Tuesday, October 9, 2018

தாழும் படையாழி



இனிய ஜெயம் 

ஒரு போர் நிகழ்வுக்குள் அதன் போர் நெறிகள் மீது எத்தனை எத்தனை கணக்குகள் . போர் துவங்கும் முன்பு போர் மொத்தத்தில் எந்த நெறிப்படி நிகழவேண்டும் என வரையறை செய்யப்படுகிறது .ஆனால் தனிப்போரில் இன்னார் இன்னாருடன் இப்படித்தான் பொருத வேண்டும் எனும் வரையறை அத்தனை  துல்லியமாக வரையறை செய்ததாக தெரியவில்லை .

அபிமன்யு அசுரர் நெறியில் தனது சமர் நடவடிக்கையை மாற்றிக்கொண்டது எதிர் பாராதது என்றே பார்க்கப் படுகிறதே அன்றி நெறி மீறலாக பார்க்கப் படவில்லை . மாறாக பீஷ்மர் அபிமன்யுவை பின்னிருந்து தாக்கியயபடியே சமரை துவங்கியது போர் நெறி மீறல் என்றே அனைவராலும் உணரப்பட்டு விட்டது . எதிர்பாராததை செய்யும் அபிமன்யுவே அதிர்ச்சியுடன் பிதாமகரே என கூவி விடுகிறான் .

வித விதமான நிலைகில் இருந்து போர் சூழல் வர்ணிக்கப்படுகிறது .கூடாத்துள்ளிருந்து ஒலிகளாக ,பகலில் துயில முனையும் மருத்துவ பணியாளர்கள் காதுகள் வழியே , என  இப்படி இம்முறை சமர் அர்ஜுனன் காலடியில் அமர்ந்திருக்கும் கதனின் விழிகள் வழியே காட்சிப்படுத்தப் படுகிறது .   அர்ஜுனனின் அம்பும் பீஷ்மரின் அம்பும் சென்ற தினத்தில் உரையாடலை எங்கே நிருத்தினவோ அங்கிருந்தே துவங்குகிறது .

அறங்களை கைவிட்ட பீஷ்மரின் அம்பு ,அறங்களை கைவிடாத பார்த்தனின் கவசங்களை உடைத்து எறிகிறது.  மொத்த வெண் முரசில் முதன் முறையாக பிரபஞ்சமே நிலை பெயர்ந்தாலும் ,தன்னிலையில் இருந்து நிலை பெயரமாட்டான் எனும் நீலன் நிலை பெயருகிறான் . நெறிகளை கைவிட சொல்லி கொந்தளித்து கூவுகிறான் .  போரின் உச்ச விசையில் யார் அர்ஜுனன் ,யார் நீலன் என உளம் பகுக்க இயலா நிலையில் இருக்கிறான் கதன் . நிதர்சன உண்மையும் அதுதான்  என இத்தருணம் வழியே குருஷேத்ரம் அறிய வருகிறது . 

எண்ணியிரா கணத்தில் நீலன் முற்றிலும் பார்த்தனாக மாறி விடுகிறான் . 

பீஷ்மர் உதடுகளில் அப்படி ஒரு புன்னகை . அம்பையை அணையாத் தீயாக மாற்றிய அதே புன்னகை . ஆயுதத்தைக் கைவிட்டு புன்னகையுடன் நிற்கிறார் . 

அனைத்து அறங்களையும் கைவிட சொல்லும் நீலனால் கூட நிராயுத பாணியை கொல்லக்கூடாது எனும் நெறியை மீற முடியவில்லை .  பாத்தனின் கை காண்டீபம் மீரா இயலா நெறிகள் போலவே ,நீலனின் படையாழி மீற இயலா நெறி ஒன்றின் முன் தாழுகிறது.

விழிகளில் கண்ணீர் எழுத்தை மறைக்க மறைக்க மீண்டும் மீண்டும் அந்த தருணத்தை வாசித்தேன் .

ஆம் இங்கே நெறிகள் மீறப்படும் .நிராயுதபாணியை கொல்லும் நிலையும் வரும் ,யாரிவர் அன்று நீலன் இன்றைய நாளைக் காட்டிலும் பெரும் துயரை சந்திக்கக்கூடும் .


கடலூர் சீனு