அன்புள்ள ஜெ
நலம்தானே? பீஷ்மரின் தயக்கங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். அவர் முதலில் பீமனின் முன்வில் தாழ்த்துகிறார். இளைய யாதவரின் முன்னால் வில் தாழ்த்துகிறார். அதன்பிறகு பிதாமகர் பால்ஹிகரின் முன் வில் தாழ்த்துகிறார். மூன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள். முதலில் அவரைவிட்டுச் செல்பவன் தரன். அவனை தாள்வோன் என்கிறது வெண்முரசு. இரண்டாவதாக துருவன். அவனை நிலைத்தோன் என்கிறது வெண்முரசு. மூன்றாவதாகச் சோமன். அவனை களியாட்டன் என்கிறது. இந்த தேவர்கள் ஒவ்வொன்றாக அவரைவிட்டு அகல்வதற்கான காரணம் அந்த பகுதியில் உள்ளது என நினைக்கிறேன். அனைத்தையும் தாள்பவனும் பூமிதேவியின் ஆண்வடிவமுமான தரன் செல்வது அவர் தன் இயல்பைவிட்டு நீங்க ஆரம்பித்தபோது. நிலைகொண்ட உள்ளம் கொண்டவன் அவர் இளைய யாதவரால் எதிர்க்கப்பட்டபோது செல்கிறான். கொலையில் களியாடி வரும் அவர் மூத்தவரைப்பார்த்து நாணம்கொள்கிறபோது சோமன் செல்கிறான். இவ்வாறு ஒவ்வொருவராக விலகுவதன் கதையாகவே அத்தியாயங்களை வாசிக்கவேண்டியிருக்கிறது. இந்த விரிந்த கதையில் ஒவ்வொருபகுதியிலும் ஒவ்வொருவர் வந்து அவர்களின் கதை சொல்லப்படுவதனால் உண்மையில் இந்த மையக்கதைகொஞ்சம் பின்னால் சென்றுவிடுகிறது
ராஜ்