ஜெ
வெண்முரசின் அனுபவங்களில் ஒன்று இந்த மிகப்பெரிய பரப்பில் எங்கெங்கோ சொல்லப்பட்டவை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்வதைப் நினைவில் எடுப்பது. அது இணைந்து இணைந்து ஒரு நுட்பமான text ஐ உருவாக்குகிறது. உண்மையில் இந்நாவல்கள் அத்தகைய வாசகர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த வரியை வாசித்ததும் நான் நினைவுகூர்ந்தது முன்பு கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஊதுவதையும் அவன் சகுனியிடம் சதுரங்கமாடுவதையும் சொல்லியிருந்த இடம்
பால்ஹிகரின் அந்தப் பழுதற்ற கதைசுழற்றலில் ஒருபோதும் பிழை நிகழவில்லை என்று. அது மானுட உள்ளத்தால் ஏந்தி சுழற்றப்படும் கதையல்ல. விண்ணிலிருந்து சுழற்றப்படுவது. விண்ணென்பது மண்ணில் ஒருபோதும் நிகழாத முழுமைகளின் முடிவிலி. ஒவ்வொன்றும் தன் நிறைவை, அழகை, ஒழுங்கை எய்திவிட்ட இடம். பல்லாயிரம் யுகங்கள் இந்தப் பெருங்கதை இவ்வாறு சுழலக்கூடும். ஓர் அணுவிடைக்காலம்கூட அதில் பிழை நிகழப்போவதில்லை. அது ஒன்றென்றே முடிவிலி வரை நிகழும். மாற்றமில்லை என்பதனால் காலமில்லாதது. காலமின்மையில் எதுவும் வளர இயலாது. ஒரு கணம் கோடி யுகங்களாகும் இந்தப் பெருக்கில் இது இவ்வண்ணமே நின்றிருக்கும். வான்போல் அழிவிலாது.
தெய்வீகத்தன்மை கொண்டவை எல்லாமே பழுதற்ற முழுமையுடன் மீண்டும் மீண்டும் நிகழ்வதாகவே வெண்முரசு சொல்கிறது. இங்கே பால்கிகரும் தெய்வீகத்தன்மை கொண்டவராக களத்தில் இருக்கிறார். அவர் கதை சுழற்றுவதும் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிப்பதும் சமம்தான் என்று நாவல் காட்டுகிறது
செல்வா