Wednesday, October 31, 2018

காட்சியும் சொல்லும்


அன்புள்ள ஜெ
 சுசித்ராவின் காவியம்என்னும் கட்டுரை மிக முக்கியமானது.வெண்முரசை பல கோணங்களில் ஆராய்வதற்கான ஒரு வழிமுறையாக இது அமைகிறது. இத்தகைய கட்டுரைகள் வழியாக நாம் புதிய கோணங்களைத் தெரிந்துகொள்கிறோம். நாம் அறிந்த பழைய செய்திகளை சரிபார்த்துக்கொள்கிறோம்.

வெண்முரசு ‘காட்சித்தன்மை’ கொண்டிருப்பதைப்பற்றி அவர் எழுதியிருந்தார். இன்றைய மேலைநாட்டு தீவிர நாவல்களுக்கு எப்படியோ ஜேம்ஸ் ஜாய்ஸின் உலிஸஸ் ஒரு மோல்ட் ஆக உள்ளது. அதைப்போல எழுத எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையான மந்திரத்தன்மை இல்லாமல் எழுதும்போது அது வெறும் வார்த்தைவிளையாட்டாக ஆகிவிடுகிறது. உண்மையான மந்திரத்தன்மை என்பது உணர்ச்சிச்செறிவிலோ போதைமயக்கத்திலோ ஆவது. அது இவர்களின் பின்நவீனத்துவ விலகல் மனநிலையிலே கிடையாது. ஆகவேதான் வெறும் மூளைக்கட்டிகளை இலக்கியமாக எழுதுகிறார்கள். அவை அக்கடமிக் சர்க்கிளுக்குள்ளாகவே முடிந்துவிடுகின்றன.

வெண்முரசு விரிந்த பரப்புடைய நாவல்தொடர். ஆகவே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள இதற்குள் இடமிருக்கிறது. நீலம் முழுக்கமுழுக்க உச்சாடனத்தன்மை கொண்ட நாவல். மந்திரம்போல வார்த்தையாகவே ஒலிக்கும் பல பகுதிகள் இந்நாவல்களில் உள்ளன. காட்சிவடிவில் துல்லியமாகக் காட்டும் பகுதிகள் உள்ளன. ஸீரோ நெரேஷனாக சும்மா சொல்லிப்போகும் பகுதிகள் உள்ளன. கதைகளை பல்வேறுவடிவில் சொல்கிறது இந்நாவல். எல்லா சொல்முறைக்கும் இதற்குள் இடமிருக்கிறது. காமிக்ஸின் தன்மைகொண்ட பகுதிகளும் பல உள்ளன. எதிர்காலத்தில் பல பகுதிகளை கிராஃபிக் நாவலாகக்கூட ஆக்கலாமென நினைக்கிறேன்
 சந்திரசேகர்