ஜெ
கம்ரனின் யானை சுபகத்தின் கதை ஒரு சிறுகதைபோல கதைக்குள் தனியாக நின்றது. கதையின் ஒருபகுதியாகவும் இருந்தது. ஒரு நீண்ட கதையில் இத்தகைய துணைக்கதைகள் எதை அளிக்கின்றன என்பது முக்கியமானது. இவை அந்தக்கதையை விலகி நின்று பார்க்கவைக்கின்றன. ஒரு கட்டிடத்தை சின்னக் குமிழில் பார்ப்பதுபோல என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. தாமஸ் மன் கதைகளில் இந்த அம்சம் உண்டு. இந்தக்கதை தன்னளவில் ஒரு குறியிட்டுத்தன்மை கொண்டிருக்கும். ஆகவே இதை நாம் மேலும் கவனிப்போம்.
அந்த யானையை குருக்ஷேத்திரப்போராகவே நான் நினைத்தேன். அதன் இயல்புக்கு அப்பால் சென்று அதை ஆணையிட்டுத்துரத்துகிறார்கள். துதிக்கை ஒன்றால்தான் அது இந்த உலகுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. அந்தத்தொடர்பு அறுந்ததுமே அது இன்னொன்றாக ஆகிவிடுகிறது. அதன்பின்னர் அதற்கு இரண்டுபேருமே சமம்தான். இரு தரப்பையும் சேர்த்தே அழிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்தத் தீவிரமும் வெறியும் ஆச்சரியமாக இருந்தாலும் யானைக்கும் போருக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் எழுந்தது
சாரதி