Monday, October 22, 2018

சாத்யகி



இனிய ஜெயம் 

இன்றைய போரில் சாத்யகி காணும் மூன்று காட்சிகள் மிக மிக முக்கியமானது . நல்ல வேளை ஒரு சிறு பயணத்தில் இருந்ததால் ,எப்போதும் என் முதல் வாசிப்பை நிகழ்த்தும் நேரமான இரவு பன்னிரண்டு முப்பதுக்கு இதை வாசிக்க நேரவில்லை . நேர்ந்திருந்தால் தூக்கத்தை தொலைத்திருப்பேன் .

முதல் காட்சி சினியின் கவசத்தை ஜெயத்ரதன் சாத்யகி முன்னால் உயர்த்தி ஆட்டிக் காட்டும் காட்சி . இதற்க்கு மேலான வன்மையான காட்சி எல்லாம் பீமன் அரங்கேற்றி விட்டான். ஆனால்  சகோதரர்களின் மகன்களின் தலையை சம்பத்தப்பட்ட உறவுகள் மேலேயே வெட்டித் தூக்கி எறிந்திருக்கிறான் . அவை உள்ளே எழுப்பிய கொதிப்புகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாக்கி விட்டது இன்றைய ஜயத்ரதனின் செயல் .  சினி சகோதரர்கள் மத்தியில் பெரியவர்கள் போல நடிக்கிறான் .அப்படி நடிப்பது தனது தந்தைக்கும் பிடிக்கும் என்பதை அறிகிறான் .தந்தைக்கு பிடித்த நடிப்பையே இறுதிவரை நிகழ்த்தி விட்டு செத்தும் போகிறான் . 

மொத்த வெண்முரசிலும் நீலன் சித்தரிக்கப்படும் இடங்களில் உச்ச சித்தரிப்பு இரண்டு இடங்களில் ,ஒன்று முழுக்க குருதியால் முழுக்காட்டப்பட்ட உடலுடன் அன்று மதுராவில் வென்று நிற்கும் நீலன் .இரண்டு இன்றைய பார்த்த சாரதி . வெள்ளி என மின்னும் பார்த்தனின் கீழே முழுக்க குருதியிலாடிய உடலுடன் அமர்ந்து தேரோட்டிக்கொண்டிருக்கும் நீலன் . 

அந்தக் குருதியில் ஒரு துளி தனது மைந்தனுடயது என்பதால் அந்த தந்தையின் ஆயுதம் நீலனை குறி வைத்ததோ... தனது கொடிவழி கூட நீலனுக்கு அடிமை என்பதுதானே சாத்யகியின் அவா . 

மூன்றாவது சித்திரம் இன்றைய பீஷ்மர் .  மன்றாடும் சாத்யகியின் குதிரை ஒட்டி . நிராயுத பாணி .  புல் நுனி அளவும் பீஷ்மருக்கு நிகர் அற்றவன் .அவன் தலையை துணித்து எறிகிறார் பீஷ்மர் . பிழைத்த அம்புக்கு பதில் வாளாவிருக்கும் சாத்யகி சிரம் அறுக்க பீஷ்மர் அடுத்த அம்பை ,எடுக்கவோ தொடுக்கவோ அவருக்கு எத்தனை நேரம் ஆகும் ? மாறாக வில்லை தாழ்த்திவிட்டு அவனையே கூர்ந்து பார்த்து நிற்கிறார் .

தன்னை  போலவே, சொன்ன சொல்லின் பொருட்டு,அந்த சொல்லின் மேல் நின்று   , அதற்காக கொண்ட அனைத்தயும் இழந்தவன் . ஆடியில் பீஷ்மர் காணும் தானே என்றான மற்றொரு ஆடிப்பிம்பம் 



கடலூர் சீனு