ஜெ
சுதசோமனின் காட்சி வழியாக வரும் பீமனின் கொடூரமான சித்திரம் பிரமிப்படையச் செய்கிறது.
சுதசோமனின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. தந்தையின் ஒரு தொடுகைக்காக ஏங்கிய மகன்.
தந்தை தொடும்போது அவன் உடல் நிறைவடைகிறது. தந்தையுடன் நின்று போர்புரிந்து அவரைக் காக்கிறான்.
ஆனால் அவர் சொந்தச் சகோதரர்களைக்கொல்லும்போது அவனுக்குள் ஏதோ ஒன்று உடைகிறது. அவனுடைய
மனம் தன் தந்தை தண்டிக்கப்படவேண்டும் என ஏங்குகிறது. ஆனால் அந்தத் தண்டனையை தன் மூதாதையர்
கொடுக்கவேண்டும் என நினைக்கிறது. பால்ஹிகர் தெய்வம்போல யானைமேல் தோன்றும்போது அவன்
அவர் தந்தையைக் கொன்றால் எல்லாம் சரியாக்விடும் என ஆசைப்படுகிறது.
அந்த ஆசையை அவனே
கூட மானசீகமாகச் சொல்லிக்கொள்ள மாட்டான். அவ்வாறே அது நிகழவேண்டும். நிகழ்ந்தே தீரும். அதுவே மானுடரை மண்ணில் இணைத்து நிறுத்தியிருக்கும் நெறியொன்றின் விளக்கம் என அந்த மனநிலையை அவனே உணர்கிறான். வெண்முரசில் தெளிவாக வகுத்துவிடமுடியாத
நுட்பமான ஓர் இடமாக இது உள்ளது. தந்தைக்கும் மகனுக்குமான உறவின் பலபடிகள் இந்நாவலில்
வந்துள்ளன. எல்லா உச்சங்களும் போரில் மேலும் உச்சமாக வெளிப்படுகின்றன. அதிலொன்று இந்த
இடம்
ராஜசேகர்