அன்புள்ள ஜெ
ருக்மியின் ஆளுமையை
சுருக்கமாக ஆரம்பம் முதலே கொண்டுவந்திருக்கிறீர்கள். அவர் புண்படுத்தப்பட்டவர். ஆணவம்
கொண்டவர்கள் புண்படுத்தப்படும்போது அவர்களால் அதிலிருந்து விலகவே முடியவில்லை. அவர்கள்
அதையே நினைத்து அதிலேயே வாழ்ந்துவிடுகிறார்கள். ருக்மியின் அதுவரையிலான வாழ்க்கையே
ஒரு வஞ்சம்தான். அந்த வஞ்சத்துக்கு ஒரு பொருளும் கிடையாது. ஆகவே அவர் வாழ்க்கையே அர்த்தமில்லாதது.
ஆனால் உண்மையில் இந்தப்போரில் எந்த வஞ்சத்துக்கும் எந்த வாழ்க்கைக்கும் எந்த அர்த்தமும்
இல்லை. அந்த இடம் வரை கதை வந்துசேரும்போது ஒரு வெறுமையுணர்ச்சியைத்தான் அடையமுடிந்தது
ஆனால் ருக்மி தன்னுடைய
ஆணவத்தைக் கைவிடுவாரா என்பது கேள்விக்குறிதான். அவருடைய ஆழத்தில் அவர் கிருஷ்ணனை அறிவார்.
ஏனென்றால் அத்தனை ஆண்டுகள் கிருஷ்ணனைத் தவம்செய்திருக்கிறார். ஆனால் ஆணவம் அதைக்காண்பதற்கு
தடையாக அமையுமா? கிருஷ்ணனின் காலடியில் விழுந்து ருக்மி அழும் காட்சி நெகிச்சியானது.
ஆனால் ஆணவம் அத்தனை எளிதாகக்கரைந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது
சாரங்கன்