Saturday, October 27, 2018

புதுவையில்...



இனிய ஜெயம் 

நேற்று புதுவையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் . நாலே காலுக்கு காரில் கடலூரில் புறப்பட்டு ஆறே காலுக்கு புதுவை மணிமாறன் வீடு சென்றோம் . அவர் மகள் நிலா வை பார்த்து விட்டு ,கூடுகைக்காக ஹரிக்ரிஷ்ணன் இல்லம் சென்றோம் .

இன்று புதுவையில் இலே தங்கப்பா குறித்த ஆவணப்படத்தை புதுவை தமிழ் சங்கத்தில் பிரபஞ்சன் வெளியிடுகிறார் . அந்த ஆவணப்படத்தில் தங்கப்பா பல இடங்களில் தனக்கும் சண்முக சுந்தரனாருக்கும் இருக்கும் நட்பை ,தனக்கு ஆதர்சமாக இருத்த பலரில் சண்முக சுந்தரனாரும் ஒருவர் என்பதை தெரிவித்து இருக்கிறார் .படத்தின் இயக்குனர் ஜெயமோகன் தளம் வழியே மணிமாறனை அடைந்து என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம்பவே இயலவில்லை என வியந்திருக்கிறார் .இன்று மணிமாறன் முன்னிலையில் அந்த ஆவணம் வெளியாகிறது .தமிழ் சங்கத்தில் அறிஞர்கள் புகைப்படங்கள் மத்தியில் சண்முக சிதம்பரனார் படம் ஒன்றும் சேர்க்கப்படுகிறது . இவை எல்லாம் இத்தனை நாள் கழித்து வெளிச்சம் பெற காரணமாக இருந்த ஜெயமோகன் மற்றும் கடலூர் சீனுவுக்கு , நிகழ்ச்சியின் துவக்கத்தில் மணிமாறன் நன்றி தெரிவித்துக் கொண்டார் . தலைக்குப் பின் இருக்கும் ஒளிவட்டம் நிற்கிறதா சுழல்கிறதா என ஒரு முறை தொட்டுப்பார்த்துக் கொண்டேன் .

நிகழ்ச்சி உரையாடலை துவங்கி வைத்த பிரபு புதிய காடு பகுதயில் வரும் இமயச்சாரல் சித்தரிப்புகள் குறித்து அங்குலம் அங்குலமாக விவரித்தார் . முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது . வளவதுரையன் அந்த பகுதியில் வரும் புதிய சொற்களின் அழகுகள் குறித்து பகிர்ந்து கொண்டார் .

மற்றொரு நண்பர் மான்களை பின்தொடர்ந்து பாண்டு குடும்பம் வனத்துக்குள் நுழைவது துவங்கி ,இறுதியாக பாண்டு செண்பக வனத்துக்குள் நுழையும்போது ,வன இலைகள் ஒவ்வொன்றும் மானின் காதுகள் போல இருக்கும் வர்ணனை தொடர்ந்து , பாண்டுவை இக் கணம் வரை தொடரும் மானிணைகளின் சாபம் புற வயமாக எப்படி வர்ணனைகளில் வருகிறது என்பதை பகிர்ந்து கொண்டார் .

அங்கிருந்து துவங்கி கமலக்கண்ணன் அந்த பகுதி முழுக்க விரவி நிற்கும் வித விதமான வர்ணனைகளை [ யானையை பின்னி முறுக்கும் மலைப்பாம்பு போல பலா ஹஸ்வரின் கரங்கள்] பெரும்பாலானவற்றை ரசித்துப் பகிர்ந்து கொண்டார் . அந்த பகுதி முழுக்க பாண்டுவுக்குள் ததும்பும் தந்தைமையின் பல வண்ண பேதங்களை பகிர்ந்து கொண்டார் .

உரையாடலை தொகுத்து நான் பேசும்போது ,அந்த உரையாடல்கள் வழியே அக் கணம் புதிதாக எனக்குள் நிகழ்ந்த திறப்புகளை பகிர்ந்து கொண்டேன் .

//இன்று தொலைக்காட்சிகளில் நிகழும் விவாதங்கள், மேடைகளில் பேசப்படும் அரசியல் பேச்சுகள் [பாயியோ அவுர் பெஹ்ஹனோ] என அனைத்துமே பொருளிழந்த வெற்று சொற்களே. அதே நேரம் கவிஞர்கள் வெற்று சொற்களை நெய்து உருவாக்கும் கவிதைகளும் அதன் மறுமுனையில்தான் இருக்கின்றன என்பதை இதை வாசித்த உடன் ஒரு திடுக்கிடலோடு உணர்ந்தேன். எப்படி ஒன்று பொருளற்றதன் அபத்தமாகவும், ஒன்று பொருளற்றதன் கொண்டாட்டமாகவும் ஆகிறது? அதன் வழி எப்படி ஒன்று நஞ்சாகவும் ஒன்று அமிர்தமாகவும் உருவாகின்றது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. இந்த மாற்றம் வார்த்தைகளின் அர்த்தத்தில் இல்லை. தங்கள் பொருளற்ற தன்மையினால் இவை உருவாக்குபவை என்ன என்பதும், எதன் பொருட்டு இது செய்யப்படுகிறது என்பதுமே இவற்றை கவிதையாகவும் சொற்குப்பைகளாகவும் ஆக்குகின்றன என்பதை உணர்ந்தேன். what is at stake என்பதே அதை செய்வது. //

என நேற்றைய பதிவில் ஏ வி மணிகண்டன் பகிர்ந்து கொண்ட திறப்பின் தருணத்தின் வேறொரு சித்திரம் இந்த பகுதயில் குந்தியின் பார்வையில் வருகிறது . எந்த பொருளும் அற்ற சொற்கள் .ஆனால் கவிதை ..என மனதுக்குள் வியக்கிறாள் . அவள் வியப்பது பாண்டு தனது மகன்களை கொஞ்சும் சொற்களை கண்டு .  பாண்டுவின் சொற்கள் கவிஞன் கைக்கொள்ளும் சொற்கள் கூட அல்ல ,குழந்தையை கொஞ்ச கைக்கொண்ட பிதற்றல் . அதுவே கவிதை என்கிறாள் குந்தி 

  வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்த திரைகள் சூழ்ந்த இருள் அறையில் இருந்து வெளியேறிய பாண்டு , வண்ண மயமான இமயமலை சாரல் இயற்க்கை விளையாட்டுக்களை கண்டு , அங்கே அந்த ஓவியங்கள் மத்தியில் வாழ்வதை விட ,இங்கே இந்த இயற்க்கை அன்னை மடியில் அவன் சாக விரும்பும் தருணம் .

பாண்டுதான் என் மகன் ,என் மகன் என பொங்குகிறானே அன்றி ,குந்திக்கு கர்ப்ப தானம் அளித்த ,சர்த்வானோ ,பலா ஹஸ்வரரோ பெரிதாக கொந்தளிக்க வில்லை .  இதுதான் வியாசரின் சிக்கல் . சரத்வானும் பலா ஹஸ்வர் வாழும் அதே மெய்ம்மை நோக்கிய  துறவு வாழ்வே வியாசரும் வாழ்கிறார் , அவர்கள் செய்வது போலவே அதே கர்ப்ப தானத்தை வியாசரும் செய்கிறார் , ஆனால் இவர்கள் கொண்ட நிலை பெயராமை வியாசரிடம் இல்லை . இத்தனை தத்தளிப்பு அவருக்கு  ஏன்?  ஏனெனில் வியாசரின் பாதை சொற்களின் பாதை . அதையே அவரது மகன் சுகர் ,வியாசருக்கு சுட்டி அவரை சொற்களை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார் .

அடுத்தடுத்த குழந்தை பிறப்புகள் ஆனாலும் குந்தி முலைப்பாலூட்டி நிறைவடைந்ததாக இந்த பகுதிகளில் பெரிய சித்திரங்கள் ஏதும் இல்லை . செந்நா வேங்கையில் கர்ணன் வசமிருந்து நகுல சகாதேவனை காக்க , அர்ஜுனன் சல்யர்வசம் பேசும் தருணம் சார்ந்த ஆழம் இந்த பகுதி வழியே துலங்குகிறது .

அனைத்துக்கும் மேலாக இன்றைய திசை தேர் வெள்ளம் நாவலில் .ஒவ்வொரு பாத்திரமும் இங்கே ,இதுதான் என் இடமா என ஒரு கணமேனும் நினைக்கும் அமானுடத் தருணம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஆழத்தை சுட்டி நிகழ்கிறது .இதன் முதல் விதை புதிய காடு பகுதியில்தான் விழுகிறது . பாண்டு செண்பக வனத்தில் ,இங்கே இதுதான் என் இடம் என முடிவு செய்யும் கணம் அது .


 
மற்றொரு நிறைவான கூடுகையும் நண்பர்களுடனான நாளும் இனிதே நிறைந்தது .

கடலூர் சீனு