Wednesday, October 24, 2018

நிகர்வைத்தல்


அன்புள்ள சார்,

நசிகேதன் யமனிடம் விவாதிக்கையில் யமன், அவன்  விழைவுக்கு நிகராக வைத்துத்தருவதாக பல வரங்களை அடுக்குகிறான். அதுபற்றி ராஜகோபால் சென்னை கலந்துரையாடலில் கூறினார்.  அந்த வடிவம் சொல்வளர்காடு நாவலில் இல்லை. அதை கடோபநிஷத்திலிருந்து எடுத்து கூறிய கதை. அதில் நசிகேதன் சிறுவன். அவனிடம் யமன் உனக்கு செல்வங்களை அளிக்கிறேன். பூலோகத்தில் யாருக்கும் கிடைக்காத மகளீரை அளிக்கிறேன் என்று கூறுகிறான் என்பதாக செல்கிறது அது. இறுதியில் யமன் "நீ எதை அடைய விரும்புகிறாயோ அதற்கு நிகராக எதையும் வைக்காமல் இருக்கிறாய் என்று கூறி வரத்தை அளிப்பதாக கூறுகிறது. இதில் எனக்கு ஆச்சரியம் என்னவெனில் அந்த சிறுவனுக்கு அது என்ன புரிந்திருக்கும் என்பதுதான். அந்த இன்பங்களை அறியும் வயதா அது என்பது... அதை மறுப்பதில் என்னவிருக்கறது. ஏழாம் வகுப்பு படிக்கையில் கொடிநாள் அன்று, தன் வாழ்க்கையில்  திருமணம் செய்யாமல் நாட்டுக்குத் தொண்டு செய்யப்போவதாக உறுதியெடுத்த நண்பர்கள் எனக்கும் இருக்கின்றனர். அந்த நவீன பீஷ்மர்கள்தான் எங்கள் செட்டில் முதலில் திருமணம் செய்தவர்கள். :-)   

நிகர் வைத்தல் என்பது சாத்யகி செய்வது.. அவன் தொழும்பனாக வரும்போது செய்தவையே. அவன் அனைத்தையம்  அவருக்கு அர்ப்பணிக்கிறான்.   இளைய யாதவருக்கு இணையாக அவன் தன் மைந்தர்களையும் வைப்பதில்லை என்பதை அடுத்த அத்தியாயத்தில் படிக்கையில் அவன் வைராக்யம் புலப்படுகிறது.  

//“தளர்ந்து வேள்விப்பந்தலில் விழுந்த தந்தை எரிந்தெழுந்தாடிய தழலையே நோக்கிக்கொண்டிருந்தார். கொடுப்பது எத்தனை அரியதென்று அப்போது அறிந்தார். கொடுப்பவற்றில் இருந்து முற்றிலும் விலகாதவனால் அதற்கு நிகரானதைப் பெறமுடியாதென்று பின்னர் உணர்ந்துகொண்டார். அவருக்கு இழந்த மைந்தனிலிருந்து ஒரு கணமும் விடுதலை கிடைக்கவில்லை. அவன் அவருள் வளர்ந்தான். தளிரென ஊடுருவிப் பிளந்த பாறையை கிளையில் ஏந்தி நின்றிருக்கும் மரம் என் அவன் தந்தையை ஏந்தியிருந்தான்.//

 இது சொல்வளர்காடில் நசிகேதனின் தந்தை கூறியது. ஆனால் சாத்யகி மறுநாள் கவசமணிந்து வந்து நிற்கிறான். அதுவும் அவரை நோக்கி அம்பை நீட்டிய தருணத்தின் தவிப்பாகத்தான் இருக்கும் என நினைக்கறேன்.    பார்த்தனுக்கு தேரோட்டிய பார்த்தசாரதி கோயிலில் கருவறைக்குள் அர்ச்சுணன் இல்லை. சாத்யகி இருக்கிறான். இதுபோல   சில கோயில்களில் கருவறைக்குள்ளும் சாத்யகி இருப்பது இந்த அர்ப்பணிப்பால்தானோ எனத் தோன்றியது..  

 அன்புடன்,

R.காளிப்ரஸாத்