்னும் கை சேர வில்லை. இரவல் கொண்டு இதை எழுதுகிறேன்.   எழுதி நீ நாள்  கடந்தது போல் ஓர் உள இடக்கு.   எழுத அமர்ந்தால்  அகம் கொண்டது ஆழ்கடல் மௌனம்.   இனிய ஜெயம் இதுவரை இப்படி ஒன்றை அனுபவித்ததே இல்லை. இனிய ஜெயம் என்ற சொல்லே போதும் என் மடை உடைக்க,  காலை முதல் அமர்ந்திருந்தேன்  ஒரு சொல்லும் பிறக்கவில்லை.  விண்ணென்று மூளை தாக்கியதோர் உன்மத்தம். கலவிக்கு முன்பான, முன்விளையாட்டு  போல  எழுதிப் பார்த்தேன்.  பொங்கி வந்தது.  திருதா முன்  நம்பிக்கை ஒளி தேடி நின்றிருந்த விதுரரின் நிலை. சிவோகம் கண்டதும் விதுரர் அடைந்த அதே உவகை.  இனிய ஜெயம்  பிறவிக் கடல் கடக்க நீங்கள் பற்றிய புணை, எத்தனை உவகை என்று. இதை எழுதி கண்டுகொண்டேன்.எழுத்து உங்கள் தியானம் அல்ல, உங்கள் அகமே அதுதான்.

நீங்கள் சொன்னதுபோல  ஆடியின் அனல் அத்யாயமே  பிரயாகை நாவலின் உணர்வு நிலையை முழுமை செய்கிறது.  அது ஆடியின் அனல் கூட அல்ல, குவி ஆடி கொண்டு குவிக்கப்பட்ட பரிதியின் அனல்.  இந்த வெண் முரசு பல விஷ்ணுபுரம் நாவல்களுக்கு சமம். ஸ்ரீ நாமரின் மோகினி முன் அமர்ந்து யோகத்திரக்கும் பத்மனில் துவங்கி  இன்று திரௌபதி முன் நின்று உபாசிக்கும் பெயரற்ற சுடலையன் வரை வந்திருக்கிறீர்கள்.   பாரதத்தில் கர்ண வழிக் கதை ஒன்று உண்டு.  பீஷ்மர் மறித்தபின்னர் பல்லியின் உருவம் கொண்டு பீஷ்மரின் சுண்டு விரலை கெளவி உண்கிறான் சகாதேவன். அந்த நொடி முதல் முக்காலம் அறிந்தவன் ஆகிறான். முடிந்தால் உங்களை உண்டு செரிக்க விழைகிறேன்.

அனல் வடிவானவள், நீர் வடிவானவள், மலர் வடிவானவள், மலை வடிவானவள், விண்ணானவள், மண்ணானவள், என வெண் முரசு நெடுக பெண்களின் வித வித காமத் தேட்டங்கள். ஒவ்வொரு பெண்ணும் உறையும் குலம் திரட்டிக் கண்டெடுத்த தாந்த்ரீகங்கள். முதல் கனல் இறுதி அத்யாயம் நாகர் குலம் வழியே உயர்ந்து வந்த தாந்த்ரீக மரபு தானே,  திரௌபதியை முயங்கிய பின் தர்மன் தன் ஷாத்ரத்தை கண்டு கொள்கிறான்.  பீமனும் திரௌபதியும் கொள்ளும் நீர் விளையாட்டு.   மாருதத்தின் மைந்தன்  எங்கு மஞ்சம் கொள்ள வேண்டுமோ அங்குதான் இருக்கிறான். இருவரையும் ஒரு அறைக்குள் வைத்து யோசிக்கவே இயலவில்லை.  திரௌபதியும் பீமனும்  யானையும் முதலையும் போல சமம் கொண்டு உறைந்து நிற்க, அங்கு காமம் வேண்டும் முதல் கனல் விழவே இல்லை. பீமனின் நிலை அறிந்து அவனை சமன் குலைக்கிறாள் திரௌபதி.  நட்ச்சத்திரம் அதிர்ந்து அதிர்ந்து சிதறிப் பரவியதாக வரும் திரௌபதியின் சொல் பேரழகு. கிந்தூரம் ஏந்துகையில் அர்ஜுனன் சிரசேறும் சினம்  இப்போதுதான் அர்த்தம் கொள்கிறது. அர்ஜுனனுக்கு சக்கரவர்த்தினி ஆயினும்  எப்பெண்ணும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண்ணுக்காக  கிந்தூரம் ஏந்துகையில் உண்மையில் பார்த்தன்,  கழி ஆடத் தாவும் மந்தியின் நிலையில் தானே அன்றிருந்தான்?  மயிர்க் கால்கள் தோறும் முத்தி முத்தி வளர்த்த மகள், முதன் முதலாக அர்ஜுனன் கையால் அறை வாங்குகிறாள். பார்த்தன் நிலையில் நான் இருத்தால் இதைத்தான் செய்திருப்பேன். நகுலனும் திரௌபதியும் அஸ்வம் குறித்து உரையாடுகையில் அதற்க்கு மேல் சொல்ல ஏதுமின்றி அனைத்துமே சொல்லப்பட்டு விடுகிறது.
திரௌபதி உண்டு மிஞ்சி நிற்கும் ஔஷதத்தை சகதேவன் உண்டு விரல் சப்புகையில் இனி வரும் நாளெலாம் திரௌபதியின் களித்தோழன் அவன்தான் என்று புரிந்து விடுகிறது.

அடக்கிப் பெற்ற மைந்தர்  அடக்கப் பெறுவர் என்றே, அடங்கா ஆற்றல்களை கூடி குந்தி தன் மைந்தர்களை பெற்றாள். குந்தி போடும் மாமியாள் சண்டை  அற்ப்புதம்.  ''அவள் உன்னை பந்தாடி விட்டாள் மாமிச மாலையே''   என்று குந்தி பீமனை வையும் இடம் சிரித்து தளர்ந்தேன். குந்திக்கு அரசியல் எல்லாம் இப்போது இரண்டாம் தரம். தன் அத்தனை மைந்தர்களுடனும் அவள் திரௌபதி வசம் தோற்கும் துயரே முதல் இடம்.

பால்ஹிஹரின் அன்னை துவங்கி, குந்தி தொடர்ந்து திரௌபதி வரை  நியோகம் , பல பதி மணம் கொள்கிறார்கள். எனில் திரௌபதி மட்டும் எங்கு உயர்கிறாள்?  எதில் உயர்கிறாள்?  திரௌபதி அவள் வாழ்ந்த காலம் தொட்டே கேசினியின் பிறப்பாகத்தான் பார்க்கப் படுகிறாள் போலும்.  நெருப்பில் பிறந்தவள் இங்கு வந்த காரணம் அறிந்தவனே அவள் மண ஏற்பு விழாவில் மண்டைக் கலம் ஏந்தி பிச்சை கொள்ள வருகிறான். அவள் விழி திறக்கா வாயிலில்  வெள்ளெருக்கு மாலை சூடி, மண்டைக் கலம் ஏந்தி நிற்கிறான்.  இந்தியப் பண்பாட்டை மீள எழுதுகையில், எழுந்து வரும் தாந்த்ரீகம் உபாசிக்கும் அன்னை. அன்னைகளுக்கெல்லாம் பேரன்னை என திரௌபதி உயர்ந்து வருகிறாள். 

கடலூர் சீனு