Wednesday, October 10, 2018

குணச்சித்திரங்கள்எழுத்தாளர் அவர்களுக்குபாண்டவர்கள் பக்கம் இறுதிசெயல்கள் நடக்கும் இடத்தில் சிகண்டி. அதை படித்ததும் கௌரவர்கள் பக்கம் யார் இருப்பார் என்ற எண்ணமே வந்தது. அங்கு இயல்பாக அமரகூடியவர் குண்டாசி தான். 

இருவரின் அன்னையும் முடிவு (closure) என்ற ஒன்றை தொடாமல் போனவர்கள். நம் வாசகர்களுக்கு முதர்கணலில் சிகண்டியிடம் பீஷ்மரின் முடிவு குறித்த உறுதியை சிகண்டியிடம் பெற்று எரி புகுந்த அன்னையின் அத்தியாயம் நினைவில் இருக்கலாம். 

போலவே கிருஷ்ணன், கௌரவ பாண்டவர்களிடையே நிலத்தை பங்கிட்டு கொடுக்க பீஷ்மரை காட்டில் சந்திக்க வந்த அத்தியாயம் நியாபகம் வரலாம். கிருஷ்னன் ஊழ்கத்தில் இருக்க குளத்தில் ஒரு சிறு பறவை ஓயாமல் துள்ளி துள்ளி எழும். அத்தியாயம் முடிய சாளரத்தில் அமர்ந்து இருந்த குண்டாசியின் அன்னை சம்படை இறந்த செயதி வரும். மறுபடியும் ஒரு முற்று அடையாத வாழ்க்கை.. closure இல்லாத இறப்பு.

இங்கு விதுரர் சுடுகாட்டில் ஞான உபதேசங்கள் பெரும் அத்தியாயமுன் நியாபகம் வருகிறது.

சிகண்டி, குண்டாசி - இவர்கள் இருவர் வாழ்விலும் இதுபோல இன்னும் நிறைய ஒற்றுமைகள். முக்கியமாக நெருப்பு. நேரடியாகவும், படிமமாகவும்.. அம்பையின் நெருப்பு, வாரணவததின் நெருப்பு. அடுத்து அவர்கள் வாழ்க்கையிலேயே நடக்க இன்னும் ஒன்றே ஒன்று தான் உள்ளது.. அதை சந்திப்பதற்கு மட்டுமே அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அது சாவு.

பீஷ்மரை கொல்வது அல்லது அதன் முயற்சியில் இறப்பது - ஆனால் பீஷ்மரை கொல்வார் என்று எங்கோ தெரியும் சிகண்டிக்கு. அது நிகழ மட்டுமே காத்திருப்பு.

வாரணவதத்திற்கு பிறகு பீமன் தன்னை அனைத்து கொண்ட போதே குண்டாசிக்கு வாழ்வில் இனி ஒன்று தான் மீதம் உள்ளது.. மூத்தவர் கையால் தன் தலை உடைப்படுவது என்று தெரியும்.. அவன் மீத வாழ்க்கை முழுக்க அதன் காத்திருப்பு மட்டுமே.

இந்த மனநிலை உடையவர் எங்கு இயல்பாக போர்க்களத்தில் இருக்க முடியுமோ அங்கு இருக்கின்றனர்.

~~~~~

தவிர ஒன்று - நாவல்கள், இந்த மொத்த நாவல் தொடரும்  தெளிவான கட்டமைப்போடு தான் எழுத படுகிறது. சிலர் அதை உடனே கண்டைக்கிறார்கள், சிலர் பாதி நாவலில் அல்லது நாவல் முடியும் போது. பல சமயம் அது இன்னொருவர் சொல்லில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 
எனக்கு வெண்முரசு வரிசையில் வெய்யோன் மிக அதிக பாதிப்பு அளித்த நாவல். ஏன் என்று புரியாமல் உழன்று கொண்டே இருந்தது. ஒரு பேச்சில் ராஜகோபாலன், அறத்தின் உச்சத்தில் ஏறி நிற்பவனின் வீழ்ச்சி.. அறத்தில் ஏற ஏற விழுவது என்ற இடத்தில் எனக்கு தெளிய ஆரம்பித்தது.

வெண்முரசு வெறும் பித்தில் ஏறி மட்டுமே எழுத படுவதல்ல... ஒரு சிறு பாத்திரம் என்றாலும் அதன் வாழ்க்கை வாழப்படுகிறது. அதில் ஒரு துமி எழுத்தில் வருகிறது. உதாரணம் அலங்கரிக்கப்பட்ட ஹஸ்தினபுரத்து அலங்காரமான சுவரில்  ஒரு ஏவலன் தன் கையை பதித்து விட்டு போய் இருப்பான் அதை பூரிசரவஸ் கண்டு கொந்தளித்து தேடுவான். நான் எங்கள் வீட்டில் புதிதாக வெள்ளை அடிக்கப்பட்ட இடத்தில் சமையல் செய்ய வந்த ஒருவர் செங்கல் போடியின் ஈர சாந்தால் சுவரில் முழுமையாக உள்ளங்கையை வைத்து விட்டு போய் இருந்ததை பார்த்து கொந்தளித்து இருக்கேன். அப்பாவை கூப்பிட்டு காண்பித்தேன்.. அது ஒரு 'நம்பிக்கை சடங்கு டா' என்று என்னை சமாதான படுத்திவிட்டார். அவருக்கு அனுபவ அறிவால் அது என்ன என்று தெரியும். எங்கள் வீட்டில் அந்த உள்ளங்கையை வைத்தவர் பெயர் கிருஷ்ணன், அந்த கரை இன்னும் உள்ளது ஊரில். எனக்கு ஒரு 17 வயது இருந்த போது நடந்தது. பூரிச்ரவஸ் தேடிய ஆள் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொண்டு வருவான் வெண்முரசில். படிக்கும் போது 'நிகர் வாழ்க்கை' என்கிற சொற்தொடர் புரிய ஆரம்பித்தது. அது magic அல்ல.. வேறு ஒருவர் இல்லாத ஒன்றை உண்டாக்கி சொல்வது அல்ல.. அது அப்படி தான் நடக்கும் என்பது.

பீஷ்மர் இரண்டாம் நாள் வில்லை தாழ்த்திய போது, எனக்கு உடன் நியாபகதில், பீமன் முதன் முதலில் பீஷ்மரை காண சிறுவனாக வரும் போது கல்லாக இருக்க வேண்டும் என்று வீம்புக்கு இருக்கும் கிழவர் இவன் மடியில் வைத்து இருக்கும் குட்டி பாம்பு விழுந்து ஓடுவதையும் அதை சிறுவன் பீமன் பிடிப்பதையும் பார்க்கிறார். அவனுள் இருக்கும் காட்டாளன் கங்கர் பீஷ்மருக்கு நெருக்கமாகிறான்.. அவனை பேரனாக பார்க்கிறார். முதல் முறை மல் யுத்தத்தில் தோற்று போய் அழுது கொண்டு வந்த திருதராஷ்டிரனை மகனாய் பார்த்தது போல.. மகனுக்காக இன்று களத்தில் வில் ஏந்துவேன் என்று வந்த பீஷ்மர் பேரனை எப்படி கொல்வார் - ஒரு சில மணி துளிக்கு முன் இறந்த தேர் ஒட்டி  விஸ்வசேனர் ( ஹரிசேனருக்கு பின் அணுக்கனாகவும் சிஷ்யனாகவும் வந்தவர்)  இரண்டாம் தலைமுறை சிஷ்யன். மகாபாரத போரின் இரண்டாம் நாள் நிகழ்வில் ஒன்று பீஷ்மரின் தேரோட்டி சாத்யகியால் கொல்ல படுவது. அது வெண்முரசில் வந்து சேரும் இடம் அதற்கு பின்னால் இருக்கும் இத்தனை நெடிய தொடர் ஒரு வாழ்க்கையாகவே உள்ளது.நன்றி
வெ. ராகவ்