ஜெ,
கம்ரனின் கதை எனக்கு மிஸ்டிக்கலாக இருந்தது. மென்மையாக சொன்னாலே கேட்கக்கூடிய செவி கொண்ட அது அலறி இறக்கும் சித்திரமும், அதன் அசாத்திய வலிமை சிகண்டியின் சிறிய வாளால் அதற்கெதிராகவே திருப்பி விடப்படுவதும் ஒரு இமேஜாக மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த இமேஜ் இரண்டு வாசிப்புகளைத் தந்தது, அதற்கு பிரதியில் இடமிருக்கிறதா எனத் தெரியவில்லை என்றாலும் அப்படித்தான் என உள்ளுணர்வில் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஒன்று அதன் கம்பீரமும், அமைதியும் அவைக்களங்களில் ஆழ்ந்து இருக்கும், போரில் நாணேற்றுவதற்கு முற்கணம் வரையில் இருக்கும் பீஷ்மரை நினைவு படுத்தியது. தன் இயல்பிலிருந்து அதன் சமநிலை குலையும் போது சிகண்டியிடம் இருக்கும் அழுத்தமான வஞ்சத்தின் சம நிலையே போதுமானதாக இருக்கிறது அதைச் சரிக்க, எந்த வீரர்களை விடவும், பிற யானைகளை விடவும் அது வல்லமையிற் பெரிதாக இருந்த போதிலும் கூட.
இரண்டு, பீஷ்மரின் வழியாக கௌரவர் படையில் வெளிப்படும் ஒரு பெரும் சக்தியை, சிகண்டி வழியாக வெளிப்படும் வஞ்சம் வெல்லும் தருணம். கௌரவர்களின் படை அளவில் பெரியது. தேர்ச்சி பெற்ற ஷத்ரியர்களையும், பெரு வீரர்களையும் கொண்டது. நேர் எதிரானது பாண்டவப் படை. ஆனால் முதல் மூன்று நாள் கௌரவர்களைக் காத்த அந்த பெரு வல்லமை சிகண்டியின் வழியாக வெளிப்படும் ஒன்றை மிக முக்கியமான ஒரிடத்தில் எதிர் கொள்கிறது [துதிக்கை / கௌரவர்களிடமிருக்கும் அறமின்மை அல்லது சொல்ல முடியாத ஒரு ஊழ்]. அதன் பிறகு அதன் வல்லமை சொந்த படைகளிடமே அழிவை உருவாக்குவதாக திரும்புகிறது.
இந்தப் போரில் அது ஒரு திருப்பு முனை என்றே தோன்றுகிறது. இனி எண்ணிக்கை, பலம், திறன் என எதுவுமே பொருளில்லை. கங்கை மைந்தைனின் அனல் அவிவது, ஊர்வரையாக வந்த அம்பை கைவிடுவதே, அதுவே கம்ரனின் இறப்பும் என அனைத்தும் ஒரு புள்ளியின் வேறு வேறு கோணமே எனத் தோன்றுகிறது. அந்த எல்லைக்குப் பிறகு கங்கையே மழையாகி பீஷ்மரின், கௌரவர்களின் அனலை அழிக்கிறாள் என எண்ணிக் கொண்டேன்.
ஏ வி மணிகண்டன்
ஏ வி மணிகண்டன்