Wednesday, March 4, 2015

மழையின் ஓசை



அன்புள்ள ஜெயமோகன்,

இன்றுதான் முழுவதும் மழைப்பாடல் நாவலை வாசித்து முடித்தேன். பேரனுபவம். குறிப்பாக நான் விரும்பிய பகுதிகளாக பீஷமரின் வருகை, திருதிராஷ்டிரரிடம் பீஷ்மர் மல்யுத்தம், பாண்டுவும் விதுரனும் பேசும் முதல் உரையாடல், காந்தாரத்தின் நில அமைப்பு, காந்தாரியின் முதலிரவு, குந்தியின் தாயார் வரலாறு, குந்தியின் சூரியகலவி, குந்தியிடமிருந்து நாக குழந்தை பிரிவு,பைரவி நாயுருவெடுத்தல், சகுனிக்கு அறைவிழுதல், பட்டாபிஷேகம், தாயுரு கோலம், பாண்டு வனம் புகல், யுதிஷ்ட்ரன் பிறப்பு, சுயோதனன் பிறப்பு, பீமனின் மதலைப் பருவம், செண்பக தோட்டத்தில் கலந்த பாண்டு, நிலைகொள்ளும் விதுரன் என்று அனைத்தையுமே குறிப்பிட்டு விடத் தோன்றுகிறது. 

 வெண்முகில் நகரத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இன்னும் வண்ணக்கடல், நீலம், முதற்கனல் மூன்றும் படிக்கவில்லை.இன்னும் ஒரு மாதம் இம்மூன்றில் ஒன்றையும் படிக்காமல் வெண்முகில் நகரத்தை மட்டும் தொடரலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். கூடுதலாக அது வேறு சில வாசிப்புகளுக்கு நேரம் தருமென எண்ணி இதைச் செய்கிறேன்.

முடிந்தும் செவிகளில் ஒலிக்கும் பாடலே சிறந்தது. அதுபோல ஒரு மழைப்பாடலைத் தந்தமைக்கு நன்றிகள்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
கமலக்கண்ணன்.