Tuesday, October 30, 2018

வசுக்களின் கருணை



இனிய ஜெயம் 

இன்றைய காவியம் பதிவில் சுசித்ரா சாத்யகியை நோக்கி பீஷ்மர் எய்த அம்பு , பிழைத்த அம்பு ,ஆயிரத்தில் ஒரு அம்பு என எழுதி இருந்தார் .  அந்த அம்பு தவறிய காரணம் ,பீஷ்மரின் தவறான குறி அல்ல . அவரது தேர் அதிர்ந்ததே காரணம் . அந்த காரணம் கொண்டே ,நிதானம் அடைந்து பீஷ்மர் சாத்யகியை கூர்ந்து நோக்குகிறார் .

முன்பு ஒரு சமயம் தனுர் வேதம் கற்க விழையும் சிகண்டி ,மறுக்கும் குருவிடம் போர் புரிவார் [அக்னி வேசர் என நினைவு ] குரு ,சிகண்டியின் சிரம் அறுக்க எய்யும் அம்பு குறி தவறும் .அதிலிருந்தே சிகண்டியை காக்கும் ஆற்றல் எது என்பதை குரு அறிந்து கொள்வார் .அப்படிப்பட்ட தருணமே சாத்யகி உயிர் பிழைக்கும் தருணம் .

அதன் காரணம் என்ன என்றே பீஷ்மர் கூர்ந்து பார்க்கிறார் .கருணையை கைவிட்ட பீஷ்மரை  கைவிட்டு அவரது சகோதர வசு , சாத்யகியை சேர்ந்து விடுகிறான் . சகோதரனை கொல்ல இயலாத பீஷ்மர் வில் தழைக்கிறார் .

இந்த கருணையை கைவிட மாட்டேன் என்று சொல் .உன்னை நீங்கமாட்டேன் என்கிறான் பீஷ்மரை நீங்கும் முன் முதல் வசு.பீஷ்மர் மறுக்கவே சகோதரன் விலகுகிறேன் .இப்போதும் கூட பீஷ்மர் அவரது கருணையை கைவிடும் கணமே ,அவரது சகோதரன் அவரை நீங்குகிறான் .

கங்கை அன்னை பீஷ்மருக்கு துணையாக இருக்க வேண்டிதானே வசுக்களை நியமித்தாள் , கங்கையின் உத்தரவு இன்றி அவன் சாத்யகி வசம் சேர்வது ஏன் ?  காரணம் முன்னர் கண்டதுதான்  சொன்ன சொல்லின் பொருட்டு ,அந்த சொல்லின் மேல் நின்று ,கொண்ட அனைத்தயும் இழந்த சாத்யகி ,மற்றொரு பீஷ்மன் கூட அல்ல ,சாக்ஷத் அந்த பீஷ்மனை தான் . ஆக வசு பீஷ்மனை கைவிட்டு சாத்யகியை சேர  வில்லை , கருணையற்றவனை கைவிட்டு ஆடி பிம்பமான பீஷ்மரை தான் அவன் சேர்கிறான் .

இதை எழுதிக்கொண்டிருக்கும் இக் கணம் இந்த தருணம் கிளர்த்தும் வேறொரு அர்த்த சாத்தியமும் உள்ளே எழுகிறது ..எழுத்தாளரே உங்களை அப்படியே கடித்து உதறிவிடலாமா என தோன்றுகிறது ..அனிலை  போல ...:)  

கடலூர் சீனு