Friday, October 26, 2018

புதுக்காடு



இனிய ஜெயம் 

இன்று புதுவை வெண் முரசு கூடுகை . இந்த புதுக்காடு அத்யாயம் முழுக்க குழந்தை பிறப்புகளின் வரிசை .புதுவை நண்பர் மணி மாறனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது .  ஆகவே இன்றைய கலந்துரையாடலின் முடிவில் , எனது இறுதி சொல்லாக ,வெண் முரசின் ,மழைப்பாடல் நாவலின் புதுக்காடு பகுதியை மட்டும் ,தினமும் காலை குளித்து முடித்து ,உண்பதற்கு முன் பூஜை அறையில் அமர்ந்து ,பெண்கள் [ஆண்களும் செய்யலாம் ] பக்தியுடன் பாராயணம் செய்தால் ,அவர்களுக்கு நன்மக்கட் பேறு அமையும் என உறுதி அளிக்கலாம் என முடிவு செய்துள்ளேன் .

போரில் மூழ்கிக் கிடப்பதால் , இந்த அத்யாயத்தின் ஒவ்வொரு சித்தரிப்பும் பல்வேறு அர்த்த சாத்தியங்களை அளிக்கின்றன .குறிப்பாக குந்தி குடும்பம் காணும் வன நெருப்பு . நெருப்பு மட்டுமே என்ன விதமாக எல்லாம் வெண் முரசில் தொழில்படுகிறது என்று வாசிப்பதே தனி அனுபவமாக இறுக்கும் என நினைக்கிறேன் . அம்பை சென்று விழும் நெருப்பு துவங்கி , திரௌபதியின் தந்தை காணும் நெருப்பு தொடர்ந்து , அரக்கு மாளிகை  தொட்டு  இன்று ஆத்மா நெருப்பாக ,உடலே சிதையாக நின்றெரியும் சாத்யகி வரை எத்தனை விதமான நெருப்பின் சித்தரிப்புகள் .

இன்று கண்ட பலா ஹஸ்வர் அன்று திருதா ,பீஷ்மர் யுத்தத்துக்கு முன்பாக எழுப்பிய வினாக்கள் எல்லாம் ,இன்று குருஷேத்ரத்தில் நிகழ்ந்தேரிக்கொண்டு இருக்கிறது .  நகுல சகாதேவர்களை பிரிக்கவே இயலாமல் கட்டி வைத்திருக்கும் கண்ணி எது என இன்றைய போரில் சகுனி வியக்கிறான் .  அவன் வியப்புக்கு விடை இந்த புதிய காடு பகுதி யில் கண்டேன் . குந்தி பயன்படுத்திக்கொள்ள ஐந்து மந்திரம் வைத்திருக்கிறாள் .அதில் நாலை பயன்படுத்தி விட்டு மிச்சம் ஒன்றை மாதரிக்கு அளிக்கிறாள் . 

கனகன்,காஞ்சனன் இருவரையும் பிரிக்க முடியாது . மாதரி கொண்ட ஒற்றை மந்திரத்தையும் பிரிக்க முடியாது .நகுல சகாதேவர்களையும் பிரிக்க முடியாது .

ஒரு திடுக்கிடலுடன் குந்தி பீமனை குறித்து சொல்லும் சொல்லை வாசித்தேன் . எந்த அன்னையும் தனது மைந்தன் குறித்து வெளியே சொல்ல விரும்பாத ஒரு சொல் .கிட்ட தட்ட ஒரு சாபம் போல பீமன் மேல் வந்து விழுந்த சொல் .குலாந்தகன் .  அவள் அவனுக்கு ஊட்டிய முலைப்பாலில் ஒரு துளி அந்த விஷம் கலந்தே இருக்கும் . பின்னர் பீமன் அருந்தும் விஷம் எல்லாம் இதற்க்கு முன் ஒன்றுமே இல்லை . குலாந்தகன் ...குலாந்தகன் ..பாவம் பீமன் .

பாண்டு அர்ஜுனனை அள்ளி அணைத்த பின் அடி மனதிலிருந்து மகிழ்ச்சி பொங்க கூவுகிறான் ''.இனி இவர்கள் பாண்டவர்கள் .பாண்டவர் குலம்.குலம் எத்தனை இனிமை தரும் சொல்...'' 

பாண்டுவின் மகிழ்ச்சி .குந்தி அவன் அருகில் நின்று கண்ட மகிழ்ச்சி . பாண்டுவின் அந்த சொல்லுக்கு உயிர் கொடுக்கவே இத்தனை உயிர் பலிகள் . நல்ல வேளை பாண்டு அந்த வனத்தை விட்டு வெளியே வர நேர வில்லை . . 

கடலூர் சீனு