Sunday, October 7, 2018

கட்டமைப்பு பற்றி

வெண்முரசின் கட்டமைப்பு


அன்புள்ள ஜெ

உண்மையிலேயே வெண்முரசின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆகவே எது தேவையில்லை தேவையானது என்று சொல்வது மேலும் கடினம். நாகராஜ் அவருடைய கடிதத்திலே சொல்லியிருப்பதுபோல மழைப்பாடலில் வெள்ளம் வருவது, குருதிமழை பெய்வது போன்றவை வெறும் டிரமாட்டிக் நெரேஷன் என்று சிலருக்குத் தோன்றும். அவர்கள் கதை என்னாய்யா என்று கேட்கும் வாச்கார்கள். ஆனால் அந்நாவல் முழுக்க நீர் என்னும் படிமத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மழை பெய்துகொண்டே இருக்கிறது. அதிலொன்று குருதிமழை. இது வெறும் மழை அல்ல, குருதிமழை என்றுதான் நாவல் சொல்கிறது

அதேபோல உபகதைகளின் அமைப்பு. தபதியின் கதை அப்படியே பாஞ்சாலிக்கதையின் இன்னொரு வகைதான். அது வரும் இடம் என்னவென்று பார்த்தால் நாவல் எதை உத்தேசிக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும். தாட்சாயணி கதை எப்படியெல்லாம் பின்னப்பட்டிருக்கிறது என நாகராஜ் சொன்னார். அவர் சொன்னதுபோல இந்நாவலை ஒரு நவீன நாவலாக வாசிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு கதைகளைப் படிமங்களாக எடுத்துக்கொண்டு எந்தெந்தப் படிமங்கள் எப்படியெல்லாம் பின்னப்படுகின்றன எப்படியெல்லாம் அவை தொகுக்கப்படுகின்றன என்று பார்ப்பது அவசியமானது. அந்த டெக்ஸ்ச்சரைப் புரிந்துகொள்பவர்களுக்குரியது வெண்முரசு

நல்லகட்டுரை


நீலகண்டன்