பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
நான் வெண்முரசை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன். முதற்கனல் முதல் திசை தேர் வெள்ளத்தின் இன்றைய படைப்பு வரை, வெண்முரசில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் கூட வந்ததாக தெரியவில்லையே. அனைத்து தரப்பு வாழ்க்கையையும் தொட்டு காட்டும் வெண்முரசு அவர்களின் வாழ்க்கையில் பிறந்தநாள் கொண்டாட்டம் இருந்ததாகவோ, பிறந்தநாளை நினைவு வைத்து கோவிலுக்கு சென்றதாகவோ கூட எழுதப்பட வில்லை என்று நினைக்கிறன் (நான் சரியாக வாசிக்காமல் கூட இருந்திருக்கலாம்).
முந்தைய காலங்களில் நம்முடைய முன்னோர்கள், அரசர்கள் முதல் ஊழியர் குடுமபம் வரை தங்கள் பிறந்தநாளையோ அல்லது குழந்தைகள் பிறந்தநாளையோ எப்படி அணுகி இருப்பார்கள் என்று அறிய விழைகிறேன். என் தாய் தந்தையருக்கு அவர்களின் பிறந்தநாளே தெரியாது, தாத்தா பாட்டிக்கும் அவ்வாறே!. ஒருவேளை நாம் சமூகம் இப்படி தான் பிறந்தநாள் கொண்டாட்டம் அல்லது சிறிய வாழ்த்துக்கள் கூட இல்லாமல் வாழ்ந்து வந்ததோ, நாம் தான் இன்று வெளியில் இருந்து திணிக்கப்பட்ட இதை கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது!.
ஆனால் அப்படி இருக்க வழி இல்லை என்றும் இன்னொரு மனம் சொல்கிறது. நமது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் கூட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்திருக்கலாம், அது எப்படி இருந்திருக்கும் என்று "வெண்முரசு encyclopedia" வில் உள்ளதா?.
பாண்டியன் சதீஷ்குமார்
அன்புள்ள சதீஷ் நீங்கள் கேட்டபின்னர்தான் கவனித்தேன். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி மகாபாரதத்தில் உள்ளனவா என்று. நான் நினைவுகூரும் அளவுக்கு எங்கும் சொல்லப்படவில்லை. தனியாகத் தேடவேண்டும் ஆனால் அர்ஜுனன் பீமன் யுதிஷ்டிரன் பிறப்புகள் பெருநிகழ்வுகளாக சொல்லப்பட்டுள்ளன. ஆகவே அவை கொண்டாடப்பட்டிருக்கலாம்.
அரசர்களின் பிறந்தநாளை குடிகள் கொண்டாடும் வழக்கம் சோழர்காலம் முதல் இங்கும் இருந்துள்ளது ஆனால் மற்றவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கம் இல்லை. சொல்லப்போனால் பிறந்தநாள்என்ற கருத்துருவே இல்லை. நான் சின்னப்பையனாக இருக்கும்போதெல்லாம் பிறந்த நட்சத்திரம், பிறந்த மாதம்தான் கணக்கு.
என் வீட்டில் ஆவணிமாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த என் அண்ணனுக்கு [மூத்தவர்] மட்டும்தான் பிறந்தநாள் கொண்டாட்டம், அதாவது அருகிலுள்ள நாகதேவதை கோயிலுக்கு ஒரு மஞ்சள்சோறு, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு வருவோம்
ஜெ